யுத்தபூமி

அத்தியாயம் 29 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 22

தமிழ்ச் சமூகம் அவ்வவ் திணைகளுடன் நிலைபெற்று வளர்ந்ததால், இந்நாகரிகத்தில் மட்டும் இத்திணை வாழ்க்கை முறையை, மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி நிலைகளோடு பார்க்கமுடிகிறது. இதையே, தமிழ் மரபாக / வாழ்வியல் இலக்கணமாகத் தொல்காப்பியம் காட்சிப்படுத்துகிறது.

த. பார்த்திபன்

மோட்டூர் வகை தாய் தெய்வமும், குடிமல்லம் வகை ஆண் தெய்வமும்

ஈமச்சின்ன வகைகளில் தாய் தெய்வம் என்றும், ஆந்த்ரோபோமார்பிக் வடிவம் (Anthropomorphic Menhir), அதாவது மனித உரு சின்னம் என்றும் அழைக்கப்படும் வடிவம் குறிப்பிடத்தகுந்தது. அரிதான இந்த வடிவம், தமிழகத்தில் மோட்டூர் மற்றும் உதயநத்தத்திலும், இன்றைய ஆந்திர மாநிலப் பகுதியாக உள்ள சித்தூர் வட்டத்தில் இரு இடங்களிலும் பெருங் கற்படைச் சின்னங்களுக்கு இடையே காணப்படுகின்றன. மோட்டூரிலும், உதயநத்தத்திலும் இது உள்ளூர் மக்களால் “விசிறிப்பாறை” என்றும் “வாலியர் தெய்வம்” என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்வடிவமானது எவ்வாறு பெருங் கற்படை ஈமச்சின்னங்களின் வரலாற்றிலும், வடிவமைப்பிலும் தொடர்ந்து மேலாய்வு வேண்டும் புதிராக உள்ளனவோ, அதே அளவு தொடர்ந்த மேலாய்வை வேண்டும் மற்றொரு சின்னம், குடிமல்லம் லிங்க சின்னமாகும். தாய் தெய்வக் கற்கள் பெண்ணின் வீரச்சின்னம் எனில், குடிமல்லம் லிங்கம் ஆணின் வீரச்சின்னம் என்பது வெளிப்படை.

தாய் தெய்வக் கற்களின் உருவ அமைதியும், லிங்க தெய்வ உருவ அமைதியும், புதிய கற்காலப் பண்பாடு மற்றும் உலோகக் கற்கால பண்பாட்டுக் காலங்களில் நிலவிய சடங்கு / வழிபாட்டு உருவங்களின் வரலாற்றுக் கால அல்லது இரும்புக் காலத்தின் ஒரு அங்கமான பெருங் கற்படைக் காலத்தின் வெளிப்பாடாக உள்ளது.

மோட்டூர் தாய் தெய்வமும், குடிமல்லமும் ஈமச்சின்னங்களே என்பதை, அவ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் உறுதிசெய்கின்றன. எனில், இரு வடிவங்களும் ஒரு தொன்மை மரபின் மீட்சிதான் என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்வோம்.

புதிய கற்காலத் தாய் தெய்வங்களின் உருவ அமைதி

மோட்டூர் மற்றும் உதயநத்தம் தாய் தெய்வக் கற்களின் உருவ அமைதியை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள புதிய கற்காலப் பண்பாட்டில் நிலவிய தாய் தெய்வ வழிபாட்டில், சடங்கில் பயன்படுத்தப்பட்ட மண் உருவங்களின் உருவ அமைதியைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. (இந்த உருவ அமைதியின் ஒப்பாய்வு, முதன்முதலாக திரு. ச. செல்வராஜ் அவர்களால் “புதையுண்ட தமிழகம்” தொடரில் செய்யப்பட்டுள்ளது. பார்க்க: தினமணி தொல்லியல்மணி, புதையுண்ட தமிழகம் தொடர், அத்தியாயங்கள் 8, 9 மற்றும் 10. http://www.dinamani.com/tholliyalmani/pudhaiyunda-thamizhagam/).

