ஆந்திர மாநிலம், இருள பண்டாவில் பி.ஆர். பிரான்பில் அவர்கள் முதன் முதலில் சிறப்பு வடிவ பெருங் கற்படைச் சின்னமாக அறிவித்த அரைவட்ட வடிவ தலைப்பகுதி கொண்ட பலகைக் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சின்னங்கள் போன்று, இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம், மல்லச்சந்திரம் என்ற இடத்தில் மேலுமலை என்று அழைக்கப்படும் இடத்தில் 200-க்கும் மேற்பட்ட சின்னங்கள் உள்ளன.
இருளபண்டா, ஆந்திரத்திலும்; மல்லச்சந்திரம், தமிழகத்திலும் இருந்தாலும், அருகருகே அமைந்த பகுதிகளாகும். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால், இவ்விரு பகுதிகளும் வேறுவேறு மாநிலத்தைச் சார்ந்தவையாகக் காட்சியளிக்கின்றன என்பதே உண்மை நிலையாகும். பண்டைய வரலாற்றை பகுத்துப் பார்க்கும்பொழுது, அவற்றின் தற்போதைய எல்லைகளைக் குறித்துக்கொள்ளலாமே தவிர, அதனால் அவற்றின் பண்பாட்டு நிலைகளில் மாற்றம் ஏதும் இல்லை என்பதை ஊகித்து உணர்தல் அவசியமாகிறது. இவை இன்றைய ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் பொதுவானதாகவே கருத வேண்டும். மூன்று மாநிலங்களும் இணையும் இடத்தில் பெருங் கற்படைக் காலத்தோடு தொடர்புடைய பெருங்குழு ஒன்று இருந்துள்ளது, இவ்வகை சின்னங்களின் ஒற்றுமை கொண்டு தெளிவாகிறது. இதனை ஒரு தொகுப்பாகக் காணமுடிவதும் இதனை வலியுறுத்தும்.
‘புதையுண்ட தமிழகம்’ தொடரின் ஆசிரியர், மல்லச்சந்திரம் கல்திட்டைகளை ஆய்வு செய்து, அவற்றுள் சில ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளதையும் நேரில் கள ஆய்வு செய்துள்ளார். மேலும் இவர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு, பெருங் கற்படைச் சின்னங்கள் பலவற்றை ஆய்வு செய்து வெளிப்படுத்தியுள்ளார். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதிகளில் காணப்படும் பெருங் கற்படைக் காலச் சின்னங்களையும், பிற தொல்லியல் சான்றுகளையும் ஆய்வு செய்து, கா.ராஜன் அவர்கள் தனது Archaeology Gazetteer of Tamil Nadu என்ற நூலில் விவரித்துள்ளார்.
இப்பெருங் கற்படை பண்பாடு, தென்னிந்தியா முழுவதும் காணப்படுகிறது. இப்பண்பாடு, ஆடு மாடு வளர்ப்பு, விவசாயம், இரும்பு உற்பத்தியுடன் நன்கு வளர்ச்சியடைந்த பண்பாடாக வெளிப்பட்டுள்ளது. இப்பண்பாட்டு மக்கள், பல்வேறுவிதமான மட்கலயங்கள் தயாரிக்கும் சிறந்த தொழில்நுட்ப அறிவை பெற்றவர்களாகத் திகழ்ந்துள்ளனர். விலையுயர்ந்த மணிகள் செய்யும் தொழிற்கூடங்களையும் இவர்கள் அமைத்துள்ளனர். இவ்வாறு பலவகை சிறப்பு பெற்ற இவர்கள், தங்களது சமுதாய கட்டமைப்பின் வளர்ச்சியைப் பெற்றனர் என்பதை, பெருங் கற்படைச் சின்னங்களின் குறிப்பாக தமிழகப் பரப்பில் காணப்படும் பெருங் கற்படைச் சின்னங்களின் அமைப்புகளையும், அகழாய்வுகள் காட்டும் அக்கால வாழ்வியல் தரவுகளுடன் இணைத்துக் காண்போம்.
பெருங் கற்படைக் காலத்தின் குணங்கள்
பெருங் கற்படைக் கால மக்கள், இறந்த தங்களது முன்னோர்களுக்குப் பெரிய பெரிய கற்பலகைகள் மற்றும் கற்கள் கொண்டும், தாழிகள், ஈமத்தொட்டிகளைப் பயன்படுத்தியும், சதுரமாகவும், செவ்வகமாகவும் கல்லறைகளைக் கட்டி, அவற்றின் உள்ளே இறந்த உடல்களை அல்லது எலும்புகளை வைத்து அடக்கம் செய்தனர் என்பது முன்னர் குறிப்பிடப்பட்டது.
இறந்த பின்னும் அவர்கள் வாழ்வதாகக் கருதி, அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உள்ளே வைத்து புதைத்தும் அவற்றை வழிபாடு செய்யும் வழக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தமையை அறியமுடிகிறது*1 தமிழகத்தில், தெற்கே கன்னியாகுமரி மாவட்டம் முதல், வடக்கே தருமபுரி மாவட்டம் வரை, தமிழத்தில் இப்பண்பாடு பரவியிருந்துள்ளது என்பதற்கு, இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் வெளிப்படுத்திய தொல்பொருட்கள் சான்றாக அமைகின்றன.
