முகப்பு
தினம் ஒரு தேவாரம்

96. கண் காட்டு நுதலானும் - பாடல் 1

ஐம்பூதங்களின் தன்மை

Updated On : 1 ஜூலை, 2018 at 3:23 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:24 PM

பாடல் 1

பின்னணி:

இரண்டாவது தல யாத்திரையாக நனிபள்ளி சென்ற திருஞான சம்பந்தர், நனிபள்ளி நிலத்தின் தன்மையை தனது தேவாரப் பாடலால் மாற்றிய பின்னர், அங்கிருந்து தலைச்சங்காடு, வலம்புரம், சாய்க்காடு மற்றும் பல்லவனீச்சசரம் ஆகிய தலங்கள் செல்கின்றார், அதன் பின்னர் திருவெண்காடு தலம் சென்று அடைகின்றார். திருஞானசம்பந்தர் தங்களது ஊருக்கு வருவதை அறிந்த, அந்த தலத்தில் இருந்த அடியார்கள், சொல்ல ஒண்ணாத மகிழ்ச்சி அடைந்தவர்களாக, அவரின் எதிரே சென்று அவரை வரவேற்று பின்னர் அவரை அழைத்துக் கொண்டு வெண்காடு நகரத்திற்குள்ளே புகுந்தனர். பெருமான் வீற்றிருக்கும் திருக்கோயில் கோபுரத்தைக் கண்ட பிள்ளையார், மிகுந்த மகிழ்ச்சியுடன் கோபுரத்தின் முன்னர் தாழ்ந்து வணங்கி, அடியார்கள் புடை சூழ திருக்கோயிலை வலம் வந்த பின்னர், பெருமானின் சன்னதி முன்னர், நிலத்தில் விழுந்து தொழுதார். திருவெண்காடு தலத்தில் குடி கொண்டிருக்கும் மெய்ப்பொருள் ஆகிய இறைவனைப் புகழ்ந்து கண்காட்டும் நுதலானும் என்று தொடங்கும் சீகாமரம் பண்ணில் அமைந்த தேவார திருப்பதிகம் பாடினர் என்று சேக்கிழார் கூறுகின்றார். 

Advertisement

    மெய்ப்பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரைச்
    செப்பரும் பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி
    முப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடி
    ஒப்பரும் ஞானம் உண்டார் உள மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார்

மேற்கண்ட பாடலில் முக்குளம் என்று சேக்கிழார் குறிப்பிடுவது இந்த தலத்திலுள்ள, சோம குண்டம், சூரிய குண்டம் மற்றும் அக்கினி குண்டம் ஆகிய மூன்று குளங்களாகும். இந்த குளங்களின் சிறப்பினை பட்டினப்பாலை மற்றும் சிலப்பதிகாரம் ஆகிய சங்க நூல்கள் உணர்த்துகின்றன. பட்டினப்பாலை நூல், முதல் இரண்டு குளங்களை, இரு காமத்து இணை ஏரி என்று குறிப்பிடுகின்றது. சிலப்பதிகாரம்  கனாத் திறம் உரைத்த காதையில், தீய கனவு கண்ட கண்ணகி தனது தோழியிடம் தான் கண்ட கனவை கூறி தன் பயத்தை உரைக்கிறாள். கண்ணகியைத் தேற்றும் முகமாக கண்ணகியின் தோழி தேவந்தி கண்ணகிக்கு இந்த கோயிலில் உள்ள சோமகுண்டம் மற்றும் சூரியகுண்டம் எனும் குளத்தில் குளித்து பின்னர் மன்மதனை வழிபாடு செய்தால், தனது கணவரை இந்த பிறவி மட்டும் அல்லாமல் அடுத்த பிறவியிலும் கூட பிரியாமல் சேர்ந்து இருக்கலாம் என்று அறிவுரை கூறுகிறாள்; சோமகுண்டம் சூரியகுண்டம் துறை மூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடும் தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார் போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர், என்பதே சிலப்பதிகாரத்து வரிகள் ஆகும். காமவேள் கோட்டம் என்பது பூம்புகார் நகரத்தின் ஒரு பகுதியாகும். திருவெண்காடு தலம் சீர்காழி தலத்திற்கு தென்மேற்கில் சுமார் பதினேழு கி.மீ. தொலைவில் பூம்புகார் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.  

மேற்கண்ட பெரிய புராணத்து பாடலில் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார் என்பதன் மூலம், சிவபிரானை வாழ்த்தி வழிபடுவதே, தனது வாழ்க்கை முறையாக திருஞானசம்பந்தர் கொண்டிருந்தார் என்று சேக்கிழார் பிரான் நமக்கு உணர்த்துகின்றார். சிவபிரானை ஏத்தி வாழ்தலே வாழ்க்கை ஆகும் என்று மணிவாசகப் பெருமான், ‘பண்டாய நான்மறை’ என்று தொடங்கும் பதிகத்தில் பாடுகின்றார்.
    
   வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாரும்
    தாழ்ந்து உலகம் ஏத்தத் தகுவாரும் – சூழ்ந்து அமரர்
    சென்று இறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
    நன்று இறைஞ்சி ஏத்தும் நமர்

பாடல் 1:

    கண் காட்டு நுதலானும் கனல் காட்டும் கையானும்
    பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும்
    பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்
    வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே

விளக்கம்:

இந்த பாடலில் பரமனின் கோலம் நமக்கு காட்டும் பொருட்களை மிகவும் நயமாக சம்பந்தர் கூறுகின்றார். பரமனின் நெற்றி, மூன்றாவது கண்ணையும், அவனது கை தீப்பிழம்பினையும், உருவம் ஓர் கூறு உவந்து பெற்றுக் கொண்ட மாதினையும், சடை தஞ்சம் பெற்ற பிறையையும், அவன் பாடும் இசை பண்ணையும், காட்டும் நேர்த்தி சம்பந்தரை நெகிழ வைக்கின்றது. புயல் என்பது இங்கு நீரை குறிக்கும். பரமன், பயிரை வளம்படுத்தும் நீரை போல மன்னுயிர்களுக்கு வளமாக உள்ளான் என கூறும் இவர் அவனது கொடி விடையை (விடை என்றால் நந்தி என்று பொருள்) காட்டுகின்றது என கூறி பாடலை நிறைவு செய்கிறார். நெற்றிக் கண் கோபத்தையும் அருளையும்
காட்டும் என்று சிவக்கவிமணி தனது பெரிய புராண விளக்கத்தில் கூறுகின்றார். மன்மதனை சினந்து நோக்கிய போது கோபத்தை காட்டிய நெற்றிக்கண், முருகப் பெருமான் பிறப்பதற்கு காரணமாக இருந்து ஆறு சுடர்களை வெளிப்படுத்தி தேவர்களுக்கு அருளியது அல்லவா.

கனல் காட்டும் கையான் என்று, பெருமான் தனது உள்ளங்கையினில் அனல் ஏந்தி ஆடுவதை திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி (பதினோராம் திருமுறை) பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. இயல்பாகவே பெருமானின் திருமேனி சிவந்த நிறம் கொண்டது என்று பல திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன. எனவே அவரது கையும் இயல்பாகவே சிவந்து காணப் படுகின்றது. மேலும் தீயே வடிவமாக இருப்பவன் சிவபெருமான். பெருந்தீயாகிய அவனுக்கு, அவனது உள்ளங் கையினில் இருக்கும் சிறிய செந்தழல் எம்மாத்திரம். மேலும் தீயினில் இருந்தவாறு நடம் புரியும் வல்லமை படைத்த அவனை தீ எவ்வாறு பாதிக்கும். எனவே அவனோடு இணைந்ததால் தான் தீ செம்மை நிறம் பெற்று திகழ்கின்றது என்று பாடலின் இரண்டாவது அடியில் விளக்குகின்றார்; ஆடுதல் என்ற சொல்
பொதுவாக நீராடுவதை குறிக்கும். செந்தழலும் தண்ணீர் போன்று பெருமானுக்கு குளிர்ந்து இருப்பதால் தான், தீயாடும் பெருமான் என்று அருளாளர்கள் குறிப்பிடுகின்றார்களோ. பிறங்க=விளங்க. 

    அழல் ஆட அங்கை சிவந்ததோ அங்கை 
    அழகால் அழல் சிவந்ததோ -- கழல் ஆட
    பேயோடு கானில் பிறங்க அனலேந்தித்
    தீ ஆடுவாய் இதனை செப்பு

இந்த பாடல் நமக்கு இதே தலத்தின் மீது அப்பர் பிரான் வெண்காடு தலத்தின் மீது அருளிய குறுந்தொகை பதிகத்தின் முதல் பாடலையும் (5.49.1) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில், அப்பர் பிரான் பண் காட்டிய பெருமான் என்றும் அடியார்க்கு கண் காட்டி கண்ணில் நின்ற மணியாக இருப்பதையும், தனது உருவத்தில் பெண் வடிவம் இருப்பதையும், சென்னியில் பிறைச் சந்திரன் இருப்பதையும் காட்டுகின்றான் என்று உணர்த்தி, அத்தகைய வெண்காட்டினை சென்றடைந்து உய்வீர்கள் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். 

    பண் காட்டிப் படியாய தன் பத்தர்க்குக்
    கண் காட்டிக் கண்ணில் நின்ற மணி ஒக்கும் 
    பெண் காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திரு
    வெண்காட்டை அடைந்து உய் மட நெஞ்சமே