இவ்வடிவங்களில், தலையும் முகமும் தனித்தும் சிறப்பாகவும் காட்சிப்படுத்தப்படுவதில்லை. அகன்று விரிந்த தோள்களுக்கு மேல், சிறிய அரைவட்ட வடிவமான முளைப்பாகவே தலைப்பகுதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தாய் தெய்வ சுடுமண் உருவம் - மோதூர்

தாய் தெய்வ சுடுமண் உருவம் - கர்-இ-மார் (Gar-I-Mar) ஆப்கனிஸ்தான்

தருமபுரி மாவட்டம் மோதூரில் கிடைத்த தாய் தெய்வத்தின் உருவம் போன்று, பண்டைய நாகரிகங்கள் செழுமையாக இருந்த ஆப்கனிஸ்தான் உள்ளிட்ட வடமேற்கு ஆசியா பகுதி மற்றும் துருக்கி நாட்டுப் பகுதிகளிலும் கிடைத்துவருகின்றன. புதிய கற்காலப் பண்பாட்டின் வளமை வழிபாட்டில் வழக்கில் இருந்த இந்த உருவங்கள், அக்கால மக்களின் வளமை குறித்த சிந்தனை மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடாக உள்ளன.

அகன்று விரிந்த தோள் வீரத்தின் அடையாளம். (ஆணுக்கு உரிய உருவ அமைதி; ஆண்மையின் குறியீடு என்பது பிற்காலத்தில் புகுத்தப்பட்ட பொருளாகலாம்). மனித உரு தாய் தெய்வத்திலும் அகன்று விரிந்த தோள் காட்சிப்படுத்தப்படுவதில் இருந்து, இது வீரத்தாயின் உருவம் என்பது புலனாகிறது.

இரண்டு வேவ்வேறு தாய் தெய்வ வடிவங்களைப் புதிய கற்காலப் பண்பாட்டிலிருந்து கிடைக்கப்பெறுகிறோம். ஒன்று, மேலே விவரிக்கப்பட்ட அகன்ற தோள் சித்தரிப்பு. மற்றொன்று, பருத்த மார்பகங்கள், பெருத்துச் சரிந்த வயிறு மற்றும் திரட்சியான புட்டங்கள் சித்தரிக்கப்பட்ட வடிவம். பருத்த மார்பகங்கள், பெருத்துச் சரிந்த வயிறு மற்றும் திரட்சியான புட்டங்கள், உற்பத்தி / சந்ததிப் பெருக்கத்தின் பொருளைச் சுட்டும் வளக் குறியீடுகள். இவ்விரு வகை பெண் தெய்வ வடிவங்களும், வழிபாட்டிலும் சடங்குகளிலும் இடம்பெற்றன. துவக்கத்திலும், அவ்வுருவத்தின் தாக்கத்தின் காரணமாக பிற்காலத்திலும், இவ்விரு வடிவங்களிலும் தோள்களுக்கு மேல் சிறிய அரைவட்ட வடிவமான முளைப்பாகவே, முகம் தனித்து அடையாளமாகாத தலைப்பகுதி இடம்பெறுகின்றன.

இவ்விரு வடிவங்களின் முழுமையான ஆதிப்பொருளை அடைய, மனித இனத்தின் பரிமாண வளர்ச்சி நிலைகளூடே பயணப்பட வேண்டியுள்ளது.

வேட்டைச் சமூகத்தில், தலைமைப் பண்பு காரணமாகவும், வீரப்பண்பு காரணமாகவும் வணங்கப்படும் நிலைக்கு பெண் உயர்ந்திருந்தாள். இக்கால வேட்டைச் சமூகம் என்பது, குடியும் குழுவும் புராதனமாக இருந்த ஆதிப் பொதுவுடைமைச் சமூகமாகும். வரலாற்றுக் காலகட்டங்களில், வேட்டைச் சமூகமாக நாம் காண்பது, ஆண் தலைமை பூண்டிருந்த பண்டைய வேட்டைச் சமூகத்தின் எச்சமாக உள்ள நிலையாகும். வரலாற்றுக் கால வேட்டைச் சமூகத்தில், வேட்டையிலும் போரிலும் வெற்றியைத் தருபவளாக, வெற்றியை உறுதிசெய்பவளாக, வணக்கத்துக்குரியவளாக பெண் விளங்குகிறாள்.

வேட்டைச் சமூகத்தில், வேட்டையின் வெற்றி மூலம் வளமை தருபவளாகப் பெண் இருக்கிறாள். வேட்டைச் சமூகத்தில் இருந்து ஆண் தலைமையில் கிளை பிரிந்த மேய்த்தல் சமூகத்தில், போர் வெற்றி மூலம் வளமை தருபவளாகப் பெண் இருக்கிறாள். ஆக, இவ்விரு பண்பாட்டுக் காலகட்டங்களிலும், கொடிய ஆயுதங்கள் ஏந்தியவளாகவும், அச்சமளிக்கும் தோற்றத்தை உடையவளாகவும், கொடிய புலி, சிங்கம், எருது, கழுதை போன்ற கொடிய / காட்டு விலங்குகளை வாகனமாகக் கொண்டவளாகவும் பெண் காட்சியாகிறாள்.

