முகப்பு
தினம் ஒரு தேவாரம்

54. பொருத்திய குரம்பை தன்னை - பாடல் 7

தனது உடலின் ஒரு பாதியை

Updated On : 25 மார்ச், 2017 at 4:41 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:38 PM

பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்தச்
சாதியாம் சதுர்முகனும் சக்கரத்தானும் காணாச்
சோதியைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே
 

விளக்கம்

சாதி = பிறப்பு எடுக்கும் தன்மை. பிறப்பு எடுக்கும் தன்மை என்றவுடன், கவி காளமேகம் பாடிய, நகைச்சுவை நிறைந்த பாடல் ஒன்று நமது நினைவுக்கு வருகின்றது. திருக்கண்ணபுரம் கோயிலுக்குள் செல்ல முயன்ற காளமேக கவிராயர், திருமால் குறித்து அவர் பாடுவதில்லை என்பதால் தடுக்கப்பட்டார். கண்ணபுரத்து மாலே, நீ கடவுளை விடவும் அதிகமான சிறப்பு உடையவன் என்று தொடங்கும் இந்த பாடலின் முடிவில், சிவபெருமான் பிறப்பு எடுக்காதவன், அதனால் பத்து பிறப்புகள் எடுத்த நீ உயர்ந்தவன் என்றும், எண்ணிக்கையில் அடங்காத பிறப்புகளை எடுத்த நான், உன்னிலும் பெரியவன் என்றும் நகைச்சுவையாக கூறுகின்றார்.

Advertisement

கண்ணபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்
உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள்
உன் பிறப்போ பத்தாம் உயர்சிவனுக்கு ஒன்றில்லை
என் பிறப்பு எண்ணத் தொலையாதே

பிரமனும் திருமாலும் கணக்கற்ற பிறவிகள் எடுத்தனர் என்றும், இந்திரன் எடுத்த பிறவிகளை எண்ணினால், கங்கை நதிக்கரையில் உள்ள மணலின் எண்ணிக்கையைவிடவும் அதிகமாக இருக்கும் என்றும், பெருமான் ஒருவன் தான் முடிவு என்பது இல்லாமல் எப்போதும் இருப்பவன் என்று கூறும் அப்பர் பிரானின் பாடலை (5.100) நினைவுகூர்வது இங்கே பொருத்தமாக இருக்கும். ஏறு கங்கை = பொங்கி வரும் கங்கை நதி; பிரமனின் ஆயுட்காலத்தை விடவும், திருமாலின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் பிரமன் எடுத்த பிறவிகளின் எண்ணிக்கை அதிகமாக, இந்த பாடலில் சொல்லப்படுகின்றது. நூறு பிரமனின் வாழ்நாள், ஒரு திருமாலின் வாழ்நாளுக்கு சமம் என்று கூறுவார்கள்.

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே

சதுர்முகனும் சக்கரத்தானும் காணாத பெருமானை, தான் கண்டதாக கூறும் அப்பர் பிரானின் தொனியில் ஒரு இறுமாப்பு தொனிப்பதை நாம் உணரலாம். இத்தகைய இறுமாப்பு தொனிக்கும் பாடலை நாம் அங்கமாலை பதிகத்திலும் (4.09) நாம் காணலாம். இறைவனின் திருவடிகளை காண முடியாமல் பலர் நிற்க, அந்த திருவடிகளைச் சென்று அடையும் எவருக்கும் இறுமாப்பினை உண்டாக்கும் அல்லவா. பெருமானைத் தவிர தனக்கு பற்றுக்கோடு வேறு ஏதும் இல்லை என்ற கொள்கையுடன் வாழ்ந்த வந்த அப்பர் பெருமானுக்கு இருந்த நம்பிக்கை, தான் இறைவனது திருவடிகளைச் சென்று அடிவோம் என்ற நம்பிக்கை நியாயமானது தானே.

இறுமாந்து இருப்பன் கொலோ - ஈசன்
பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்றங்கு
இறுமாந்து இருப்பன் கொலோ

தான் பெறவிருக்கும் பேறு எத்தகைய உயர்ந்த பேறு என்பதை உணர்த்தி, தனது இறுமாப்பின் காரணத்தை இதே பதிகத்தின் அடுத்த பாடலில் அப்பர் பிரான் வெளிப்படுத்தும் நேர்த்தி மிகவும் ரசிக்கத்தக்கது.

தேடிக் கண்டு கொண்டேன் திரு
மாலும் நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்.    

பிரமனும் திருமாலும், தாங்கள் ஆட்கொள்ளப்படாததால் ஏமாறி நிற்க, தன்னை இறைவன் ஆட்கொண்டதால், தான் இறுமாப்பு அடைந்ததாக மணிவாசகர், திருவாசகம் பூவல்லிப் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். தகுதி ஏதும் இல்லாத தன்னை இறைவன் ஆட்கொண்ட தன்மையை, நாயினை இருக்கையில் அமரவைத்த செய்கைக்கு மணிவாசகர் இங்கே ஒப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்தும், சிவபிரான் பேரில் காதல் கொண்ட தலைவி, தும்பியை அழைத்து தனது எண்ணங்களை சிவபிரானிடம் சென்று சொல்லுமாறு வேண்டுவதாக அமைந்துள்ளன. தவிசு = இருக்கை, ஆசனம்.

பூமேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று
ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க
நாய் மேல் தவிசிட்டு நன்றாப் பொருட்படுத்த
தீமேனியானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

பிரமனும், திருமாலும் தேடிக் காணமுடியாத சிவபிரானைத் தனது உள்ளத்தின் உள்ளே இருப்பதைத் தான் கண்டுகொண்டதாக அப்பர் பிரான் கூறுவது போல் மணிவாசகர் கூறும் பாடலொன்று அன்னைப்பத்து பதிகத்தில் காணப்படுகின்றது. சிவபிரானின் மீது தீராத காதல் கொண்ட தலைவியின் எண்ணங்களை, அவளது தோழி, தலைவியின் தாய்க்கு வெளிப்படுத்துவதாக அமைந்த பாடல்களைக் கொண்ட பதிகம். அருளாளர்கள், தங்களை இறைவன் மீது காதல் கொண்ட பெண்ணாக உருவகித்துக்கொண்டு, தங்களது எண்ணங்களை, தனது வாய்மொழியாகவோ அல்லது மற்றவர்கள் மூலமாகவோ வெளிப்படுத்துவது, பக்தி இலக்கியங்களின் மரபு. இந்த பாடலில் மாணிக்க வாசகர், திருமாலும் பிரமனும் காணமுடியாத சிவபிரான், தனது நெஞ்சத்தில் இருப்பதகாவும், இது ஒரு அதிசயம் என்றும் கூறுகின்றார். உன்னுதல் = நினைத்தல். உத்தரகோச மங்கை என்ற தலம், இங்கே உத்தர மங்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உன்னற்கு அறிய சீர் உத்தர மங்கையர்
மன்னுவது என் நெஞ்சில் அன்னே என்னும்
மன்னுவது என் நெஞ்சில் மால் அயன் காண்கிலார்
என்ன அதிசயம் அன்னே என்னும்

இந்த பாடலில், உமையாள் தன்னை பாகமாக வைத்த பண்பன் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு, சுந்தரரின் கழுமலம் பதிகத்தின் முதல் பாடலை (7.58) நினைவூட்டும். ஆணும் பெண்ணும் சமம் என்பதை முதன்முதலாக எடுத்துக்காட்டியவன் சிவபெருமான். ஒவ்வொருவரும் தங்களின் மனைவியை மதித்து நடத்த வேண்டும் என்பதை பெருமான் உலகுக்கு உணர்த்துகின்றார் என்ற பொருளில், மாதினை மதித்து அங்கோர் பால் கொண்ட மணி என்று பெருமானை சுந்தரர் பாடும் பாடல்.

சாதலும் பிறப்பும் தவிர்த்து எனை வகுத்துத் தன்னருள் தந்த
            எம் தலைவனை மலையின்
மாதினை மதித்து அங்கொர் பால் கொண்ட மணியை
    வருபுனல் சடையிடை வைத்த எம்மானை
ஏதில் என் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை எண்வகை
           ஒருவனை எங்கள் பிரானைக்
காதில் வெண் குழையானைக் கடல் கொள மிதந்த கழுமல
         வளநகர்க் கண்டு கொண்டேனே

கயிலாயத்தில், மலர் பறிப்பதற்காக நந்தவனம் வந்த பார்வதி தேவியின் தோழியர்கள் கமலினி மற்றும் அனிந்திதை ஆகியோரின் அழகினால் சற்றே தடுமாற்றம் அடைந்த சுந்தரரை, மண்ணுலகம் சென்று சில நாட்கள் இன்பம் துய்த்த பின்னர் கயிலாயம் வருக என்று சிவபெருமான் பணித்தபோது, உலக மாயையில் சென்று சிக்கிக்கொள்ள மிகவும் அஞ்சுகின்றேன் என்று சுந்தரர் இறைவனிடம் இறைஞ்சினார், அப்போது, இறைவன் உம்மை தகுந்த நேரத்தில் ஆட்கொண்டு நாம் மறுபடியும் அழைத்துக்கொள்வோம் என்று கூறிய மொழியினை நினைவு கூறும் முகமாக, சாதலும் பிறப்பும் தவிர்த்தவனாக தன்னை தோற்றுவித்து அருள் செய்த பெருமான் என்று இந்த பாடலில் முதல் அடியில் சுந்தரர் குறிப்பிடுகின்றார். ஏதிலன் = அந்நியன். தன்னை அந்நியமாகக் கருதாமல், தனது மனத்துடன் ஒன்றறக் கலந்தவன் சிவபெருமான் என்று குறிப்பிடுகின்றார். நன்றாக காய்ந்த இரும்பின் மேல், தண்ணீர்த் துளிகள் தெளித்தால், அந்த நீரினை உட்கொண்டு ஆவியாக மாற்றும் தன்மையை, உவமையாக குறிப்பிட்டு, இறைவன் தனது மனதுடன் கலந்த தன்மையை சுந்தரர் மிகவும் அழகாக விளக்குகின்றார்.

பொழிப்புரை

தனது உடலின் ஒரு பாதியை உமையம்மைக்குத் தந்த பண்பன் என்றும், வேதங்களை அருளியவன் என்றும் சொல்லி தேவர்களால் விரும்பி புகழப்படுபவன் சிவபெருமான். பல பிறப்புகள் எடுக்கும் தன்மையை உடைய திருமாலும் பிரமனும் காண முடியாத சோதியை, துருத்தி தலத்தில் உறையும் பெருமானை அடியேன் காணும் பேற்றினைப் பெற்றேன். அடியார்களாகிய நீங்களும் எப்போதும் பெருமானை நினத்து வழிபட்டு, இறைவனைக் காண்டும் பேற்றினை அடைவீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.