109. நூலடைந்த கொள்கையாலே - பாடல் 6
பெரிய புராணம்
பாடல் 6:
காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணமாகி வந்து
வேடு அடைந்த வேடனாகி விசயனொடு எய்தது என்னே
கோடு அடைந்த மால் களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள் செய்
சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே
விளக்கம்:
Advertisement
களிற்றுக் கோசெங்கணான்=சென்ற பிறப்பின் தொடர்பாக யானையின் மீது எப்போதும் பகை கொண்டவனாக திகழ்ந்த கோச்செங்கட்சோழன்; அதன் விளைவாகவே எழுபத்திரண்டு மாடக் கோயில்கள், யானை புகா வண்ணம் கட்டினான் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பாசுரத்திலும் திருமங்கை ஆழ்வார் இந்த செய்தியை குறிப்பிடுகின்றார். சேடு=பெருமை; காடு அடைந்த ஏனம்=பாண்டவர்கள் வனவாசம் சென்று இருந்த காலத்தில், தனது ஒற்றர்கள் மூலம் பாண்டவர்களை துரியோதனன் கண்காணித்துக் கொண்டே இருந்தான். அதனால் அவனுக்கு பாசுபதம் அத்திரம் பெறுவதற்காக அர்ஜுனன் தவம் செய்வதற்காக வேறோர் காட்டுக்கு சென்றதை அறிந்தான். தனது நண்பன் முகன் என்று அழைக்கப்பட்ட அசுரனை அழைத்து தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனை தாக்கி கொன்றுவிடுமாறு திட்டமிட்டான். முகனும் காட்டுப் பன்றி வேடம் தரித்து அர்ஜுனன் தவம் செய்து கொண்டிருந்த இடம் சென்றடைந்து அவனை தாக்கி கொல்ல தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். தனது அடியவன் அர்ஜுனனை காக்கும் பொருட்டு பெருமான் அந்த காட்டுப்பன்றியை கொல்லவும் அர்ஜுனனுக்கு பாசுபதம் அத்திரம் அளித்து அருள் புரியவும் திருவுள்ளம் கொண்டார். இந்த நிகழ்ச்சி தான் இங்கே கூறப்படுகின்றது. அர்ஜூனன் இருக்கும் இடத்தை தேடிச்சென்ற பன்றி என்பதை குறிப்பிடும் வண்ணம் காடு அடைந்த ஏனம் என்று இங்கே சம்பந்தர் குரிப்பிடுகின்றார். சிவபெருமான் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் எய்த அம்பு பன்றியின் உடலின் மீது ஒரே சமயத்தில் பாயவே, எவர் எய்த அம்பு பன்றியை கொன்றது என்பதில் இருவரும் மாறுபடவே அவர்களுக்குள் சண்டை மூண்டது. வேடு அடைந்த= வேடுவக் கோலம் பூண்ட; கோடு=கொம்பு; மால்=பெரிய; சேய்ஞலூர் திருக்கோயில் சற்று அகலம் குறைந்த படிக்கட்டுக்களை கொண்டது. யானை ஏற முடியாத நிலையில் அமைந்துள்ள இந்த கோயிலைக் கண்டதும் சம்பந்தருக்கு, யானை செல்ல முடியாத வண்ணம் பல மாடக் கோயில்கள் கட்டிய கோச்செங்கட் சோழனின் நினைவு வந்தது போலும். சோழ மன்னன் கட்டிய எழுபத்திரண்டு மாடக் கோயில்களில் இதுவும் ஒன்று என்று கூறுவார்கள்.
பொழிப்புரை:
தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனை கொல்லும் நோக்கத்துடன் காட்டுப்பன்றி வேடம் எடுத்து காடு நோக்கிச் சென்ற மூகாசுரனை கொன்று அர்ஜுனனை காக்கும் பொருட்டு, வேடுவக் கோலம் தாங்கி சென்ற பெருமான் அர்ஜுனனுடன் போர் புரிந்த காரணம் தான் என்னே. தன்னுடன் போர் புரிந்த அர்ஜுனனுக்கு பாசுபத அத்திரம் அளித்த செயல் வியப்புக்கு உரியது அல்லவா. இத்தகைய வியப்பிற்கு உரிய வண்ணம் கருணைச் செயல் புரிந்த பெருமான், முந்தைய பிறவியில் யானையுடன் தான் கொண்டிருந்த பகையினை நினைவு கூர்ந்து பல மாடக் கோயில்கள் கட்டிய கோச்செங்கட் சோழனுக்கு அருள் செய்த செல்வராகிய பெருமான் பெருமை வாய்ந்த சேய்ஞலூர் தலத்தில் உறைகின்றார்.