புதிய கற்காலப் பண்பாட்டில், வேளாண் சமூகத்தில் உற்பத்திப் பெருக்கத்தின் காரணமாக, வளமையைத் தருபவளாகப் பெண் இருக்கிறாள். உணவு, பொருள் மற்றும் சந்ததி வளம் அளிக்கும் இக்காலத்திய பெண், இனிமையான தோற்றம் கொண்டவள், ஆயுதம் பூணாதவள். வழிபாட்டிலும் / சடங்கிலும் இவளது தோற்றம் பருத்த மார்பகங்கள், பெருத்துச் சரிந்த வயிறு மற்றும் திரட்சியான புட்டங்கள் கொண்டவளாகக் காட்சிப்படுத்தப்பட்டாள். இச்சித்தரிப்புகள், இனப்பெருக்கம் மற்றும் வளமைப் பெருக்கத்தின் குறியீடுகள். துவக்கத்தில், இக்குறியீட்டுப் பொருள் முதன்மையாக இருக்கும்போது, தலையும் முகமும் காட்சிப்படுத்தப்படவில்லை.

சிந்துவெளியில் கிடைத்த, திரட்சியான புட்டத்துடன் சித்தரிக்கப்பட்ட தாய் தெய்வம் - சுடுமண் சிற்பம்

சிந்துவெளியில் கிடைத்த, பல்வேறு வடிவங்களில் சித்தரிக்கப்பட்ட தாய் தெய்வ சுடுமண் சிற்பங்கள்

வடமேற்கு ஆசியா பகுதிகளில் கிடைத்த தாய் தெய்வ உருவங்கள்

தாய் தெய்வத்தின் தலை / முகம் காட்சிப்படுத்துதல் துவக்கிய காலத்திலும், தெளிவான சிறு தலையும், தெளிவற்ற முகமும் கொண்டவளாகவே காட்சிப்படுத்தப்பட்டாள் என்பது முன்னர் விளக்கப்பட்டது. தெளிவான முகம் காட்சிப்படுத்தத் துவங்கிய காலத்தில், வளக்குறியீட்டுப் பொருளைச் சுமந்துவந்த மிகைச் சித்தரிப்புகள், இயல்பான வடிவத்தை மெல்ல மெல்ல அடைகின்றன. படிப்படியாக நிகழ்ந்த இந்த மாற்றத்தில், வளக்குறியீடான மிகைச் சித்தரிப்புகளின் தாக்கம், நம்மிடையே ‘மூத்ததேவி - மூதேவி’ உருவச் சித்தரிப்பு வரை காணமுடிகிறது. மாற்றத்தின் ஊடாக, தாமரைப் பூ போன்ற மெல்லிய மிருதுவானவை இக்காலப் பெண்ணின் பீடமாகக் கொள்ளப்படுகின்றன.

பழைய கற்காலத்தில், மேல்நிலைப் பழைய கற்காலத்தில்  வேட்டைச் சமூகம், மேய்த்தல் சமூகம் என மனித இனம் கிளை பிரிய, வேட்டைச் சமூகமானது குறிஞ்சி நிலம் சார்ந்த வேட்டுவச் சமூகமாகவும், நெய்தல் நிலம் சார்ந்த வேட்டுவச் சமூகமாகவும், நிலம் மற்றும் நீர் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்ட சமூகங்களாக இரண்டாகப் பிரிந்து வளர்ந்தன. நிலத்தை ஆதாரமாகக் கொண்ட வேட்டுவச் சமூகத்தில் இருந்து முதலில் மேய்த்தல் சமூகம் பிறந்தது. அவர்களுக்கு முல்லை நிலம் ஆதாரமாக ஆயிற்று. புதிய கற்காலத்தில், முல்லை நில மேய்த்தல் சமூகத்தில் இருந்து மூன்றாவதாக வேளாண் சமூகம் கிளை பிரிந்தது. நெய்தல் நில வேட்டுவச் சமூகத்தின் ஒரு கிளையும் வேளாண் சமூகத்தை உருவாக்கியது.

