100. படையார் தருபூதப் - பாடல் 8
அருளாளர்களின் விருப்பம்
பாடல் 8:
ஆவா என அரக்கன் அலற அடர்த்திட்டுத்
தேவா என்ற அருளார் செல்வம் கொடுத்திட்ட
கோவே எருக்கத்தம்புலியூர் மிகு கோயில்
தேவே என அல்லல் தீர்தல் திடமாமே
விளக்கம்:
Advertisement
அருளார் செல்வம்=அருளுடன் கூடிய பல செல்வங்கள்; மலையின் கீழே அழிந்தியவனை, அந்த அழுத்தத்திலிருந்து விடுவித்து மேலும் இராவணன் என்ற பெயர் அதிகமான வாழ்நாள் மற்றும் வாள் கொடுத்து அருள் புரிந்த செயல். ஆவா=ஆ ஆ என்ற இரக்கக் குறிப்பு. ஆ ஆ என்ற சொற்கள் இணையும் போது ஆவா என்று மாற்றம் அடைகின்றன. பெருமான் தன் மீது இரக்கம் கொண்டு, தனக்கு அருள் புரிய வேண்டும் என்பது தானே அருளாளர்களின் விருப்பம். அந்த விருப்பத்தினை ஆவா என இரங்கி அருள் புரிய வேண்டும் என்று தங்களது பாடல்களில் அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
அப்பர் பிரான் தூங்கானைமாடம் தலத்தில் அருளிய பாடலை (4.109.2). நாம் இங்கே காண்போம். அடியார்களில் கடையவன் என்ற பொருள் பட, சிறுதொண்டன் என்று தன்னை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தூய்மையற்ற உடலைத் தாங்கி நின்றமையால் அவ்வாறு கருதினார் போலும். அரும்பிணி=அகற்றுவதற்கு அரிய பிணி. தனது உடலின் தூய்மை கேட்டுப் போன தன்மையை ஒரு நோயாக அப்பர் பிரான் கருதுகின்றார். என் நினைந்தான்=என்னவென்று நினைத்துக் கொண்டான். தனது தகுதிக்கு மீறிய வேண்டுகோளை விடுப்பதாக எண்ணி சிவபிரான், தனது வேண்டுகோளை ஏற்காமல் இருப்பாரோ என்ற ஐயம் அப்பர் பிரானுக்கு வருகின்றது. என்ன நினைத்து இந்தத் தொண்டன் இவ்வாறு வேண்டுகின்றான் என்று நினைத்து இறைவன் சும்மா இருந்தால், சிவபிரான் மேல் பழி சூழும் என்று எச்சரிக்கையினை அப்பர் பிரான் விடுக்கின்றார். தேவன் என்ற சொல் தலைவன் என்ற பொருளில் இங்கே வருகின்றது. தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாவர் தம் கடன் என்று கூற்றாயினவாறு எனத் தொடங்கும் பதிகத்தில் பாடிய அப்பர் பிரான் இங்கே, அன்பு கொண்டு பணியும் அடியார்களின் தலைவன் என்று சிவபிரானை குறிப்பிடுகின்றார். தனக்கு வரும் பழியினை தவிர்க்க வேண்டி இறைவன் தன் மீது இரக்கம் கொள்ளவேண்டும் என்று அப்பர் பிரான் கூறுவது ரசிக்கத் தக்கது.
ஆவா சிறு தொண்டன் என் நினைந்தான் என்று அரும்பிணி நோய்
காவாது ஒழியில் கலக்கும் உன் மேல் பழி காதல் செய்வார்
தேவா திருவடி நீறு என்னைப் பூசு செந்தாமரையின்
பூவார் கடந்தையுள் தூங்கானை மாடத்து எம் புண்ணியனே
திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.64.1), ஞானசம்பந்தர் அடியார்கள் அனைவரின் மீதும் இறைவன் இரக்கம் கொண்டு அருள் புரிகின்றார் என்று சொல்வதை நாம் இங்கே காணலாம். மூவா=மூப்பு அடையாத, நீண்ட நாட்கள் வாழ்கின்ற முனிவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். உவரி=கடல், இங்கே ஊழி வெள்ளத்தை குறிக்கின்றது. பல ஊழிகளைக் கடந்த தலமாக முதுகுன்றம் கருதப்படும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது.
தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
ஆவா என்று அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய் என்று ஏத்தி
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே
திருவானைக்கா தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடலில் (5.31.4) அப்பர் பிரான், தன்னைக் கைதொழுது வணங்கும் அடியார்கள் அனைவர் மீதும் இறைவன் இரக்கம் கொள்கின்றான் என்று கூறுகின்றார். நறுமணம் மிகுந்த இறைவனின் செம்மையான திருவடிகளை, தங்களது நாவினால் இடைவிடாது புகழ்ந்து எப்போதும் இறைவனைப் பற்றிய சிந்தனை நிறைந்த உள்ளதுடன் இருந்து, இறைவனே எங்களை வினைத் துன்பங்களிலிருந்து காப்பாயாக என்று இறைவனை கை தொழுது வணங்க வேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் அறிவுரை கூறுகின்றார்.
