96. கண் காட்டு நுதலானும் - பாடல் 6
எத்துணை மகிழ்ச்சி
பாடல் 6:
தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையின் உடன்
ஒண்மதிய நுதல் இமையோர் கூறு உகந்தான் உறை கோயில்
பண் மொழியால் அவன் நாமம் பல ஓதப் பசும் கிள்ளை
வெண்முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே
விளக்கம்:
சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைகள் அதிகமாக இருந்த ஊரான வெண்காட்டில், அரன் நாமம் ஆங்கு உள்ளோர் சொல்லக் கேட்டு கிளிகளும் அவனது நாமத்தை கூறும் திறமை படைத்தன என்று சம்பந்தர் பிரான் இந்த பதிகத்தில் கூறி மகிழ்கிறார். அவரது காலத்தில் வாழ்ந்த திருமங்கை மன்னனோ, ஒரு பெண் தான் வளர்த்த கிளி அரியின் நாமம் சொல்லக் கேட்டு அந்த கிளியை கை கூப்பி மகிழ்ந்தாள் என்று கூறுகிறார். இறைவனின் நாமத்தை கிளிகளோ அல்லது வேறு எவரோ சொல்லக் கேட்பது அருளாளர்களுக்கு எத்துணை மகிழ்ச்சியை தருகின்றது என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த பாசுரத்தை திரு நெடும் தாண்டகத்தில் நாம் காணலாம்.
Advertisement
Advertisement
முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா மூ உலகும்
கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பு அறிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை
அந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தை திருத் தண்காவில்
வெக்காவில் திருமாலை பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியை
கை கூப்பி வணங்கினாளே
வெய்யரவு=வெப்பத்தை உள்ளடக்கிய கொடிய விடத்தினை உடைய பாம்பு; ஒண்=ஒளி பொருந்திய; மதிய=பிறைச் சந்திரன் போன்று அழகாக வளைந்த; கரும்பெணை=கரிய நிறம் கொண்ட பனை மரம்;
பொழிப்புரை:
குளிர்ந்த பிறைச் சந்திரனையும், வெப்பத்தை உள்ளடக்கிய கொடிய விடத்தினை உடைய பாம்பினையும் தனது சடையில் வைத்துள்ள இறைவன், பிறைச் சந்திரன் போன்று அழகாக வளைந்ததும் ஒளி வீசுவதும் ஆகிய நெற்றியை உடைய உமையம்மையைத் தனது உடலின் ஒரு கூறாக மகிழ்ந்து ஏற்றவன் ஆவான். அத்தகைய பெருமான் வீற்றிருக்கும் தலமாகிய திருவெண்காட்டினில்,, பசுமை நிறத்துடன் இளமையாக காணப்படும் கிளிகள் தங்களது அழகிய குரலால் பெருமானின் திருநாமங்களை ஓதியவாறு, வெண்மேகங்களைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள கரிய பனை மரங்களின் மீது அமர்ந்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.