மனித இனத்தில் நால்வகை நிலங்களும், அதன் திணை வாழ்க்கையும், திணை வாழ்க்கை உருவாக்கிய திணைச் சமூகங்களும் இவ்வாறுதான் தோற்றம் கொண்டன என்பதை தொகுத்துக்கொள்ள முடிகிறது. இதனூடே, திணை நிலங்களின் இயல்பு திரிபு காரணமாகத் தோன்றும் பாலைத் திணையும், அதன் வாழ்வியலும் வெளிப்பட்டன. உலகின் பல பகுதிகளில் தோன்றிய பண்டைய நாகரிகங்கள் கால ஓட்டத்தில் அழிந்துபட அல்லது ஒன்றின் மீது ஒன்று கட்டமைக்கப்பட, ஆங்கே நான்கு திணைகளையும், திரிந்த பாலைத் திணையையும் அடையாளம் காண்பது தெளிவற்ற செயலாகிறது. தமிழ்ச் சமூகம் அவ்வவ் திணைகளுடன் நிலைபெற்று வளர்ந்ததால், இந்நாகரிகத்தில் மட்டும் இத்திணை வாழ்க்கை முறையை, மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி நிலைகளோடு பார்க்கமுடிகிறது. இதையே, தமிழ் மரபாக / வாழ்வியல் இலக்கணமாகத் தொல்காப்பியம் காட்சிப்படுத்துகிறது.

பண்டைய இந்தியாவில், மனித உரு தாய் தெய்வத்தின் (ஆந்த்ரோபொமார்பிக் - Anthropomorphic Mother Goddess) சின்னங்களை சிந்துவெளி நாகரிகத்தில் இருந்தே பெறுகிறோம்.

சிந்துவெளி - மனித உரு தாய் தெய்வம்

சிந்துவெளி - மனித உருவும் விலங்குத் தலையும் கொண்ட தாய் தெய்வம்

தொன்மையான காலத்தில் இருந்தே மீன், முதலை, ஆமை போன்ற விலங்குகளும், பறவை உருவங்களும் மனித இனத்தினரிடையே வளமைக் குறியீடுகளாக இடம்பெற்றிருந்தன. இந்தவகையில், மேலே வழங்கப்பட்டுள்ள சிந்துப் பகுதியில் கிடைத்த உலோகத்தால் ஆன முதலைத் தலை - மனித உரு தாய் தெய்வம், வளமை குறித்த மனிதச் சிந்தனையின் போக்குகளை அடையாளம் காட்டுவதாக உள்ளது.

இந்தப் பின்னணியில், கீழ்வாளை ஓவியம் காட்சிப்படுத்தும் பறவை முகம் கொண்ட மனித வடிவங்கள், வளக்குறியீடாகவும் பொருளைப் பெறுகின்றன.

இந்தியாவில், ஆக்ராவுக்கு அருகில் உள்ள மொராதாபாத்தின் மதார்ப்பூரில் (AGRA circle, Madarpur in Moradabad) ஒரே பானையில் கிடைத்த 31 செப்பு உலோக மனித உரு தாய் தெய்வச் சின்னங்கள், இவ்வடிவம் பண்டைய காலத்தில் பரவலாகப் பெற்றிருந்த செல்வாக்கைக் காட்டுகிறது.

புதிய கற்காலப் பண்பாடு தோற்றுவித்த இந்தச் சிந்தனை, இரும்புக் காலத்தில் பெருங் கற்படைப் பண்பாட்டிலும் வெளிப்பட்டுள்ளது என்பதையே மோதூர், உதயநத்தம் போன்ற பெருங் கற்படைச் சின்னங்கள் உணர்த்துகின்றன. இவை மு.பொ. 5-ம் நூற்றாண்டைச் சார்ந்தவை எனக் கணக்கிடக்கப்பட்டுள்ளன.

மோட்டூர் சின்னம்

மோட்டூர் ஈமச்சின்னம், பேழைக் கல்பதுக்கை வகை கூட்டுவடிவத்தில் மூன்று பலகைக் கல் வட்டங்கள் அலங்கார / அரணுருப்பாக இடம் பெற்றது. வெளி இரண்டு கற்பலகை வட்டங்கள் இயல்பானவை. மூன்றாவது உள் வட்டத்தில், தெற்கு திசை பார்த்த அளவில், பெரிய பலகைக் கல்லே மனித உரு பெற்ற தாய் தெய்வக் கல்லாகும்.