பெருங் கற்படைக் காலம் என்ற பெயருக்குத் தக்கவாறு, பெரிய பெரிய கற்களைக் கொண்டு நினைவுச் சின்னங்களை அமைத்ததால், இக்காலம் பெருங் கற்படைக் காலம் எனக் குறித்தனர். மெகாலித்திக் (Megalithic) என்ற கிரேக்க சொல்லின் பொருளின் குறிக்கப்படுவதுதான் பெருங் கற்படை என்பது. மெகாலித்திக் என்ற சொல்லின் பொருளும், பெரிய கற்கள் கொண்டது என்பதே ஆகும்.
இக்காலகட்டத்தை, கற்காலத்தின் இறுதிக் காலமாகக் கருதலாம். இக்கால மக்கள், பெரிய பெரிய கற்களைப் பயன்படுத்தினாலும், அக்கற்களை உடைத்து எடுக்கப் பயன்படுத்திய பொருள் கடினமான இரும்பு என்பதே உண்மை. இதன் காரணமாக, இது இருப்புக் காலம் என்றும் இக்காலப் பண்பாடு, இரும்புக் காலப் பண்பாடு என்றும் அழைப்படுகிறது. அந்த வகையில், இக்காலப் பண்பாடு கனிம வளத்தைப் பயன்படுத்திய பண்பாடும் ஆகும்.
பெருங் கற்படைக் காலத்தைப் பற்றிய முந்தைய ஆய்வுகள்
முதன் முதலில், காலின் மெக்கன்சி என்பவர் தமிழகத்தில் படுவூர் என்ற இடத்தில் பெருங் கற்படைச் சின்னங்களைக் கண்டறிந்தார். பொ.ஆ.1823-ல், பாபிங்டன் (Babington) என்பவர் மலபார் பகுதியில் உள்ள பெருங் கற்படைக் கால நினைவுச் சின்னங்களை அகழாய்வு செய்து விவரங்களைச் சேகரித்தார்.*2 பின்னர் பொ.ஆ.1851-ல், மெடோஸ் டெய்லர் (Medos Tayor) என்பவர் கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் காணப்படும் பெருங் கற்படைக் காலச் சின்னங்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்தார்.*3 பொ.ஆ.1837-ம் ஆண்டு, பிரிக்ஸ் என்பவர் தமிழகத்தில் நீலகிரி மலைப் பகுதிகளில் காணப்பட்ட பெருங் கற்படைக் கால சின்னங்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து வெளியிட்டு, அவற்றை கல்வட்டங்கள் என்று குறிப்பிட்டார்.*4 பொ.ஆ. 1876-ல், ஜெர்மனி நாட்டைச் சார்ந்த ஜாகோர் (Jagor), தாமிரபரணி ஆற்றின் கரையிலுள்ள ஆதிச்சநல்லூர் பகுதியில் காணப்படும் தாழிகளை ஆய்வுசெய்தார்.*5 இவர் சேகரித்த தொல்பொருட்களை, பெர்லின் அருங்காட்சியகத்துக்குக் கொண்டுசென்று அங்கு காட்சிக்கு வைத்தார். இதன் அடிப்படையில்தான், அலெக்சாண்டர் ரே (Alexander Rea) என்பவர் ஆதிச்சநல்லூரில் அகழாய்வை மேற்கொண்டார். பொ.ஆ. 1899 முதல் 1906 வரை இவர் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மைய அரசின் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையும் அகழாய்வை மேற்கொண்டு, பல அரிய தொல்லியல் தரவுகளைச் சேகரித்துள்ளனர். இதன் விரிவான, முழுமையான அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. பொ.ஆ. 1901-ல் இராபர்ட் புரூஸ் புட் என்ற நிலவியல் ஆய்வாளர் (இராபர்ட் புரூஸ் புட் பற்றிய வாழ்க்கை மற்றும் பணிகள் பற்றி முழுமையாக அறிய புதையுண்ட தமிழகம் தொடரின் அத்தியாயம் 6-வது பகுதியைக் காண்க.) தென்னிந்தியா முழுவதும் தான் கண்டுபிடித்த கற்காலக் கருவிகளையும், பெருங் கற்படைச் சின்னங்களையும் தொகுத்து பட்டியலிட்டார்.*6 உருண்டையான கற்களைக் கொண்டு வட்டமாக அமைந்த பெருங் கற்படைச் சின்னத்துக்குக் கல்வட்டம் எனப் பெயரிட்டார்.*7 பொ.ஆ.1931-ல், கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் தொல்பொருட்களையும், பெருங் கற்படைச் சின்னங்களையும் தொகுத்து, அட்டவணை ஒன்றை தாஸ் குப்தா (H.C. Das Gupta) அவர்கள் வெளியிட்டார்.*8
தமிழகத்தில் மட்டுமின்றி, தென்னிந்தியா முழுவதும் பரவலாக பெருங் கற்படைச் சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த நினைவுச் சின்னங்களை, பல தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, பல பிரிவுகளாகப் பகுத்து, அதற்கு தனித்தனியாக, அமைப்புக்கு ஏற்ப பெயரிட்டுள்ளனர். தமிழகத்தில், பெருங் கற்படைச் சின்னங்களைப் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டவர்களுள் வி.டி. கிருஷ்ணசாமி, கே.ஆர். சீனிவாசன், என்.ஆர். பானர்ஜி, கே.வி. செளந்தரராஜன், பி.கே. தாபர், க. ராஜன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வி.டி. கிருஷ்ணசாமி அவர்கள் செய்த பகுப்பாய்வு பலவகையில் குறிப்பிட்டத்தக்க ஒன்று. அவர் பெருங் கற்படைச் சின்னங்களை எட்டுப் பிரிவுகளாகப் பிரித்துள்ளார்.*9
1. கல்லறை (Cist Burial)
கரடுமுரடான கற்பாறைகளைக் கொண்டு, பெட்டி வடிவில் அமைக்கப்பட்டவை கல்லறை வடிவமாகும். இந்தப் பகுப்பில் மூன்று வகைகளை அவர் குறிப்பிடுகின்றார்.
