72. பாசம் ஒன்றிலராயினும் - பாடல் 7
வினைகளை நீக்கும்
பாடல் 7:
விண்ணுளாரும் விரும்பப் படுபவர்
மண்ணுளாரும் மதிக்கப் படுபவர்
எண்ணினார் பொழில் சூழ் இடைமருதினை
நண்ணினாரை நண்ணா வினை நாசமே
விளக்கம்:
இந்த பாடலில் விண்ணுலகத்தில் உள்ள தேவர்களும் மண்ணுலக மாந்தர்களும் பெரிதும் இறைவனை விரும்புவதாக அப்பர் பிரான் கூறுகின்றார். இவ்வாறு அவர்கள் விரும்புவதற்கு காரணம், முந்தைய பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள, வினைகளை நீக்கும் வல்லமை தான். எண்ணினார்=எனது எண்ணத்தில் இடம் கொண்ட இறைவன்;
பொழிப்புரை:
விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள், பெருமான் தங்களுக்குச் செய்துள்ள நன்மைகளை நன்கு அறிந்தவர்கள். ஆதலால் பெருமானை மிகவும் விரும்புகின்றார்கள். மண்ணுலகத்தில் உள்ள மாந்தர்கள், இறைவன் தங்களுக்கு செய்யும் நன்மைகளை உணர்ந்த பின்னர் அவரது பெருமையினை உணர்ந்து அவரை மதிக்கின்றார்கள். இவ்வாறு பலராலும் விரும்பப் படுபவரும், எனது எண்ணங்களில் நிறைந்து இருப்பவரும், சோலைகள் சூழ்ந்த இடைமருது தலத்தில் உறைபவரும் ஆகிய இறைவனை அணுகி அவரை வழிபடும் அடியார்களை வினைகள் நெருங்கா. அவை முற்றிலும் நாசமாகும்.
Advertisement