127. பிறையணி படர்சடை - பாடல் 4
பிறைச்சந்திரனுடன் இணைத்து
பாடல் 4:
வினை கெட மன நினைவது முடிகெனில் நனி தொழுதெழு குல மதி
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன்
மனை குடவயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி
கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினனது அதிர் கழல்களே
விளக்கம்:
முடிகெனில்=முடிக+எனின்; முடிய வேண்டும் என்று விரும்பினால்; தொழுதெழு என்ற தொடர் மூலம், தரையில் விழுந்து இறைவனை வணங்கி பின்னர் எழும் நிலையினை குறிப்பிடுகின்றார். புனை கொடியிடை என்ற தொடரினை, பிறைச்சந்திரனுடன் இணைத்து கொடியிடையாளாகிய கங்கை நதி என்றும் பொருள் கொள்ளலாம். அதே தொடரினை உடலுடன் தொடர்பு கொண்டு, பெருமானின் உடலில் பாதியில் விளங்கும் உமையன்னை என்றும் பொருள் கொள்ளலாம். தாருகவனத்து முனிவர்கள் அபிச்சார ஹோமம் என்று அழைக்கப்படும் ஒரு வகை யாகத்தினை செய்து, பல பொருட்களை தீயினில் இட்டு அந்த தீயிலிருந்து ஓர் காட்டு யானையினை எழுப்பி, பெருமான் மீது ஏவியதை குறிப்பிடும் வண்ணம், பொருள் படுதரு களிறு என்று கூறுகின்றார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். பொருள் தரு என்ற தொடரினை கொடியிடை என்ற சொல்லுடன் இணைத்து, அன்னையைத் தனது உடலின் ஓர் அங்கமாக, பொருளாக ஏற்றுக்கொண்ட இறைவன் என்ற விளக்கமும் பொருத்தமே. கதிர்=சூரியன்
Advertisement
பொழிப்புரை:
உலகத்தவரே, உங்களைப் பிணைந்துள்ள வினைகள் முற்றிலும் கெட்டு அழிந்துவிட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நீங்கள் செய்யவேண்டியது யாது என்பதை நான் கூறுகின்றேன்; கேட்பீர்களாக. தனது களங்கங்கள் நீங்கப் பெற்று உயர்ந்த நிலையினை அடைந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனும், கொடி போன்ற இடையினை உடைய உமை அன்னையைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டவனும், தாருகவனத்து முனிவர்களால் அபிசார ஹோமத்திலிருந்து எழுப்பப்பட்டு தன் மீது ஏவப்பட்ட மதம் கொண்ட ஆண் யானையின் தோலை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்டவனும், நமது இல்லங்களில் பயன்படுத்தப்படும் குடம் போன்று பருத்த வயிற்றினை உடையதும் குள்ளமான உருவத்தினை உடையதும் ஆகிய பூத கணங்களை படையாக உடையவனும், இடைவிடாது ஒலிக்கின்ற அலைகள் உடைய கடலால் சூழப்பட்ட கழுமலம் நகரினில் மிகுந்த விருப்பமுடன் வீற்றிருப்பவனும், சூரியனையும் சந்திரனையும் தனது இரு கண்களாக உடையவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை, ஒலிக்கும் கழல்கள் அணிந்த திருவடிகளை நன்றாக தொழுது எழுவீர்களாக. அவ்வாறு செய்தால் உங்களது வினைகள் முற்றிலும் அழிந்துவிடும்.