மோட்டூர் தாய் தெய்வம் 3.25 மீட்டர் உயரம் கொண்டது. அகலமும் 3.25 மீட்டராக உள்ளது. திரண்டு வளைந்த கரங்கள் 0.92 மீட்டர் நீளம் உள்ளது. தோள்களுக்கு மேல் சிறிய அரைவட்ட வடிவமான முளைப்பாக தலைப் பகுதி இடம்பெற்றுள்ளது. கால் பகுதி தனித்துக் காட்டப்படாது உள்ள நிலை, உருவத்துக்கு அமர்ந்த நிலையை வழங்குகிறது. இப்பலகைக் கல் உறுதியாக நிற்க, 0.75 மீ. ஆழத்தில் இரு பக்கமும் தாங்கு கற்கள் நிரவலுடன் நடப்பட்டிருக்கின்றன.

உதயநத்தம் சின்னம்

உதயநத்தம் ஈமச்சின்னம் 3 மீட்டர் உயரம் கொண்டது. உருளைக் கல் வட்டத்தின் ஒரு பகுதியாக இப்பலகைக் கல் தாய் தெய்வம் என்ற மனித உரு இடம்பெற்றுள்ளது.

உதயநத்தம் - தாய் தெய்வம்

குடிமல்லம் ஆண் தெய்வம்

ஆந்திர மாநிலம், காளஹஸ்தியிலிருந்து 21 கி.மீ. தொலைவில் குடிமல்லம் என்ற ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள, மு.பொ. 3-ம் நூற்றாண்டு அல்லது 2-ம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படும் 5 அடி உயரம் கொண்ட ஈமச்சின்னம், தொன்மையான லிங்க வடிவமாகவே வணங்கப்பட்டு வருகிறது.

இச்சின்னம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. கல்வெட்டோ, வேறு ஆவணங்களோ இல்லாத நிலையில், சைவ சமயத்தின் லிங்க வடிவமாகவே இச்சின்னம் கருதப்படுவதில் வியப்பில்லை.

இவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு, இச்சின்னம் ஒரு ஈமச்சின்னம் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதன் காலகட்டம், இது பெருங் கற்படைக் காலத்துடன் ஒத்துப்போகிறது. எனில், இதனை முதலில் பெருங் கற்படைச் சின்னத்தின் குணங்களுடனும், அக்காலத்தில் இப்பகுதியில் நிலவிய சிந்தனை மரபுடனும் பார்க்க வேண்டிய அவசியத்தை உருவாக்குகிறது.

மோட்டூர் வகை தாய் தெய்வக் குறிப்புகளூடே கண்ட வளக்குறியீட்டுப் பொருளும், சிற்ப வெளிப்பாடும், இங்கும் மிகச் சரியாகப் பொருந்தும் காரணியாகின்றன. பெண் அல்லது தாய் சார்ந்த பொருள், குடிமல்லத்தில் ஆண் வளக்குறியீடாக வெளிப்பட்டுள்ளது.

தாய் தெய்வத்தில் மிகையாகப் பருத்த மார்பகங்கள், பெருத வயிறு, திரண்ட புட்டங்கள் வளக்குறியீடானதுபோல், குடிமல்லத்தில் ஆண் உறுப்பு மிகையாகக் குறியீடாக்கப்பட்டுள்ளது.

(குடிமல்லம் - பெருங் கற்படைச் சின்னம்)

இரண்டு கைகள் கொண்ட இந்த ஆண் உருவம், ஆண்குறியின் முன்புறமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வலது கரத்தில் ஆடு அல்லது ஆட்டுக்கிடா ஒன்றை அதன் பின்னங்கால்களைப் பிடித்துள்ளபடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இடது கரம், தோளோடு தொங்கும் ஒரு வில்லை, அதன் நாணுக்கும் பிறைவடிவ கழிக்கும் இடையில் நுழைந்து, வில்லின் கீழ்ப்பகுதிக்கு சற்று மேலாகப் பிடித்தபடி உள்ளது.

கால்களைப் பின்புறமாக மடக்கியும், மடக்கிய கைகளை கால்களின் முட்டியில் ஊன்றியும் அமர்ந்ததுபோலும், தன் மீது ஏறியுள்ள பாரத்தால் முன்தள்ளிய முதுகுடனும், வலிகொண்ட முகபாவத்துடன் உள்ள குள்ள மனிதனின் தோள் மீது நின்ற நிலையில் ஒரு ஆண் உருவம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முட்டி மீது ஊன்றிய கைகள், பாரத்தைத் தாங்க உதவும் நிலையில் உள்ளதாகக் கருதலாம்.