இதில் கல்லறை வடிவம், பெரும்பான்மையான பகுதி பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு, சிறிதளவு மட்டும் பூமிக்கு மேல் வெளியில் தெரியும்படி அமைந்திருப்பதாகும் (Dolmonoid Cist). இது தமிழில், ‘கல்திட்டை போன்ற கற்பதுக்கை கல்லறை’ என்று குறிப்பிடப்படுகிறது.
முழு கல்லறையும் தரைக்கு மேலே அமைந்திருப்பதாகும் (Dolmen). இது தமிழில், ‘கல்திட்டை’ என்று குறிப்பிடப்படுகிறது.
முழு கல்லறையும் பூமிக்கு அடியில் அமைந்திருப்பது (Slab Cist). இது தமிழில், ‘கற்பதுக்கை’ என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த வகையான கல்லறைகள் அனைத்தும், உருண்டையான கற்குண்டுகளைக் கொண்டு வட்டமாக அமைக்கப்பட்ட அமைப்பில் இருக்கும். அதனால் இதனை கல்வட்டம் என்று குறிப்பிடுகிறார். அதாவது, எல்லா கல்லறை சின்னங்களும் கல்வட்டங்களுக்கு உள்ளேயே காணப்படும் என்பது இவரது கருத்தாகும்.
2. கல்லறை அல்லது கற்பலகைகளால் அமைந்த கல்லறை (Cist Burial or Slabled Cist Burial)
நன்கு செதுக்கப்பட்ட கற்பலகைகளைக் (Orthosatate) கொண்டு ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கற்பலகைகளைச் சதுரமாகவும், நீள் சதுரம் என்ற செவ்வகமாகவும் இது அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பான்மையான கல்லறைகளில், கிழக்குப் பலகைக் கல்லில் இடுதுளை காணப்படும். இவை, பெரும்பான்மையாக ‘ஸ்வஸ்திக்’ அமைப்பில் அமைக்கப்படும். இதற்கு நல்ல உதாரணம், பிரம்மகிரியில் காணப்படுவது ஆகும்.
புதுக்கோட்டையில் காணப்படும் கல்லறைகள், முன்புறம் சிறிய எதிர் கல்லறை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும். சில கல்லறைகள், குறுந்தடுப்பு ஒன்றால் இரண்டாகப் பகுக்கப்பட்டிருக்கும். எனவே, இந்த அமைப்பை பகுக்கப்பட்ட கல்லறை (Transepted Burial) என்பார்.
3. அறைகளை உடைய கல்லறை (Chambered Tomb)
கர்நாடக மாநிலத்தில் காணப்படும் கல்லறை வகை, பெருங் கற்படைச் சின்னங்களின் அமைப்பு கொண்டு தனித்துக் குறிப்பிட, அவற்றை அறைகளால் தடுக்கப்பட்ட கல்லறை எனப் பகுத்து அறிவிக்கிறார். இதுபோன்ற கல்லறைகள் ஐரோப்பிய நாடுகளிலும், பிரான்ஸ் மற்றும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டிலும் பரவலாகக் காணப்படும் அமைப்பு என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். இந்த கல்லறை வடிவங்களில், முதலில் ஒரு கல்லறையை அமைப்பர். அதனுடன் இணைத்துப் பாதை விடப்பட்ட நிலையில் மேலும் ஒரு கல்லறையை இணையாகவோ அல்லது குறுக்காகவோ அமைப்பர். இதனைக் காணும்பொழுது, கோடக வடிவ அமைப்பில் காணப்படும். இதனை ரேப்பர் அமைப்பு என்பர்.
இந்த அமைப்பில், ஒரு பலகைக் கல் மற்றொரு பலகைக் கல்லோடு இணையாது. அதேசமயத்தில், பக்கவாட்டில் நீட்டித்தோ உட்பகுதியில் தாங்கியபடியோ அமைந்திருக்கும் இதன்மூலம், தேவையான அளவுக்கு அறைகளை நீட்டிக்கொள்வர். இந்த அமைப்பு, பொதுவாக முறையாக அமையாத பகுக்கப்பட்ட அறைகளைக் கொண்ட கல்லறை அமைப்பாகும். தமிழகத்தில், இதுபோன்ற கல்லறைகள் விழுப்புரம் மாவட்டத்தில் தேவனூர், நாயனூர், உதயநத்தம் போன்ற இடங்களிலும் காணப்படுகின்றன. இவற்றில், ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை தனித்தனியாகவும், சேர்த்தும் புதைப்பதும் உண்டு. இவற்றில், அவர்கள் பயன்படுத்திய மட்கலன்களையும் பிற பொருட்களையும் வைத்துப் புதைப்பார்.
