54. பொருத்திய குரம்பை தன்னை - பாடல் 5
நஞ்சின் தன்மையால் எந்த கேடும்
உடல் தனைக் கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கெல்லாம்
இடர் தனைக் கழிய வேண்டில் இறைவனை ஏத்துமின்னோ
கடல் நிறம் நஞ்சம் உண்டு காண்பரிதாகி நின்ற
சுடர்தனைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே
விளக்கம்
உடல் தனைக் கழிக்கலுற்ற = ஒரு நாள் உடலை விட்டு விலகும் தன்மை கொண்ட உயிர். முந்தைய பிறவிகளில் ஈட்டிய வினைகளின் பயனாக பலவகையான துன்பத்திலும் ஆழும் உடலை விடுத்து விடுதலை அடைய விரும்பவதுதான் ஆன்மாவின் உண்மையான விருப்பம். ஆன்மாவின் இந்த உண்மையான விருப்பத்தை புரிந்து கொண்டவர்களுக்கு அறிவுரை கூறும் முறையில் அமைந்த பாடல் இது. சென்ற பாடலில் இந்த பிறவியில் நாம் அடையும் துயரங்களிலிருந்து விடுதலை பெற இறைவனை வழிபடுவீர்கள் என்று அறிவுரை கூறிய அப்பர் பிரான், இனிமேல் பிறவியே எடுக்காமல் இருப்பதற்கான வழிமுறையை இங்கே கூறுகின்றார். காண்பரிதாகி நின்ற சோதி என்று இறைவனை, அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். அவனது அருள் இல்லையேல் அவனை நாம் காண முடியாது என்ற கருத்தினை உணர்த்தும்வண்ணம், எவரும் தங்களது சொந்த முயற்சியால் காண முடியாதவன் இறைவன் என்று இங்கே கூறப்படுகின்றது.
Advertisement
பொழிப்புரை
உடலுடன் தொடர்பு கொண்டுள்ள தன்மையை, நிலையாக நீக்க விரும்பும் உலகத்து உயிர்களே உங்களுக்கு நான் கூறும் அறிவுரையை கேட்பீர்களாக. உங்களது பிறவிப் பிணியினை அடியோடு நீக்க உங்களுக்கு விருப்பம் உண்டென்றால், பெருமானைப் புகழ்ந்து நீங்கள் அனைவரும் வணங்குவீர்களாக. கருமையான நிறத்தில் திரண்டெழுந்த கடல் நஞ்சினை உண்ட பின்னரும், அந்த நஞ்சின் தன்மையால் எந்த கேடும் அடையாமல் இருந்தவரும், தங்களது முயற்சியால் மட்டுமே இறைவனை கண்டுவிடலாம் என்று எண்ணும் காண்பதற்கு அரியவனாக இருப்பவனும் ஆகிய சிவபெருமானை, ஞானச் சுடராக விளங்குபவனை அடியேன் துருத்தித் தலத்தில் கண்டேன். நீங்களும் அவனைப் பணிந்து வழிபாட்டு அவனைக் காண்பீர்களாக.