73. சூலப்படை உடையார் தாமே - பாடல் 5
பணிவான சொற்களை
பாடல் 5:
ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த
உயர்பொழில் அண்ணாவில் உறைகின்றாரும்
பாகம் பணி மொழியாள் பாங்கராகிப்
படுவெண் தலையில் பலி கொள்வாரும்
மாகம் உடை மும்மதிலும் எய்தார்
தாமும் அணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும்
ஏகம்பம் மேயாரும் எல்லாம் ஆவார்
இடைமருது மேவிய ஈசனாரே
விளக்கம்:
ஊகம் = குரங்கு. உரிஞ்சு = உராய்ந்து தேய்க்கும். அண்ணா = அணுக முடியாத இடம். பாகம் = பாகு+அம் = வெல்லப்பாகு போன்று இனிமையான. பணி = பணிவாக பேசப்படும் மொழி. பாங்கர் = பக்கத்தில் வைத்திருப்பவர். இங்கே உடலின் ஒரு பாகத்தில் வைத்திருப்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும். மாகம் = விண்ணில் திரியும் இயல்பினை உடைய.
பொழிப்புரை:
குரங்குகள் மரங்களின் மீதேறி மேகங்களோடு உராய்ந்து தேய்க்கும் அளவு வானளவு உயர்ந்த மரங்கள் கொண்ட சோலைகள் நிறைந்த அண்ணாமலையில் உறைபவரும், வெல்லப்பாகு போன்று இனிமையான பணிவான சொற்களை பேசும் அன்னை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்திருப்பவரும், உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் பிரம கபாலத்தில் பிச்சை ஏற்பவரும், ஆகாயத்தில் திரியும் இயல்பினை உடைய மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினை எய்து எரித்து அழித்தவரும், அழகான சோலைகள் நிறைந்த ஆரூர் தலத்தில் உறைபவரும், கச்சி ஏகம்பத்தில் உறைபவரும் ஆகிய சிவபெருமான் இடைமருது தலத்தில் விருப்பத்துடன் அமர்ந்துள்ளார்.