நாவால் நன்று நறுமலர்ச் சேவடி
ஓவாது ஏத்தி உளத்து அடைத்தார் வினை
காவா என்று தம் கை தொழுவார்க்கு எலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே
திருவாசகம் ஆசைப் பத்து பதிகத்தில் மணிவாசகர் தனது உள்ளக் கிடக்கைளை வெளியிடுகின்றார். பதிகத்தின் முதல் பாடலில், இங்கே வா என்று குரல் கொடுத்து சிவலோகத்திற்கு பெருமான் தன்னை அழைத்துக் கொள்ள வேண்டும் என்று தனது ஆசையையும், இரணடாவது பாடலில் இறைவனை தான் காண வேண்டும் என்ற ஆசையையும் வெளியிட்ட அடிகளார், தனது ஆசைகள் நிறைவேறாத ஆசைகளாக மாறிவிடுமோ என்று கவலை கொண்டார் போலும், பதிகத்தின் மூன்றாவது பாடலில், பெருமானே நீ என் பால் சற்று இரக்கம் கொண்டு, எனது முகத்தைப் பார்த்து ஆஆ என்று சொல்ல மாட்டாயா என்று கெஞ்சுகின்றார். முதல் இரண்டு பாடல்களில் வெளிப்படுத்திய ஆசைகளை நிறைவேற்றாவிட்டாலும், தனது நிலை குறித்து இறைவன் இரக்கம் கொண்டால் போதும் என்று விரும்புகின்றார். இறைவன் தனது நிலையை நினைத்து ஐயோ பாவம் என்று இரக்கம் கொள்ளவேண்டும் என்று தனது ஆசையினை தெரிவிக்கும் அடிகளார், சர்வ வல்லமை படைத்த இறைவன் தனது நிலை கருதி இரக்கம் கொண்டால், தனது ஆசைகள் நிறைவேறி விடும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். அவரது வருத்தம் தான் என்னே. அழுக்குகள் நிறைந்த இந்த உடலுடன் தான் இருப்பதால் தானே சிவலோகத்திற்கு செல்ல முடியவில்லை; எனவே இந்த உடல் சிதைந்து ஆன்மா இதிலிருந்து விடுபடவேண்டும் என்பதே அவரது அவா.
சீவார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில்
இது சிதையக்
கூவாய் கோவே கூத்தா காத்து ஆட்கொள்ளும் குருமணியே
தேவா தேவர்க்கு அரியானே சிவனே சிறிது என் முகம் நோக்கி
ஆ ஆ என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே
யாத்திரைப் பத்து பதிகத்தின் முதல் பாடலில், சிவலோகத்திற்கு செல்லும் தகுதி பெற்றுள்ள அடியார்களை, இரக்கம் கொண்டு இறைவனால் ஆவா என்று சொல்லப்பட்ட அடியார்கள் என்று கூறுகின்றார். இதிலிருந்து இறைவன் ஆ ஆ என்று இரக்கம் கொண்டால் அதனால் ஏற்படும் விளைவு யாது, இறைவனின் அருள் எத்தன்மையது என்று நாம் அறிந்து கொள்ளலாம். அதனால் தான், இறைவனே உன்னைத் தவிர என்னை காப்பாற்றுவார் வேறு எவரும் இல்லை என்று சொல்லி அழுது கை தொழும் அடியார்கள் பால் இரக்கம் கொண்டு ஆ ஆ என்று கூறுவான் என்று அப்பர் பிரான் ஆனைக்கா பதிகத்து பாடலில் கூறுகின்றார்.
பூவார் சென்னி மன்னன் எம் புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவாது உள்ளம் கலந்து உணர்வாய் உருகும் வெள்ளக்
கருணையினால்
ஆ ஆ என்னப் பட்டு அன்பாய் ஆட்பட்டீர் வந்து ஒருப்படுமின்
` போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான்
கழல் புகவே
பொய்யான, நிலையற்ற இந்த உடலை விட்டு விட்டு சிவலோகம் செல்வதற்கு தயாராக இருப்பீர்களாக என்று அடியார்களை பார்த்து அடிகளார் சொல்லும் பாடல். இறைவனது கருணை வெள்ளத்தில் நனைந்து, அவனது இரக்கத்திற்கு பாத்திரமாகி, ஆ ஆ என்று இரக்கச்சொல் இறைவன் சொல்லும் அளவுக்கு, அவனது அன்பினைப் பெற்ற அடியார்கள் என்று கூறுகின்றார். அவனது இந்த இரக்கம் கலந்த அருளினால் விளைவதே சிவலோகம் செல்வதற்கான காலம் பொருந்தி வந்த நிலை என்பதையும் இந்த பாடலில் மணிவாசகர் உணர்த்துகின்றார்.