4. கல் வட்டங்களுக்கு அடியில் முதுமக்கள் தாழி (Cairn Circle)
புதுக்கோட்டை மாவட்டத்தில், உருண்டையான கல்வட்டங்கள் தரையின் மேற்பகுதியில் காணப்படுகின்றன. ஆனால் உட்பகுதியில், அதாவது பூமிக்கு அடியில் முதுமக்கள் தாழி உள்ளது. சில கல்வட்டங்களில், கல்லறைகளும் காணப்படுகின்றன.
5. கற்களைப் பயன்படுத்தாத தாழிவகைப் புதைகுழி (Non-Lithic Urn Burial)
கற்களைப் பயன்படுத்தாமல் சமமான தரைப்பகுதியில் குழிகளைத் தோண்டி அதன் உள்ளே தாழி எனும் சுடுமண்ணால் செய்த மட்கலனைப் புதைப்பர். இத்தாழிகள் இறந்தவர்களின் உடலை அல்லது எழும்புகளை வைத்து மூடுவர். இதனையே முதுமக்கள் தாழி என்பர்.
6. ஈமப்பேழை (Sarcophagus)
ஈமப்பேழை என்பது, முதுமக்கள் தாழி போன்ற பயன்பாடு கொண்டதே. ஆனால், இந்த வடிவம் தாழி வடிவத்துக்குப் பதிலாக, செவ்வகப் பேழை அதாவது பெட்டி வடிவம் கொண்ட அமைப்பாகும். இவையும் சுடுமண்ணால் செய்யப்படுபவையே. இதன் மேல் பகுதியில், ஆட்டு உருவ அமைப்பு அல்லது விலங்குகளின் உருவ அமைப்புபோல் அமைக்கப்பட்டிருக்கும்.
7. கேரளா பகுதியில் காணப்படும் தொப்பிக்கல் வகை (Hat Stone or Umberella Stone)
கேரளா மாநிலத்தில் மட்டும் காணப்படும் வகையாகும். இந்த வகை புதைகுழி அமைப்பானது, ஒரு பெரிய தொப்பி போன்ற பெரிய கல்லை புதைகுழியின் மீது வைத்து உருவாக்கப்படும் அமைப்பாகும். அதனால், தொப்பிக்கல் அல்லது குடைக்கல் என்று இவ்வடிவங்கள் அழைக்கப்படுகின்றன.
8. நினைவுக்கல் என்ற குத்துக்கல் (Menhir)
நீண்ட நெடிய ஒழுங்கற்ற ஒரு கல்லை நட்டு வைத்த அமைப்பு இவ்வாறு குறிக்கப்படுகிறது. இவ்வமைப்பின் காரணமாகவே, இவ்வகை நினைவுச் சின்னத்தை நெடுங்கல் அல்லது குத்துக்கல் என்றழைப்பர். நினைவுச் சின்ன வகைகளிலேயே குத்துக்கல் மட்டுமே தனித்த பெரிய கல்லைக்கொண்டு அமைக்கப்படுவதாகும். சில இடங்களில், இவ்வகை குத்துக்கற்களைச் சுற்றி கற்குவை காணப்படும். அவற்றோடு கல்வட்டமும் காணப்படும். இவை இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் காணப்படும் வகையாகும். தமிழகத்தில் பல இடங்களில் தொகுப்பாகக் காணமுடிகின்றது. தருமபுரி மாவட்டம், திருமல்வாடியில் இதுபோன்ற குத்துக்கல் வகை ஒன்று உள்ளது. இன்றைய ஈரோடு மாவட்டம் கொடுமணலிலும் இவ்வகை ஈமச்சின்னங்களைக் காண முடிகிறது.
(தருமபுரி மாவட்டம், திருமல்வாடி குத்துக்கல்)
ஆந்தோராமார்பிக் மென்கிர் (Anthromorphic Menhir)
இவையும், குத்துக்கல் வகையைச் சார்ந்தவையே. இவற்றையும் குத்துக்கல் வகையில் ஒன்றாகவே வகைப்படுத்துவர். தமிழகத்தில், இரண்டு இடங்களில் இவ்வகை ஈமச்சின்னங்கள் கண்டறியப்படுள்ளன. இவை, தாய் தெய்வ வழிபாட்டின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.
