54. பொருத்திய குரம்பை தன்னை - பாடல் 6
உயிர்கள் தப்பித்துச் செல்லாதவாறு
அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினைமின் நீர்கள்
பொள்ளல் இக்காயம் தன்னுள் புண்டரீகத்து இருந்த
வள்ளலை வானவர்க்கும் காண்பரிதாகி நின்ற
துள்ளலைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே
விளக்கம்
அள்ளல் = சேறு, பிறவிச்சேறு. சேறு தன்னில் அழுந்திய பொருளை வெளியேறவிடாமல் தடுப்பது போன்று, பிறப்பு எடுத்த உயிர்கள், தனது வினைப் பெருக்கத்தினால் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டிய நிலையில் உள்ள தன்மையினை உணர்த்துவதற்காக பிறவியினை சேறு என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். பொள்ளல் = உள்ளே ஏதுமற்ற ஓட்டை. புண்டரீகம் = இதயத் தாமரை. துள்ளல் = பிடிக்க முடியாதபடி தப்பித்தவன். துள்ளிச் செல்லும் குணமுடைய எருதினை வாகனமாகக் கொண்டவன்.
Advertisement
பொழிப்புரை
தன்னுள் மாட்டியவர்களை வெளியேறாதவாறு தடுத்து, வெளியேற முயற்சி செய்பவர்களை உள்ளே இழுக்கும் சேற்றினைப் போன்று, மனிதப் பிறப்பு எடுத்த உயிர்கள் தப்பித்துச் செல்லாதவாறு, தன்னுள் அழுத்தும் தன்மை வாய்ந்த பிறவிச் சேற்றினைக் கடந்து வெளியே வர வேண்டும் என்று விரும்பும் மனிதர்களே, உங்களது விருப்பம் நிறைவேறும் வழியை நான் சொல்லுகின்றேன் கேட்பீர்களாக. பல ஓட்டைகள் நிறைந்த உங்களது உடலில் உள்ள இதயத் தாமரையில் வீற்றிருக்கும் வள்ளலை, நீங்கள் எப்போதும் நினைப்பீர்களாக; அவ்வாறு நினைத்தமையால், வானவர்களும் தங்களது முயற்சியால் காண்பதற்கு அரியவனாகத் திகழும் பெருமானை, துள்ளிச்செல்லும் குணத்தினை உடைய எருதினை வாகனமாக உடைய பெருமானை, அடியேன் காணும் பேறு பெற்றேன். நீங்களும் பெருமானை நினைத்து அந்த பேற்றினைப் பெறுவீர்களாக.