73. சூலப்படை உடையார் தாமே - பாடல் 2
கார்க்காலத்தில் பூக்கும்
பாடல் 2:
காரார் கமழ் கொன்றைக் கண்ணி போலும்
காரானை ஈர் உரிவை போர்த்தார் போலும்
பாரார் பரவப் படுவார் போலும்
பத்துப் பல்லூழி பறந்தார் போலும்
சீரால் வணங்கப் படுவார் போலும் திசை
அனைத்துமாய் மற்றும் ஆனார் போலும்
ஏரார் கமழ் குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈசனாரே
விளக்கம்:
பத்து = மிகவும் அதிகமான எண்ணிக்கை என்ற பொருளில் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது
பொழிப்புரை:
கார்க்காலத்தில் மிகுதியாக பூக்கும் கொன்றை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவரும், கரிய நிறத்தை உடைய யானையின் உதிரப்பசுமை கெடாத தோலினைத் தனது உடலின் மீது போர்த்தவரும், உலகத்தவர் பலராலும் புகழப்படுபவரும், பல ஊழிகளைக் கடந்தவரும், தனது (பெருமானின்) புகழினை உணர்ந்த அடியார்கள் பலராலும் வணங்கப் படுவாரும், எட்டு திசைகளாகவும் அந்த எட்டு திசைக்குள்ளே அடங்கும் அனைத்துப் பொருட்களாகவும், நறுமணம் கமழும் அழகிய கூந்தலை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் உடையவரும் ஆகிய சிவபெருமான் இடைமருது தலத்தில் விருப்பத்துடன் அமர்ந்துள்ளார்.
Advertisement