பெருங் கற்படைச் சின்னங்களும் ஆய்வாளர் கருத்துகளும்
ஏ. சுந்தரா என்பவர், கர்நாடகாவில் காணப்படும் பெருங் கற்படைச் சின்னங்களை ஆய்வு செய்து, அவை தென்னிந்தியப் பண்பாட்டோடு எவ்வாறு தொடர்புடையதாக அமைந்துள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.*10 பி. நரசிம்மய்யா அவர்கள், வடதமிழகப் பகுதிகளான தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படும் பெருங் கற்கால மக்களின் பண்பாட்டு நிலைகளையும், அவற்றின் வளர்ச்சி நிலைகளையும் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்.*11 இவற்றில் நுண் கற்காலம், புதிய கற்காலம் குறித்தும், ஆங்காங்கே காணப்பட்ட தொல்லியல் தரவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொடுமணல் என்ற இடத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகமும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் அகழாய்வுகள் மேற்கொண்டன. க. ராஜன், இவ்வாய்வு குறித்த ஆய்வுத் தொகுப்பை நூலாக வெளியிட்டுள்ளார்.*12 மேலும், தமிழகத்தில் மேற்கொண்ட அண்மைக்கால பெருங் கற்படைக் கால அகழாய்வுகளான ஆண்டிப்பட்டி*13, நெடுங்கூர்*14, செம்பியன் கண்டியூர்*15, தாண்டிகுடி*16, பொருந்தல்*17, தலைசெங்காடு ஆகிய அகழாய்வுகளின் தரவுகளின் அடிப்படையில், இங்கு பெருங் கற்படைக் கால பண்பாட்டு நிலைகள் விளக்கப்படுகின்றன.
தமிழகத்தில், இப்பண்பாடு நிலவியல் அடிப்படையில், இடத்துக்கு இடம் வேறுபட்டும் காணப்படுகின்றன. இருப்பினும், புதைகுழிகளில் காணப்படும் தொல்பொருட்களின் அடிப்படையில், இவை சமகாலத்தவை என தொல்லியல் சான்றுகள் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. பெருங் கற்காலச் சின்னங்கள், கீழ்க்கண்டவாறு பகுத்து அறியப்பட்டுள்ளது. ஈமச்சின்னங்களை வகைப்படுத்தும்போது, அவற்றின் தரைமேற்கட்டமைப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவற்றை முறையாக வகைப்படுத்த முடியாது. அவற்றுள் புதைந்துள்ள உள்கட்டமைப்பையும் கருத்தில் கொண்டுதான் முறையான வகைப்பாட்டை செய்யமுடியும். அதனால், மேற்பரப்பு மற்றும் உள்கட்டமைப்பு அமைப்புகளைக் அடிப்படையாகக் கீழ்க்கண்டவாறு பகுத்தளித்துள்ளனர்.
அ. உட்கட்டமைப்பு
1. முதுமக்கள் தாழி (Urn Burial)
2. ஈமப்பேழை (Sarcophagus)
ஆ. மேற்பரப்பு
3. கல்வட்டம் (Cairn Circle)
4. கற்பதுக்கை (Cist Burial) கல்திட்டை (Dolmen)
5. கற்குவை (Cairan heap)
இ. மேற்பரப்பு மற்றும் உள்கட்டமைப்பு
6. குத்துக்கல் (Menhir)
7. தொப்பிக்கல் (Cap Stone)
இவற்றை காலவாரியாகப் பகுத்தல் இயலாது. அதாவது, ஒன்றை அடுத்து ஒன்று தோற்றம் பெற்றன எனக் கூற முடியாது. இந்த அனைத்து வடிவங்களும், ஒரே காலகட்டத்தில் இருந்திருத்தல் வேண்டும். ஈமச்சின்னங்களுக்கு இடையிலான இவ்வேறுபாடுகள், நிலவியல் மற்றும் புவியியல் அடிப்படையில் அமைந்தன என்ற கருத்து உண்டு. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், மேற்கண்ட அனைத்து வகை ஈமச்சின்னங்களிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பல அரிய தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இத்தொல்பொருட்கள், காலத்தால் ஒன்றுபட்டுக் காணப்படுவதால், இவை அனைத்தும் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவைகளாகக் கருதினர். குத்துக்கல் என்பது ஒரே ஒரு உயரமான பெரிய கல்லை நட்டுவைத்தல் ஆகும். நாளடைவில், இக்குத்துக்கல்லை பலகைக்கல் வடிவத்திலும், தலைப்பகுதி அரைவட்ட வடிவிலும் அமைத்தனர். எனவே இதன் தொடர்ச்சிதான் நடுகல்லின் ஆரம்பம் என்ற கருத்தும் உள்ளது. ஆகவே, குத்துக்கல் வடிவமானது, பெருங் கற்படைப் பண்பாட்டின் பிந்தைய காலங்களில் வந்த ஒன்று எனக் கொள்ளுதல் எளிது.
இங்கு, பெருங் கற்படைகளின் அமைப்பும், அவற்றின் அமைப்பு முறைகள் பற்றியும் சுருக்கமாக விவரிக்கப்படுகின்றன. பெருங் கற்படைக் காலச் சின்னங்களின் அமைப்பு மற்றும் கட்டடக் கலை கொண்டு இவை வரிசைப்படுத்தி விவரிக்கப்பட்டுள்ளது.
தாழி (Urn)
இறந்த முதியவர்களை (முதுமக்கள்) வைத்து அடக்கம் செய்தமையால், இதனை ‘முதுமக்கள் தாழி’ என்று அழைத்தனர்.*18 இவற்றின் மேல்பகுதி குறுகியும் உடல் பகுதி பெருத்தும், அடிப்பகுதி குறுகி கூர்மையாகவும் (Pyreform) அமைந்திருக்கும்.
