73. சூலப்படை உடையார் தாமே - பாடல் 4
சிவபெருமானை புறக்கணித்து
பாடல் 4:
திண்குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தித்
திசை வணங்கச் சேவடியை வைத்தார் போலும்
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி
வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும்
பண்குணத்தார் பாடலோடு ஆடல் ஓவாப்
பரங்குன்றம் மேய பரமர் போலும்
எண்குணத்தார் எண்ணாயிரவர் போலும்
இடைமருது மேவிய ஈசனாரே
விளக்கம்:
திண்குணம் = வலிமைக் குணம். நூறி = அழித்து. வியன் = அகன்ற. இந்திரன் ஒருமுறை சிவபெருமானை புறக்கணித்து வேள்வி செய்த தருணத்தில் அந்த வேள்வியை சிவபெருமான் அழிப்பதற்காக சென்ற போது, திருமால் மேகத்தின் வடிவினைக் கொண்டு பெருமானைத் தாங்கினார் என்பது புராண வரலாறு. திருமால் மேக வடிவினனாய், பெருமானைத் தாங்கிச் சென்ற வரலாறு திருவிசைப்பா பாடல் ஒன்றிலும் கூறப்படுகின்றது.
ஏகநாயகனை இமையவர்க்கு அரசை என்னுயிர்க்கு
அமுதினை எதிர் இல்
போக நாயகனைப் புயல்வணற்கு அருளிப் பொன்
நெடும் சிவிகையா ஊர்ந்த
மேக நாயகனை மிகுதிருவீழி மிழலை விண்ணிழி
செழுங்கோயில்
யோக நாயகனை அன்றி மற்றொன்றும் உண்டென
உணர்கிலேன் யானே
திண்குணத்தார் என்பதற்கு வலிமையான மனம் உடையவர் என்று பொருள் கொண்டு, பெருமானை உணர்த்தும் அடைமொழியாக கொண்டு பொருள் கூறுவதும் பொருத்தமே. சலனம் அடையாமல் உறுதியான நிலையில் நிற்கும் வல்லமை பெற்றவன் சிவபெருமான் என்று இந்த தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது.
பொழிப்புரை:
பிற உயிர்களை அடக்கி ஆட்கொள்ளும் வல்லமை படைத்த தேவர்கள் அனைவரும், தான் இருக்கும் திசை நோக்கித் தனது திருவடிகளை வணங்கச் செய்பவர் சிவபெருமான் ஆவார். ஒருமுறை இந்திரன் சிவபெருமானை புறக்கணித்து வேள்வி செய்த போது, அகன்ற மேகத்தின் வடிவெடுத்த திருமாலை வாகனமாகக் கொண்டு, மேகத்தின் மீது ஏறிச் சென்று, இந்திரன் செய்த வேள்வியை முற்றிலும் அழித்தவர் சிவபெருமான் ஆவார். யாழ்க் கருவியை வைத்துக் கொண்டு பண்களுடன் இசைக்கப்படும் பாடல்களும், அந்த பாடல்களுக்கு ஏற்ப ஆடப்படும் நடனங்களும் தொடர்ந்து நடைபெறும் திருப்பரங்குன்றம் என்று அழைக்கப்படும் தலத்தில் உறைபவரும், ஒப்பற்ற எட்டு குணங்களை உடையவரும், தன்னையே தியானிக்கும் எண்ணில் அடங்காத அடியார்களின் மனதினில் உறைபவரும் ஆகிய சிவபெருமான் இடைமருது தலத்தில் விருப்பத்துடன் அமர்ந்துள்ளார்.
Advertisement