54. பொருத்திய குரம்பை தன்னை - பாடல் 3
துருத்தி என்ற சொல்லுக்கு, விரிந்து பரந்து
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்துமின்னோ
கன்னியை ஒரு பால் வைத்துக் கங்கையைச் சடையுள்
வைத்துப்
பொன்னியின் நடுவு தன்னுள் பூம்புனல் பொலிந்து
தோன்றும்
துன்னிய துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே
விளக்கம்
இந்த பாடலில் பொன்னியின் நடுவு தன்னுள் என்று அப்பர் பிரான் பாடுவதால், திருக்கோயிலைச் சுற்றி இருமருங்கும் காவிரி நதி பிரிந்து ஓடியிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. துருத்தி என்ற சொல்லுக்கு, விரிந்து பரந்து செல்லும் ஆற்றின் நடுவே காணப்படும் திட்டு என்று பொருள். ஆனால் இப்போது கோயிலுக்கு வடக்கே காவிரி நதி சற்று தள்ளி ஓடுகின்றது.
கோயிலில் உள்ள பரந்த மண்டபங்கள், மற்றும் படித்துறைக்கு நம்மை அழைத்துச் செல்லும் படிகள் இவற்றை காணும்போது, அண்மையில், கடந்த நூற்றாண்டு காலத்தில், காவிரி நதி திருக்கோயிலை ஓட்டிச் சென்றிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. எனவே மூவர் பெருமானர்களின் காலத்தில், திருக்கோயில் நதியின் நடுவே இருந்திருக்கக்கூடும் என்று ஊகிக்கத் தோன்றுகின்றது.
பொன்னியின் நடுவு தன்னுள் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது நமக்கு தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலை பாசுரத்தின் ஒரு பாடலை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில், கங்கையை விடவும் புனிதமான காவிரி நதியின் நடுவில் அமைந்திருக்கும் திருவரங்கம் என்று ஆழ்வார் கூறுகின்றார். பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் கோலத்தை மறந்து தன்னால் உயிர்வாழ முடியாது என்று ஆழ்வார் இந்த பாடலில் கூறுகின்றார்.
Advertisement
கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பட்டுப்
பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்வேன் ஏழையேன் ஏழையேனே
பொழிப்புரை
எல்லா உயிர்களுக்கும் தாயாக இருந்தாலும், கன்னியாகத் திகழும் பார்வதி தேவியைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்து, கங்கை நதியினைத் தனது சடையினில் வைத்து உலவும் பெருமான், அழகிய பொன்னி நதியின் நடுவில் தோன்றும் திட்டில் அமைந்துள்ள, வளம் பொருந்திய துருத்தித் தலத்து திருக்கோயிலில் உறைகின்றான். அந்த இறைவனை நீங்கள் எப்போதும் உங்களது மனதினில் நினைத்தவாறு, அவனைப் புகழ்ந்து வழிபடுவீர்களாக. அவனை இடைவிடாது நினைத்து வழிபட்ட யான், அவனது திருக்கோலத்தைக் (பார்வதி அன்னையுடனும், கங்கை நங்கையுடனும் தோன்றும் கோலம்) அடியேன் கண்டவாறு, நீங்களும் மகிழ்ந்து காண்பீர்களாக.