(செம்பியன் கண்டியூர் - அகழாய்வில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தாழி)
(பொருந்தல் - முதுமக்கள் தாழி)
இயற்கையாகக் காணப்படும் களிமண்ணால், பெரிய அளவில் மட்பாண்டத்தை செய்து அதனை நன்கு சுட்டுப் பயன்படுத்தினர். இதன் விளிம்புகள் தடித்தும் உருண்டையாகவும், எளிதில் தூக்கிச் செல்வதற்கு ஏற்ப கைப்பிடியைப்போல அமைக்கப்பட்டிருக்கும். இம்மட்கலன்கள் உள்ளே இறந்தவர்களின் உடல் அல்லது அவர்களது எலும்புகளையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் வைத்து அடக்கம் செய்வது வழக்கம். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் அதிக அளவில் காணப்படும் ஈமச்சின்ன வகை தாழியாகும். மண்ணைத் தோண்டி, அக்குழியில் தாழியை வைத்துப் புதைத்துவிடுவர். இவற்றின் வாய்ப்பகுதியை ஒரு மட்பாண்ட மூடி அல்லது கற்பலகையைக் கொண்டு மூடிவிடுவர். இதன் கழுத்து, உடல் பகுதிகளில் கோடுகளாலும், கைவிரல் பதிவுகளை (Thump Impression) அழுத்தி அலங்காரம் செய்துள்ளனர். சில இடங்களில், களிமண் ஒட்டுருவம் கொண்டு அணி வேலைப்பாடுகளும் செய்துள்ளனர். இம்முதுமக்கள் தாழி வகைதான், பெருங் கற்காலப் பண்பாட்டில் முதன்முதலில் தோன்றிய ஈமச்சின்ன வகை எனப் பகுக்கலாம். இவை செம்புக் காலத்திலும், புதிய கற்காலத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இதனை ஆரம்பக் காலகட்டத்தில் வந்தவை எனக் கூறலாம். எவ்வித தரைமேற்சின்ன அடையாளமும் இல்லாமல், இவ்வகை ஈமச்சின்னங்கள் பூமிக்குக் கீழே காணப்படுவதை தமிழகத்தில் காணலாம்.
(தருமபுரி அகழ்வைப்பகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழி - புகைப்படம் நன்றி: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை)
ஈமப்பேழை (Sarcophagus)
இது, தாழி போன்ற பயன்பாட்டில் மாறுபட்ட வகை. இவை, நீள்சதுர என்ற செவ்வக உருவம் கொண்டவை. இவை, பெட்டி வடிவில் காணப்படுவதால் ஈமப்பேழை என அழைத்தனர்.*19 இவையும் களிமண்ணால் செய்யப்பட்டு நன்கு சுடப்பட்டு பயன்படுத்தப்பட்டன. ஒரு தொட்டி போன்று செய்யப்பட்டு, அதன் அடிப்பகுதியில் தாங்கி நிற்பதற்கு ஏற்ப பலவரிசைகளில் கால்கள் கொண்டிருக்கும். இவற்றின் அடிப்பகுதி, துளைகளுடன் செய்யப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது. இவற்றை சுடுமண்ணால் ஆன பெட்டி என்றும் சொல்லலாம்.
(பேழை - இருகூர்)
(ஆடு உருவம் கொண்ட ஈமப்பேழை - இடம்: சங்காவரம்)
இவற்றின் மேல் பகுதியில் மூடுவதற்காகச் செய்யப்படும் மூடியில், விலங்கின் தலையைப் போன்ற வடிவத்தை சில பகுதிகளில் அமைத்துள்ளனர். இந்த வகையில், ஆட்டின் தலை உடைய மூடி கொண்ட ஆறு கால்களைக் கொண்ட ஈமப்பேழை வகைகளும் கிடைத்துள்ளன. இதனைக் காணும்பொழுது, பெருங் கற்படைக் கால மக்கள், ஆடு மாடுகளை வளர்க்கும் மேய்த்தல் தொழிலை (Pastoral life) வாழ்வியலாகக் கொண்டிருந்தனர் என்பதை அறியமுடிகிறது.
கல்வட்டம் (Cairn Cirle)
இயற்கையாகக் கிடக்கும் கற்களைச் சேகரித்து, இறந்தவர்களைப் புதைத்த இடத்தைச் சுற்றிலும் வட்டமாக வைத்து அடையாளமிட்டனர். இதனையே கல்வட்டம் எனப் பெயரிட்டு அழைக்கின்றனர்.*20
(நெடுங்கூர் கல்வட்டம் - கற்பதுக்கை)
(கொடுமணல் கல்வட்டம் - கற்பதுக்கை)
இவற்றில், வட்ட வடிவில் உருண்டையான கற்களைப் புதைத்த இடத்தை மையப்படுத்தி, ஈமத்தாழி, ஈமப்பேழை அல்லது கல்லறை போன்றவை அமைக்கப்பட்டிருப்பதைப் பல பகுதிகளில் காணமுடிகிறது.*21 கல்வட்ட அமைப்புகள், புதைக்கப்பட்ட இடத்தை அடையாளப்படுத்தவும், பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டவை ஆகும்.