நுதல்=நெற்றி; கொடியான்=கொடியினை உடையவன்; இசை வடிவமாக இருப்பவன் பெருமான் என்று குறிப்பிடுவது, ஏழிசையாய் இசைப் பயனாய் என்று சுந்தரர் கூறும் பாடலை (7.51.10) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. துரிசு=தவறுகள்; திருவொற்றியூரில் வாழ்ந்து வந்த சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்து கொண்டதால் தானே, திருவாரூர் செல்ல முடியாமல் ஒற்றியூ]ரில் தங்கும் படி நேர்ந்ததை நினைத்து மனம் வருந்தி சுந்தரர் பாடிய பாடல். திருமணம் செய்து கொண்டமையால் இல்லற பந்தத்தில் தான் மாட்டிக் கொண்டதை நினைத்த சுந்தரர், தான் செய்த தவறுகள் என்று இரண்டு திருமணங்களையும் கருதுகின்றார். சங்கிலியார் மற்றும் பரவையார் மீது தான் கொண்டிருந்த காதல் ஈடேற பெருமான் உதவியதால், தான் செய்த அந்த தவறுகளுக்கு உடனாக இருந்தவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். ஏழிசையாகவும் அந்த இசையின் பயனாகிய பண்களாகவும் இறைவன் உள்ள நிலை இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. மாழை=மாவடு போன்று நீண்ட அழகிய கண்கள்; ஒண்கண்=ஒளி மிகுந்த கண்கள்;     

    ஏழிசையாய் இசைப் பயனாய் இன்னமுதாய் என்னுடைய
    தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி
    மாழை ஒண்கண் பரவையைத் தந்து ஆண்டானை மதியில்லா
    ஏழையேன் பிரிந்து இருக்கேன் என் ஆரூர் இறைவனையே 

திருநாரையூர் தலத்தின் மீது திருஞான சம்பந்தர் அருளிய பாடலில் (3.107.7) ஏழிசையின் பொருளாக இருப்பவன் இறைவன் என்று குறிப்பிடுகின்றார். புணர்ப்பு=சேர்பித்தல்; உயிர்கள் செய்கின்ற செய்கைகளின் பயன்களை வினைகளின் வடிவத்தில் அந்தந்த உயிர்களுடன் சேர்ப்பிப்பது இறைவன் செய்யும் திருவிளையாடல் என்று சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். 

    ஊழியும் இன்பமும் காலமாகி உயரும் தவமாகி
    ஏழிசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி
    நாழிகையும் பல ஞாயிறாகி நளிர் நாரையூர் தன்னில்
    வாழியர் மேதகு மைந்த செய்யும் வகையின் விளைவாமே

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.60.3) அப்பர் பிரான் இறைவனை ஏழிசையாக இருப்பவன் என்று அழைக்கின்றார். ஐம்பூதங்களின் தன்மை விளக்கப்படும் பாடல். பரந்த வெளியிலிருந்து நாதம் பிறந்தமையால், ஆகாயத்தின் குணம் ஒலி என்று கூறுவார்கள். வீசும் காற்றில் ஒலி மற்றும் தொடு உணர்வு (ஊறு) ஆகிய இரண்டு பண்புகள் இருப்பதை நாம் உணர்கின்றோம். தீ, ஒலி கொண்டு உணரப்படுவதாகவும், தொடு உணர்வினால் அறியப்படுவதாகவும் விளங்குவதுடன், ஒளியுடனும் திகழ்கின்றது. நீருக்கு, ஒலி, ஊறு, ஒளி, மற்றும் சுவை ஆகிய நான்கு குணங்கள் உள்ளன. நிலத்திற்கு, நீரின் நான்கு குணங்களுடன் வாசனை ஆகிய ஐந்தாவது குணமும் உள்ளது. மேற்கண்ட குணங்களாக இறைவனே இந்த ஐந்து பூதங்களிலும் பரவி இருப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். ஒளிர்கின்ற நெருப்பு என்பதைக் குறிக்க வயங்கு எரி என்று கூறப்பட்டுள்ளது  வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை நம்மால் அறிய முடியாது அல்லவா. அத்தகைய விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமான திருநாமங்களை உடையவன் என்பதை உணர்த்தும் முகமாக தாரகைகள் தம்மின் மிக்க எண் என்று இறைவனை அப்பர்பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்

    மண்ணதனில் ஐந்தை மாநீரில் நான்கை
        வயங்கெரியில் மூன்றை மாருதத்து   இரண்டை
    விண்ணதனில் ஒன்றை விரிகதிரைத் தண்மதியைத்
         தாரகைகள் தம்மின் மிக்க
    எண்ணதனில் எழுத்தை ஏழிசையைக் காமன்
         எழில் அழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்
    கண்ணவனைக் கற்குடியில் விழுமியானைக்
          கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன்  நானே

 
பொழிப்புரை:

தனது மூன்றாவது கண்ணினைக் காட்டும் நெற்றியை உடையவனும், தீப்பிழம்பினைக் காட்டும் கையினை உடையவனும், தனது உடலின் ஒரு பகுதி பெண்ணின் உருவம் என்று காட்டுவானும், தன்னிடம் சரணடைந்த பிறைச் சந்திரனைக் காட்டும் சடையினை உடையவனும், பண்ணினை காட்டும் ஏழிசையாக இருப்பவனும், பயிரினை வளர்க்கும் மழையாக இருப்பவனும் ஆகிய இறைவன் திருவெண்காடு தலத்தில் உறைகின்றான். அவன் தனது கொடியினில் எருதினை சித்திரமாக வைத்துள்ளான்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.