73. சூலப்படை உடையார் தாமே - பாடல் 1
ஊழ்வினையும், மேல்வினையும்
முன்னுரை:
இடைமருது தலத்தில் பல நாட்கள் தங்கி, அப்பர் பெருமான் பாடிய பதிகங்களில் நமக்கு இரண்டு திருத்தாண்டகப் பதிகங்கள் கிடைத்துள்ளன. இடைமருது மேவிய ஈசன் என்றும் இடைமருது இடம் கொண்ட பெருமான் என்று அனைத்துப் பாடல்களையும் இந்த இரண்டு தாண்டகப் பதிகங்களில் அப்பர் பிரான் முடிக்கின்றார். அத்தகைய திருத்தாண்டகப் பதிகத்தில் ஒன்றினை நாம் இங்கே காண்போம்.
பாடல் 1:
சூலப்படை உடையார் தாமே போலும்
சுடர்த் திங்கள் கண்ணி உடையார் போலும்
மாலை மகிழ்ந்து ஒரு பால் வைத்தார் போலும்
மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும்
வேலைக் கடல் நஞ்சம் உண்டார் போலும்
மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
ஏலக் கமழ் குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈசனாரே
விளக்கம்:
கண்ணி = தலையில் அணியும் மாலை. மாலை = திருமாலை. வேலை = கடல். வினைகள் மூன்று வகைப்படும். தொல்வினை, ஊழ்வினை மற்றும் மேல்வினை என்பனவே அந்த மூன்று பிரிவுகள். பழைய பல பிறவிகளில் ஈட்டிய மொத்த வினைத்தொகுதி தொல்வினை ஆகும். அந்த தொல்வினையின் ஒரு பகுதி ஊழ்வினையாக, இந்த பிறவியில் அனுபவித்து கழிப்பதற்காக ஒதுக்கப்படுகின்றது. அந்த வினையின் விளைவுகளாக வரும் இன்ப துன்பங்களை நாம் எதிர்கொள்ளும் முறைகள் மேலும் பல வினைகளுக்கு வழிவகுத்து, நமது வினைகளை பெருக்குகின்றன. இவ்வாறு நமது வினைகளை மேலும் மேலும் பெருக்கிக் கொள்வதை தடுக்கும் வல்லமை, இறைவனின் கருணையால் தான் நமக்கு ஏற்படும். அந்த பக்குவ நிலை, விருப்பு வெறுப்பு இல்லாமல் இன்ப துன்பங்களை எதிர் கொள்ளும் பக்குவம், இருவினைகளையும் ஒன்றாக எதிர்கொள்ளும் பக்குவம் வந்த பின்னர், பக்குவம் அடைந்த இந்த உயிர் இனிமேல் வினைகளை அனுபவிப்பதால் நிலை தடுமாறாது என்பதை உணரும் இறைவன், மொத்த வினைகளையும் அகற்றி கழித்து விடுகின்றான். இவ்வாறு அவன் செய்யும் உதவியே, மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு வினைகளை முற்றிலும் தீர்க்கும் வல்லமை, சிவபெருமான் ஒருவனுக்கே உண்டு என்பதால், மற்றவர்களிடமிருந்து மாறுபட்டுள்ள அவனை விகிர்தன் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார் (விகிர்தன்=மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவன்).
தந்திரம்=செய்யும் முறைகள்: வேதங்களில் வேள்விகள் முதலான சடங்குகள் செய்யும் போது சொல்லப்பட வேண்டிய மந்திரங்கள் தவிர, அந்த மந்திரங்கள் சொல்லப்படும்போது செய்ய வேண்டிய வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளன. இதனையே மந்திரமும் தந்திரமும் ஆனார் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். வேதங்களை மந்திரம் எனவும் சிவ ஆகமங்களை தந்திரம் என்றும் சொல்வதுண்டு. இந்த பொருளை உள்ளடக்கி, சிவபெருமான் மந்திரமாகவும் தந்திரமாகவும் உள்ளான் என்பதை, மந்திரத்தான் தந்திரத்தான் என்று சம்பந்தர் செங்காட்டங்குடி பதிகத்தின் பாடலில் (1.61.4) கூறுகின்றார். வரந்தை, கிரந்தை என்பன வைப்புத் தலங்கள்; சோபுரம் நடுநாட்டுத் தலம். சிரந்தை=உடுக்கை; கரந்தை என்பது பூண்டு வகையைச் சார்ந்த நறுமணம் உடைய மலர்.
வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான்
தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான்
கையதோர்
சிரந்தையான் செங்காட்டங்குடியான் செஞ்சடை
சேரும்
கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச்சரத்தானே
பாண்டிய மன்னன் வெப்பு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த போது, மன்னனது உடலின் இடது பாகத்தை, தங்களுக்குத் தெரிந்த மந்திரங்களை சொல்லியவாறு மயிற்பீலியால் சமணர்கள் வருட, திருஞானசம்பந்தர், மந்திரமாவது நீறு என்று தொடங்கும் பதிகத்தினை பாடியவாறு மன்னனது உடலின் வலது பாகத்தில் திருநீற்றினை தடவினார். சிவபெருமான் பூசிக் கொள்ளும் திருநீறு வேத மந்திரங்களாகவும், சைவ ஆகமங்களாகவும் விளங்கும் நிலையினை இந்த பதிகத்தின் முதல் பாடலில் (2.66.1) சம்பந்தப் பெருமான் கூறுகின்றார். திருநீறு மந்திரமாக மாறி, பாண்டிய மன்னனின் வெப்பு நோய் தீர்க்கப்பட்டு, மன்னன் தனது மனம் மாறி சைவத்தைத் தழுவியது வரலாறு.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர்வாய் உமை பங்கன் திருவாலவாயான்
திருநீறே
தந்திரம் என்ற சொல்லுக்கு செய்முறைகள் என்று பொருள் கொண்டு, சமணர்கள் முயற்சி செய்த மந்திரங்களும் தந்திரங்களும் அளிக்காத பலன்களை அருளும் வல்லமை படைத்தது திருநீறு என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. பெருமானின் திருவடிகள் மந்திரமும் தந்திரமும் ஆய திருவடிகள் என்று அப்பர் பிரான் கூறுவதை நாம் திருவடித் தாண்டகத்தின் பாடல் ஒன்றினில் (6.6.8) காணலாம்
நறுமலராய் நாறும் மலர்ச் சேவடி நடுவாய் உலக
நாடாயவடி
செறிகதிரும் திங்களுமாய் நின்றவடி தீத்திரளாய் உள்ளே
நிகழ்ந்தவடி
மறுமதியை மாசு கழுவும் அடி மந்திரமும் தந்திரமும்
ஆயவடி
செறிகெடில நாடர் பெருமானடி திருவீரட்டனத்து எம்
செல்வனடி
இதே குறிப்பு அப்பர் பிரான் அருளிய கயிலாயத் திருத்தாண்டகத்தின் ஒரு பாடலிலும் (6.57.5) காணப்படுகின்றது.
முன்னியாய் நின்ற முதல்வா போற்றி
மூவாத மேனி உடையாய் போற்றி
என்னியாய் எந்தை பிரானே போற்றி
ஏழின் இசையே உகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
ஞானசம்பந்தர் மந்திரத்தான் தந்திரத்தான் என்று மேலே குறிப்பிட்ட பாடலில் பாடியது போன்று, அப்பர் பிரான் மந்திரன் தந்திரன் என்று குறிப்பிடும் பாடல் நாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலாகும் (6.66.1).
தாயவனை வானோர்க்கும் ஏனோருக்கும்
தலையவனை மலையவனை உலகமெல்லாம்
ஆயவனைச் சேயவனை அணியான் தன்னை
அழலவனை நிழலவனை அறியவொண்ணா
மாயவனை மறையவனை மறையோர் தங்கள்
மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற
தீ அவனைத் திருநாகேச்சரத்து உளானை சேராதார்
நன்னெறிக் கண் சேராதாரே
பொழிப்புரை:
சூலப்படையினை உடையவரும், சுடராக ஒளி வீசும் சந்திரனைத் தனது சடையில் மாலையாக அணிந்தவரும், திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டவரும், மந்திரங்களாகவும் அந்த மந்திரங்களின் பயனைப் பெறுவதற்கு வழிவகுக்கும் செயல்களாகவும் அமைந்தவரும், கடலில் தோன்றிய விடத்தினை உண்டவரும், ஊழ்வினையை அனுபவிக்கும் உயிர்கள் தாங்கள் ஏற்றிக்கொள்ளும் ஆகாமிய வினையைத் தீர்ப்பவரும், ஏனைய தெய்வங்களும் தேவர்களும் செய்ய முடியாத செய்யும் வல்லமை வாய்ந்த விகிர்தரும், நறுமணம் கமழும் கூந்தலை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவரும் ஆகிய சிவபெருமான் இடைமருது தலத்தில் விருப்பத்துடன் அமர்ந்துள்ளார்.
Advertisement