கல்லறை (Cist Burial)
தரைக்கு மேற்பகுதியில், கற்பலகைகளைக் கொண்டு ஒரு பெட்டி வடிவில் அமைக்கப்படும் அமைப்பாகும். இவற்றில் இரு வகைகள் உண்டு. 1. கற்பதுக்கை (Stone Slab Cist); 2. கல்திட்டை (Dolmon Cist). கற்பதுக்கை அமைப்பு காலத்தால் பிந்தையது என்றும், கல்திட்டை அமைப்பு காலத்தால் முந்தையது என்றும் ஆய்வாளர்கள் கருதுவர்.
(கல்திட்டை - மல்லச்சந்திரம், கிருஷ்ணகிரி மாவட்டம்)
கல்திட்டை (Dolmen)
கல்திட்டை (Dolmonoid Cist), பெரிய பெரிய கற்களைக் கொண்டு, பூமிக்கு மேல் பகுதியில் அமைத்து, மேலே ஒழுங்கற்ற ஒரு பெரிய கற்பலகை கொண்டு மூடுவர். பூமிக்கு உள்ளேயும் கற்பதுக்கைகள் காணப்படுவதுண்டு. சில நேரங்களில், பாதி மறைந்தும், மீதி தரை மீதும் காணப்படும். மலைகளின் மேல் பகுதியிலும், பாறைகளின் மேலேயும் இவ்வகை நினைவுச் சின்னங்களை அமைப்பர். உதாரணமாக, செத்தவரை, மல்லசந்திரம், மல்லசமுத்திரம் போன்ற இடங்களில் காணப்படுவதைக் குறிப்பிடலாம்.
இரண்டு கற்பதுக்கைகள் இணைந்தும், சில இடங்களில் கற்பதுக்கையைச் சுற்றி கற்பலகைகளை நட்டும், சில பதுக்கைகள் நடுவில் பாதை போன்ற அமைப்பு கொண்டும் இருப்பதையும் காணமுடிகிறது. கல்வட்டம் கொண்டும் இவை அமைக்கப்பட்டிருப்பதையும் சில இடங்களில் காணமுடிகிறது.*22 இக்கற்பதுக்கைகளை, நன்கு செதுக்கப்பட்ட கற்பலகைகளைக் கொண்டும் அமைத்துள்ளனர். இவை, அந்தந்தப் பகுதிகளில் காணப்படும் பாறைகளின் தன்மையைக்கொண்டு அமைக்கப்பட்டதாக உள்ளன. இதுபோன்ற கற்பதுக்கைகளில் இடுதுளை ஒன்று கிழக்குப் பக்க பலகைக் கற்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
சிலவற்றில், மேலே வைக்கப்படும் மூடுகற்களில் சிறிய சிறிய குழிகளை (Cup Mark) அமைத்துள்ளனர். இவ்வகை குழிகள் கொண்ட கற்பதுக்கைகள், தருமபுரி மாவட்டம் கருபையனஅள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் வேடர் தட்டக்கல் போன்ற இடங்களில் காணமுடிகின்றது.*23 இவற்றை, விளக்கு எரிக்கவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பயன்படுத்தியிருக்கலாம்.
கற்குவை (Cairn heap)
(கல் வட்டம் – கற்குவை – இடம்: தருமபுரி மாவட்டம், நல்லாம்பட்டி)
ஈமசின்னங்களைப் புதைத்த இடங்களின் மேல் பகுதியில் அடையாளத்துக்காகப் பெரிய பெரிய கற்பலகைகளை ஒழுங்கற்ற நிலையிலும், ஒழுங்கற்ற சிறிய கற்களை நினைவுச் சின்னங்களின் மேல் குவியால் குவியலாகக் குவித்து அமைக்கும் வடிவமாகும். தமிழகத்தில், இதுபோன்ற நினைவுச் சின்னங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. சில இடங்களில் கல்வட்டங்களை அமைத்து அதன் மையப்பகுதியில், சிறிய மற்றும் பெரிய கற்குவியலையும் ஏற்படுத்திய அமைப்பையும் காண முடிகிறது.*24
குத்துக்கல் (Menhir)
ஈமச் சின்னங்கள் மேல் ஓர் ஒழுங்கற்ற உயரமான கல்லை நட்டுவைத்த அமைப்பானது குத்துக்கல் என்று அழைக்கப்படுறது.*25 சில இடங்களில், அழகிய நிலையில், நன்கு அரைவட்ட வடிவில் செதுக்கப்பட்ட தலைப்பகுதி கொண்ட ஒரு பலகைக்கல் ஒன்றை நட்ட அமைப்பையும் காணமுடிகிறது.*26 இவ்வகைக்குச் சான்றாக, தேவனூர் குத்துக்கல்லை குறிப்பிடலாம். இக்குத்துக்கல், ‘புதையுண்ட தமிழகத்தின்’ ஆசிரியரால் களஆய்வில் கண்டு வெளிப்படுத்தப்பட்ட ஒன்று.
