முகப்பு
தினம் ஒரு தேவாரம்

96. கண் காட்டு நுதலானும் - பாடல் 9

பிரமனும் திருமாலும்

Updated On : 1 ஜூலை, 2018 at 3:26 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:31 PM

பாடல் 9:

    கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
    ஒள்ளாண்மை கொளல் கோடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான் 
    வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
    உள்ளாடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே

விளக்கம்:

Advertisement

கள்=தேன்; கிடந்தான்=படுத்து கிடப்பவன்; ஒள்ளாண்மை=சிறந்த ஆண்மைத் தன்மை; ஒரு முறை, மேரு மலைக்கு வெளியே பிரமனும் திருமாலும் தீவிரமாக ஒரு வாதத்தில் ஈடுபட்டு இருந்தனர்; தங்களுக்குளே எவர் பெரியவர் என்பதே அந்த வாதம். தேவர்களும் முனிவர்களும், தேவையற்ற வாதம் என்று சொல்லி, வாதத்தினை கைவிடுமாறு இறைஞ்சிய போதும் அவர்கள் தங்களது வாதத்தை நிறுத்தாமல் இருந்தனர். அப்போது அவர்களின் எதிரே, விண்ணையும் மண்ணையும் தாண்டிய வண்ணம் ஒரு தீப்பிழம்பு எழுந்தது. அதைக் கண்ட இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். இந்த தழற்பிழம்பின் அடியையும் முடியையும் காண்பவரே தங்களில் உயர்ந்தவர் என்ற முடிவுக்கு வந்தனர். அந்த முடிவின் தொடர்ச்சியாக, பிரமன் அன்னத்தின் வடிவம் கொண்டு நெடிது உயர்ந்து நின்ற தழலின் முடியையும், பன்றியின் வடிவம் எடுத்த திருமால் பிழம்பின் அடியையும் காண்பதற்கு முயற்சி செய்தனர். இவ்வாறு தங்களில் உயர்ந்தவன் யார் என்பதை முடிவு செய்யும் நோக்கத்துடன் இருவரும் உயர்ந்தும் தாழ்ந்தும் முயற்சி செய்தமை இங்கே ஒள்ளாண்மை கொளல் கோடி செய்யப்பட்ட முயற்சி என்று சம்பந்தரால் இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த நிகழ்ச்சி மூலம் இறைவனின் அருள் இல்லையேல், கல்வி மற்றும் செல்வத்தால் ஏதும் பயனில்லை என்பதும் உணர்த்தப் படுகின்றது.

இந்த பாடலில் இறைவனை நினைத்து உருகாத மாந்தர்களின் ஞானத்தை மதிக்க மாட்டோம் என்று சம்பந்தர கூறுவது, அவர் அருளிய ஆமாத்தூர் பதிகத்தின் பாடலை (2.44.10) நமக்கு நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் சம்பந்தர், ஈசனைத் தினமும் நினையாதார்களின் நெஞ்சம் நெஞ்சமாக கருதப்படாது என்று கூறுகின்றார். நித்தல் என்ற சொல் எதுகை கருதி நிச்சல் என்று மருவியுள்ளது. பெய்தல்=இடுதல்; பின் சார்தல்=பின்னே வருதல். கொச்சை=இழிவான; பிச்சைப் பெருமானாக (பிக்ஷாடனர்) வேடம் தரித்து தாருகாவனம் சென்ற சிவபிரானின் பின்னர், முனிவர்களின் மனைவியர் தொடர்ந்து வந்த செய்தி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. புலால் நாற்றம் வீசிய தோல் என்று குறிப்பதன் மூலம் அப்போது தான் உரித்த தோல் என்று உணர்த்தப்பட்டுள்ளது. யானையின் பச்சைத் தோல், உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று நம்பப்படுகின்றது.ஆனால் சர்வ வல்லமை படைத்த ஈசனை எந்த கேடும் அணுகமுடியாது. மதயானையின் தோல் உரிக்கப்படுவதை நேரில் கண்ட உமாதேவி அச்சம் அடைந்த நிகழ்ச்சியும் இங்கே கூறப்பட்டுள்ளது.  
    பிச்சை பிறர் பெய்யப் பின் சாரக் கோசாரக்
    கொச்சை புலால் நாற ஈரிருவை போர்த்து உகந்தான்
    அச்சம் தன் மாதேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்    
    நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே    

நீறு அலைத்ததோர் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (5.98.6) அப்பர் பிரான் பெருமானை நினையாதவர்களின் நெஞ்சம் நெஞ்சமே அல்ல என்று கூறுகின்றார். முன்னுதல்=நினைத்தல்; முன் நெஞ்சம்=இறைவனை நினைக்கும் நெஞ்சம்; மூர்க்கர்= கொடியவர்; வன்=கொடிய; பெருமானை நினைக்காமல் தங்களது வாழ்க்கையை கழிப்பவர்கள், வீணான வாழ்க்கையை கழிக்கின்றார்கள் என்று இங்கே கூறுகின்றார். தம் நெஞ்சம் தமக்குத் தாமிலாதவர் என்று தங்களது நெஞ்சத்தை சரியாக பயன்படுத்துக் கொண்டு பலன் அடையாமல் இருக்கும் வீணர்களை அப்பர் பிரான் இந்த பாடலில்  குறிப்பிடுகின்றார். மனிதப் பிறவி எடுத்துள்ள நாம் பெறற்கரிய பாக்கியம் செய்தவர்கள். இறைவன் நமக்கு அளித்துள்ள கருவி கரணங்களை நன்கு உபயோகித்து, மெய்ப் பொருளின் தன்மையை உண்மையாக உணர்ந்து, பழைய பிறவிகளிலிருந்து நாம் கொண்டு வந்துள்ள வினைகளை முற்றிலும் கழித்து, பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டு முக்தி நிலையினை அடைந்து என்றும் அழியாத இன்பத்தில் ஆழ்ந்திருப்பது தான், நாம் உயிருக்கு செய்யும் கைம்மாறு ஆகும். கண்ணிருந்தும் குருடனாக பொருட்களை பார்த்து அறியாமல் இருக்கும் மனிதனை மூடன் என்பது போல், நெஞ்சம் இருந்தும் அதனை சரிவர பயன்படுத்தாமல் இருப்பவர் மூடர் தானே. 

    முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்
    தன் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்
    வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லீரே
    என் நெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே

பொழிப்புரை:

தேன் நிறைந்த செந்தாமரை மலரின் மேல் உறையும் பிரமனும், பாற்கடலில் படுத்து இருப்பவனும் ஆகிய திருமாலும் ஆகிய இவர்கள், தங்களில் யார் உயர்ந்தவர் என்பதை அறியும் பொருட்டு, அன்னமாக உயர்ந்தும் பன்றியாக தாழ்ந்தும் சென்ற போதும் முடியையும் அடியையும் உணர முடியாமல் திகைத்தனர்; இவ்வாறு அரியும் பிரமனும் உணர்வதற்கு அரியவனாக நின்ற பெருமானை, ஐராவதம் எனப்படும் வெள்ளானை தவம் செய்து வழிபட்டு உய்வினை அடைந்தது. இவ்வாறு அருள் புரியும் மேன்மை வாய்ந்த திருவெண்காட்டு பெருமான் என்று தங்களது உள்ளத்தில் கசியும் அன்பினால் பெருமானை நீராட்டி உருகி உருகாத மாந்தர்களின் ஞானத்தை நாம் மதியோம்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.