இந்தச் சித்தரிப்பைக்கொண்டு குடிமல்லம் ஆண் உருவத்தை, முயலகன் மீதுள்ள நடராஜர் வடிவமாகக் கருதுபவர்களும் உண்டு. குள்ள மனிதனின் காதுகள், கூர்முனை கொண்ட வௌவாலின் காதுகள் தோற்றத்துடன் உள்ளது. கன்னத்தில் அழுத்தமாகக் கோடுகள் காட்டப்பட்டுள்ளன. முகத்தில் கோழைத்தனம் கூடிய இளிப்போ அல்லது தோல்வியின் விரத்தியோ வெளிப்படுவதாக உள்ளது. இரு வரிசைப் பற்களும் வெளித்தெரிய உள்ள இந்த உருவத்தின் தலை அலங்காரமும், அணிமணிகளின் காட்சியும் நல்ல ஒப்பனையுடன் உள்ளன.

பொதுவாக, லிங்கத் திருமேனி என்பது லிங்கம் என்ற தண்டும், யோனி என்ற பீடமும் இணைந்த அமைப்பே ஆகும். சிற்பச் செந்நூல், பலவகையான நாகர, திராவிட, வேசர லிங்கங்கள் உட்பட பலவேறு வகைப்பட்ட லிங்கத் திருமேனிகளின் உருவங்களை அளிக்கிறது. சமயம் சார்ந்த லிங்க வடிவத்தில், பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் என்ற அமைப்பு கொண்டது எனவும் விளக்கப்பெறுவது உண்டு. சமய விளக்கங்கள் கூடிய முகலிங்கங்கள், தண்டும் யோனியும் இணைந்தே சித்தரிக்கப்படும்.

இப்பின்னணியில், ஆண்குறி வடிவம் கூடிய தண்டில் மட்டும் இடம்பெறும் உருவங்கள், சமயம் சாராத குறியீட்டுப் பொருளைப் பெற்றவை என்றே கருத வேண்டும். அது வளமையின் குறியீட்டுப் பொருளே என்பதைவிட வேறு பொருள் பொருத்தமுடையதாக இல்லை. 

சிந்துப் பகுதியில் அறியப்பட்ட லிங்கம்

எனில், ஆண்குறி வழிபாடு, பெண்குறி வழிபாடு என்பவை வளமை குறித்த சிந்தனைகளின் வெளிப்பாடாகவே உள்ளன எனலாம். தொல்சமூகங்களின் வளமைச் சடங்குகளில், ஆண்குறி வழிபாடு, பெண்குறி வழிபாடு இடம் பெறுவது இப்பொருளின் அடியொற்றியே.

ஆதியில், சமயம் சாராத வளமைச் சடங்குகள் பிற்காலத்தில் சமயத்துள் இடம்பெற்றன. அது பிற்கால வரலாறே அன்றி, எக்காலத்துக்கும் உரிய வரலாறு அல்ல.

இப்பின்னணியில், பெருங் கற்படைச் சின்னங்களில் பெண்ணுக்கு எழுப்பட்ட சின்னங்களும் உண்டு என்பதை மோட்டூர், உதயநத்தம் சின்னங்கள் சான்றாக உள்ளன.

மனித உரு செதுக்கம் முதல் சிற்ப வெளிப்பாடு எனில், அது தாய் தெய்வமாக உள்ளது. குடிமல்லம் ஆண் தலைமைப்பண்பை காட்டுகிறது எனில், மோட்டூர் வகை பெண் தலைமையைக் காட்டுகிறது என்ற ஒரு கொள்கை முடிவுக்கு வரவேண்டியவர்களாக இருக்கிறோம்.

புதிய கற்காலத்திலும், உலோகக் காலங்களிலும், பெண் போர் / வேட்டை தெய்வங்கள் எழுந்தன என்பதற்குச் சான்றாக, சிந்தவெளி நாகரிகத்தின் பல முத்திரைகள் சான்றாகின்றன. இவை, மோட்டூர் வகை தாய் தெய்வங்களின் உருவாக்கத்தை சரியாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரமாமுனிவா் தமிழாய்வு மன்ற விழா

காலத்தால் அழியாத புகழ் கொண்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா்: வைகோ

முல்லைப் பெரியாறு அணையில் மழை

சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது

முள்ளம்பன்றி வேட்டையாடியவா் கைது

SCROLL FOR NEXT