(குத்துக்கல், இடம்: கொடுமணல்)
இவ்வகை பலகைக்கல் அமைப்பில், நடப்பட்ட குத்துக்கலே நடுகல் பண்பாடாக உருவெடுத்தது எனலாம். சங்க இலக்கியத் தொகுப்புகளான ‘பத்துப்பாட்டு’ மற்றும் ‘எட்டுத்தொகை’யில், நடுகல் பற்றிய குறிப்புகள் ஏராளமாகக் காணப்படுகின்றன.*27 இதன் தொடர்ச்சியாக, உருவ அமைப்பில் காணப்படும் குத்துக்கல் வகை குறிப்பிடத்தக்கது. இது, மனித வடிவக்கல் (Anthromorpuic Menhir) என்று அழைக்கப்படும் குத்துக்கல் வடிவமாகும்.
இதுபோன்ற குத்துக்கற்கள், தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் உதயநத்தம் மற்றும் வேலூர் மாவட்டம், மோட்டூர் ஆகிய இரண்டு இடங்களில் கிடைத்துள்ளன.*28
(வேலூர் மாவட்டம், மோட்டூர் – ஆன்த்ரோமார்பிக் குத்துக்கல்)
நிலவியல் கூற்றின்படி, தமிழகத்தில் முதுமக்கள் தாழி வகை ஈமச்சின்னங்களே அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. ஆதிச்சநல்லூர், பல தரவுகளை வழங்கிவரும் சிறப்புமிக்க இடங்களில் ஒன்று. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்துள்ளவை, முதுமக்கள் தாழிகள் மட்டுமே. ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளை, முதன்முதலில் பொ.ஆ. 1876-ல், பெர்லினைச் சார்ந்த ஜெகர் என்பவர் பார்வையிட்டு அறிவித்தார்.*29 இங்கு, வேறு எவ்விதமான பெருங் கற்படைச் சின்னங்களும் காணப்படவில்லை. எனவே, இப்பகுதியில் முதுமக்கள் தாழி வகையைச் சார்ந்த பண்பாடு மட்டும்தான் நிலவி இருந்துள்ளது.
தாழிகள் புதையுண்ட இடத்தில், தரைமட்டத்துக்கு மேல் எவ்விதத் தடயமும் இல்லை. ஆனால், தாழிகள் வரிசை வரிசையாகப் புதைக்கப்பட்டிருக்கின்றன என ரே அவர்கள் குறிப்பிடுகின்றார்.*30 பல்வேறுவிதமான தொல்பொருட்கள், ஆதிச்சநல்லூர் அகழாய்வில் சேகரிக்கப்பட்டுள்ளன.
(ஆதிச்சநல்லூர் அகழாய்வில் சேகரிக்கப்பட்ட சில தொல்பொருட்கள்)
(ஆதிச்சநல்லூர் அகழ்வுக்குழிகளில், முதுமக்கள் தாழி வகைகள் வெளிக்கொணரப்பட்ட நிலையில்)
அவற்றில் காணப்படும் மட்கலன்களின் வகைகளையும், தொல்பொருட்களையும் ஒப்பிட்ட ஆய்வாளர்கள், இப்பண்பாடு பெருங் கற்படைக் காலத்தைச் சார்ந்தது எனப் பதிவு செய்துள்ளனர். வடதமிழகத்தில், அதாவது கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் மாவட்டங்களில், தொப்பிக்கல் வகையைத் தவிர அனைத்து வகைப் பெருங் கற்படைக் காலச் சின்னங்களும் காணப்படுகின்றன. பொதுவாக, மலையும் மலை சார்ந்த இடங்களிலும், காடும் காடு சார்ந்த இடங்களிலும் பெருங் கற்சின்னங்கள் அமைக்க, அங்கு எளிதாகக் கிடைக்கும் கற்களைப் பயன்படுத்தி கல்வட்டம், கற்பதுக்கை, கற்குவை, குத்துக்கல் போன்ற பெரிய பலகைக் கற்களையும், ஒழுங்கற்ற கற்களையும் பயன்படுத்தி ஈமச் சின்னங்களை அமைத்துள்ளனர்.*31 நில அமைப்பில், மலைப்பகுதிக்கு அடுத்து காணப்படும் நிலப்பகுதிகளில், முதுமக்கள் தாழி, ஈமப்பேழை போன்றவற்றை அமைத்துள்ளனர். இதிலிருந்து, குறிஞ்சி, முல்லை நிலங்களில் பெருங் கற்படைக் கால சின்னங்கள் கலந்து காணப்பட்டதையும்*32 மருதம், நெய்தல் பகுதிகளில் ஈமப்பேழை மற்றும் தாழி வகைகள் மட்டுமே காணப்படுகின்றன என்பதையும் உணரமுடிகிறது.*33 மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில்தான், பெரிய பெரிய கற்களைக் கொண்டு அமைக்கும் பெருங் கற்படைப் பண்பாடு பரவியிருந்துள்ளது.
மேற்கண்ட சான்றுகள், புதிய கற்கால மக்களின் பண்பாட்டில் இருந்து பெருங் கற்கால மக்கள் நன்கு வளர்ந்து வேறுபட்ட நிலையில் இருந்தனர் என்பதை உறுதிசெய்கின்றன.
மேற்கோள் சான்றுகள்
|
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.