96. கண் காட்டு நுதலானும் - பாடல் 3
ஐந்து புலன்களும்
பாடல் 3:
மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண் திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர் கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே
விளக்கம்:
Advertisement
கால்=காற்று; இரவி=சூரியன்: எண்ணில்=எண்ணிக்கையில் அடங்காத உயிர்கள், அனைத்து உயிர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்; இகம்=இம்மை; பரம்=மறுமை; மேற்கண்ட பாடலில் எஜமானன் என்ற வடமொழிச் சொல் இயமானன் என்று தமிழ்ப்படுத்தப் பட்டுள்ளது. இங்கே ஆன்மா, உயிர் என்ற பொருளில் வருகின்றது. மாணிக்கவாசகரும் இதே பொருளில் இயமானன் என்ற சொல்லை, சிவபுராணத்தில் பயன்படுத்தி இருப்பதை நாம் காணலாம். வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா
இங்கே உயிரினை எஜமான் என்ற பொருளில் இயமானான் என்று குறிப்பிடுவது சற்று சிந்திக்கத் தக்கது. உயிருடன் எப்போதும் ஆணவம் முதலான மலங்கள் பிணைந்துள்ளன. மேலும் உயிர் தன்னுடன் பிணைந்துள்ள வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு இறைவனுடன் சென்று சேர்ந்து என்றும் அழியாத பேரின்பத்தில் திளைக்கவேண்டும் என்பதே விருப்பத்துடன் உள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு உயிருக்கு உதவியாக இருப்பதற்கு, இறைவன் ஐந்து அறிவு கருவிகள் (ஞானேந்திரியங்கள்) மற்றும் செயல் கருவிகள் (கன்மேந்திரியங்கள்) கொடுத்துள்ளான். அந்த கருவிகளை தகுந்த முறையில் பயன்படுத்தி தனது நோக்கினை உயிர் அடைய வேண்டும்; அதற்கு அந்த கருவிகளை அடக்கி ஆட்கொண்டால் தான் முடியும் என்பதை உணர்த்தவே தான் உயிரினை எஜமான் என்று குறிப்பிடுகின்றனர்.
ஆனால் நமது வாழ்க்கையில் நடப்பது என்ன என்பதை நாம் சற்று பார்க்கலாம். உயிருக்கு உதவியாக இருக்க வேண்டிய ஐந்து புலன்களும், உயிரினைத் தமது வழியில் இழுத்துச் சென்று தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கின்றன. உயிர், தான் எஜமானனாக இருந்து புலன்களை கட்டுப்படுத்தி புலன்களை பயன்படுத்திக் கொண்டு தனது மெய்ஞானத்தை வளர்த்துக் கொள்வதற்கு பதிலாக, புலன்கள் உயிர்க்கு எஜமானன் போன்று நடந்து கொண்டு உயிரினை தங்களது விருப்பத்திற்கு இழுத்துச் செல்லும் அவல நிலையினை நாம் காண்கின்றோம். இந்த நிலையினை நாம் மாற்ற வேண்டிய அவசியத்தை இயமானன் என்ற சொல் நமக்கு உணர்த்துகின்றது.
இந்த பாடலில் இறைவன் அட்ட மூர்த்தியாக இருக்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. அப்பர் பெருமானும் சிவபிரான் அட்டமூர்த்தியாகி நிற்கும் தன்மையை, நின்ற திருத்தாண்டகத்தின் முதல் பாடலில் குறிப்பிடும்போது இயமானன் என்ற சொல்லை ஆன்மாவைக் குறிக்க பயன்படுத்துவதை நாம் உணரலாம்.
இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய்
எறியும் காற்றும் ஆகி
அரு நிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய்
அட்ட மூர்த்தியாகிக்
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர்
உருவும் தம்முருவும் தாமேயாகி
நெருநலையாய் இன்றாகி நாளையாகி நிமிர்புன்
சடை அடிகள் நின்றவாறே
அட்ட மூர்த்தங்கள் என்று சொல்லப்படும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா ஆகிய எட்டுப் பொருட்களிலும் இறைவன் சிவபிரான் கலந்து நிற்கின்றான் என்பதை கீழ்க்கண்ட திருவாசகம் தோள்நோக்கம் பதிகம் பாடல் உணர்த்துகின்றது. எட்டுத் திசைகளோடு, கீழ், மேல் என்ற இரண்டையும் இணைத்து
பத்து திசை என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார்.
நிலம் நீர் நெருப்பு உயிர் நீள்விசும்பு நிலாப் பகலோன்
புலன் ஆய மைந்தனோடு எண் வகையாய்ப் புணர்ந்து நின்றான்
உலகு ஏழ் எனத் திசை பத்து எனத் தான் ஒருவனுமே
பல ஆகி நின்றவா தோள்நோக்கம் ஆடாமோ
பொழிப்புரை:
நிலம், நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள், சூரியன் சந்திரன் மற்றும் அனைத்து உயிர்களிலும் எட்டு மூர்த்தங்களாக இறைவன் நிறைந்து உள்ளான்; உயிரால் இம்மையில் அடையும் பயன்களாகவும் மறுமையில் அடையவிருக்கும் பலன்களாகவும் உள்ள இறைவன், உலகின் அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ளான்; தனது உடலின் ஒரு பாகத்தில் தேவியையும் ஏற்றுக் கொண்டு இருப்பதால், ஆண் உருவத்தில் பெண் உருவமும் கலந்தவனாக உள்ளவன் இறைவன். அவன் பெரிய பொருட்களையும் விடவும் பெரியவனாகவும் சிறிய நுண்ணிய பொருட்களையும் விடவும் நுண்ணியவனாகவும் உள்ள இறைவன், பெரும் புகழினை உடையவன் ஆவான்.
அத்தகைய பெருமான், இந்திரன் தன்னை வழிபடும் வண்ணமாக திருவெண்காடு தலத்தில் உறைகின்றான்.