திருவாசகம் ஆனந்த மாலை பதிகத்தின் பாடலில் மணிவாசகர், இறைவன் ஆவா என்று சொல்லி தன் மீது இரக்கம் கொள்ளாவிடில் தன்னை அஞ்சேல் என்று சொல்லி அபயம் அளித்து காப்பாற்றுவார் வேறு எவரும் இல்லை என்று கூறி புலம்புகின்றார். உனது கருணையைப் பெறுவதற்கு அடியேன் தகுதி உடையவன் என்று சொல்லுவார் எவரும் உனது அருகில் இல்லையோ என்று நான் திகைக்கின்றேன். இனியாவது நான் தெளிவு அடையும் வண்ணம் நீ என் மீது இரக்கம் கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்றார்.
கோவே அருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே
ஆவா என்னா விடில் என்னை அஞ்சேல் என்பார் ஆரோ தான்
சாவார் எல்லாம் என்னளவோ தக்கவாறு என்று என்னாரோ
தேவே தில்லை நடமாடீ திகைத்த்தேன் இனித் தான் தேற்றாயே
திரைலோக்கிய சுந்தரம் தலத்தின் மீது அருளப்பட்ட திருவிசைப்பா பாடலில் கருவூர்த் தேவர், இறைவன் வருவான் என்ற நம்பிக்கையில் அவனை எதிர்நோக்கி காத்திருந்த ஒரு பெண்ணின் நிலையை உணர்த்தி, ஆவா என்று அந்த பெண்ணுக்கு அருள் புரியாயோ என்று இறைவனைப் பார்த்து கேள்வி கேட்கின்றார். ஏழை=பெண்மணி. தான் எதிர் நோக்கும் பெண் வரவில்லை எனினும், பெருமான் பால் தான் வைத்துள்ள அன்பு குறையாமல் இருக்கும் பெண்ணின் குவளை மலர் போன்ற அழகிய கண்களிலிருந்து தாரை தாரையாக பொழியும் நீர் கோர்க்கப்படாத முத்து மாலை போல் உள்ளது என்று கூறுகின்றார். இறைவன் பால் அன்பு கொண்டுள்ள அருளாளர்கள், தங்களை இறைவன் பால் தீராத காதல் கொண்டு அவனது அன்புக்கு ஏங்கி நிற்கும் பெண்ணாக உருவகித்து தங்களது எண்ணங்களை உணர்ச்சிகளை பாடலாக வடிப்பது வழக்கம்.
நீ வாராது ஒழிந்தாலும் நின் பாலே விழுந்து ஏழை
கோவாத மணி முத்தும் குவளை மலர் சொரிந்தனவால்
ஆவா என்று அருள் புரியாய் அமரர் கணம் தொழுது ஏத்தும்
தேவா தென் பொழில் கோடைத் திரைலோக்கியசுந்தரனே
தில்லைச் சிதம்பரம் மீது அருளிய பாடலில் புருடோத்தமநம்பி, பெருமான் பால் காதல் கொண்டுள்ள பெண்ணின் ஏக்கத்தை விவரிக்கையில், பெருமான் அருள் புரியாவிடின், அவள் உயிர் வாழ்வது அரிது என்று உணர்த்துகின்றார். நீ தரித்திருக்கும் புலித்தோல் ஆடை மற்றும் உனது தூக்கிய திருவடி ஆகியவற்றின் அழகினைக் கண்டு உன்பால் காதல்கொண்டுள்ள இந்த பெண், பிரிவாற்றாமையால் ஏங்கி உடல் மெலிந்து தனது வெண்சங்கு வளையல்களை இழந்துள்ளாள். அவளது தனிமைத் துயரினை ஒரு கணம் நினைத்துப் பார்த்து, அவள் மேல் நீ இரக்கம் கொள்ளாவிடில், ஏக்கத்தினால் அவள் இறப்பது உறுதி என்று உணர்த்தும் பாடல்.
சேயிழையர்க்கு இனி வாழ்வு அரிது
திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வா
தாயினும் மிக நல்லை என்று அடைந்தேன்
தனிமையை நினைகிலை சங்கரா உன்
பாயிரும் புலி அதளின் உடையும் பைய
மேல் எடுத்த பொற்பாதமும் கண்டே
இவள் இழந்தது சங்கம் ஆவா எங்களை
ஆளுடை ஈசனேயோ.
பொழிப்புரை:
இரக்கக் குறிப்பு தோன்ற ஆ ஆ என்று அரக்கன் இராவணன் அலறுமாறு அவனை கயிலாய மலையின் கீழே நெருக்கிய பெருமானே, பின்னர் அரக்கன் தேவா என்று உன்னை புகழ்ந்து அழுத போது அவனுக்கு அருள் புரிந்து நிறைந்த செல்வம் (நீண்ட வாழ்நாள், வாள், மற்றும் இராவணன் என்ற நாமம்) அளித்த தலைவனே, எருக்கத்தம்புலியூர் திருக்கோயிலில் உறையும் தேவனே என்று உன்னைப் போற்றும் அடியார்களின் இடர்கள் தீவது திண்ணம்.
Audio