54. பொருத்திய குரம்பை தன்னை - பாடல் 2
யாக்கை நிலையாமை என்ற தலைப்பில்
சவைதனைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற
இவை ஒரு பொருளுமல்ல இறைவனை ஏத்துமின்னோ
அவை புரம் மூன்றும் எய்து அடியவர்க்கு அருளிச் செய்த
சுவையினைத் துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே
விளக்கம்
சவை = பயனற்றது, மனைவி, மக்கள் மற்றுள்ள உறவினர்கள் கூட்டம். சலம் = சஞ்சலம், துன்பம். ஐம்புலன்கள் தரும் சிற்றின்பத்தை பெரிதாக மதித்து வாழும் வாழ்க்கையினை முதல் பாடலில் குறிப்பிட்ட அப்பர் பிரான், இந்த பாடலில் உடலின்பத்தை பெரிதாக கருதி குடும்பத்தை விரிவுபடுத்திக்கொண்டு வாழும் வாழ்க்கையினை குறிப்பிடுகின்றார். அவைபுரம் என்ற சொல்லினை புரமவை என்று மாற்றி படிக்க வேண்டும்.
Advertisement
நமக்கு பயன்படாத உறவினர்கள் கூட்டம் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் சொல்வது, நமக்கு கொண்டீச்சரத்து பாடல் (4.67.3) ஒன்றினை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில், நமது உடல் இறந்த பின்னர், உறவினர்கள் செய்வது என்ன என்று கூறுகின்றார். இரண்டு கால்களைக் கொடுத்து, எலும்புகளைப் பொருத்தி, உள்ளே விளங்கும் நரம்புகளால் உடல் முழுதும் இணையச் செய்து, தோலை மேலே போர்த்து, உள்ளே ரத்தத்தை நிரப்பி. தோலாகிய கூரையின் மேல் மயிர்களை நிரப்பி படைக்கப்பட்ட இந்த உடல், உயிர் பிரிந்த பின்னர் கூடியிருந்து கதறி அழும் உற்றார் உறவினர்களால், மண்ணினைத் தோண்டி புதைக்கப்பட்டு ஒளிக்கப்படுகின்றது. இவ்வாறு ஒளித்து வைக்கப்படும் உடலினை விட்டு பிரிந்த உயிர் மறுபடியும் வேறு ஒரு பிறவி எடுக்க நேரிடுமோ என்று நான் அஞ்சுகின்றேன். சிவபிரானே, நீதான் எனது அச்சத்தை தீர்த்து, பிறவாமை என்ற வரத்தை எனக்கு அருள வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.
கால் கொடுத்து எலும்பு மூட்டிக் கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்துத்
தோல் உடுத்து உதிரம் ஆட்டித் தொகு மயிர் மேய்ந்த கூரை
ஓலெடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன்
சேலுடை பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்து உளானே
திருமூலரும் யாக்கை நிலையாமை என்ற தலைப்பின் கீழ் உள்ள பாடல் ஒன்றினில், இறந்த உடலினை சுடுகாட்டிலிட்டு எரித்த பின்னர், தங்களது தீட்டு போவதற்காக நீராடிய பின்னர், இறந்தவரைப் பற்றிய நினைவுகளையும் மறந்துவிடுவார்கள் என்று கூறுகின்றார். காட்டினில் எரியும் உடலைப் பார்க்கும் எவருக்கும். அந்த தருணத்தில் வாழ்க்கை நிலையற்றது என்ற உணர்வு தோன்றினாலும், அந்த உணர்வு குளித்த பின்னர் அகன்றுவிடும் என்று கூறுவதாகவும் பொருள்கொள்வதும் பொருத்தம். சூரை = ஒரு வகை முட்செடி.
ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு
சூரையம் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே
பொழிப்புரை
இல்லற வாழ்வில் ஈடுபட்டு, குடும்பத்தைப் பெருக்குவதே நோக்கமாகக் கொண்டு, பலவிதமான துன்பங்களில் ஆழ்ந்து வாழும் மாந்தர்களே, இந்த வாழ்க்கை நிலையான வாழ்க்கை அல்ல; நம்மைச் சுற்றியிருக்கும், மனைவி, மக்கள் சுற்றத்தார் ஆகிய கூட்டமும் எப்போதும் நம்முடன் இருக்கப்போவதுமில்லை. எனவே, நிலையான பொருளாகிய இறைவனை நீங்கள் புகழ்ந்து பாடுவீர்களாக. வானில் பறந்து கொண்டு அனைவர்க்கும் இடர்கள் செய்துவந்த மூன்று கோட்டைகளையும் எரித்து, தனது அடியவர்களின் துயர் தீர்த்தருளிய பெருமானை, அடியார்களுக்கு இனியவனாகத் திகழ்பவனை, துருத்தி தலத்தில் உறைபவனை, அவனது தொண்டனாகிய நான் கண்டேன். நீங்களும் அவனை எப்போதும் நினைத்து அவனது திருக்கோலத்தைக் காண்பீர்களாக.