யுத்தபூமி

அத்தியாயம் 25 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 18

இரும்பின் பயனை முழுமையாக அறிந்துகொண்டிராமல், மல்லச்சந்திரம் வகைக் கல்திட்டைகளை உருவாக்கியிருக்க முடியாது. இதற்கான கற்பலகைகளை இவ்வளவு நேர்த்தியாகவும், சமகனம் கொண்டவையாகச் செதுக்கவும், அரை வட்ட வடிவமாக வெட்டி எடுக்கவும் இரும்பின் பயன்பாடு மிகுதியாக அறியப்பட்ட நிலை நிலவியிருக்க வேண்டும். எனில், இதன் காலம் இரும்புக் காலத்தின் மத்தியக் காலகட்டமாக இருக்கும் எனலாம்.

த. பார்த்திபன்

மல்லச்சந்திரம் கல்திட்டைகள் (தொடர்ச்சி)

தற்கால கோட்டை மற்றும் கோயில்களுக்கு முன் மாதிரியாக விளங்குபவை எனக் குறிப்பிடத்தகும் மல்லச்சந்திரம் கல்திட்டைகளில் காணப்படும் ஐந்துக்கும் மேற்பட்ட வடிவங்களில் ஒரு வடிவம் குறித்து சென்ற அத்தியாயத்தில் கண்டோம். இனி பிற வடிவங்கள் குறித்துக் காண்போம்.

கல்திட்டை வகை 2

இரண்டாம் வகைக் கல்திட்டையின் கல்லறையும், நான்கு சம வடிவிலான பலகைக் கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு பலகைக் கற்களும் ஒன்றை ஒன்று தாங்கிப் பிடித்துக்கொண்டு நிற்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன. இது இதற்கு “ஸ்வஸ்திகா” அமைப்பை தருகிறது. கல்லறையின் மூடுகல்லாக ஒரு பலகைக் கல்லைக் கொண்டுள்ளது.

இங்கு பயன்படுத்தப்பட்ட பலகைக் கற்களின் கனம் 0.15 மீட்டர் உள்ளது. இவற்றின் உயரம் 2.50 மீட்டர், அகலம் 2.00 மீட்டர் அளவிலும் உள்ளன. கிழக்குப்புறத்தில் உள்ள கற்பலகையில், வட்டவடிவ இடுதுளை செதுக்கப்பட்டுள்ளது. இந்த இடுதுளையின் முன்புறம் சுமார் 1.00 மீட்டர் அகலமும் சுமார் 2.00 மீட்டர் நீளமும் கொண்ட வாயில் என்ற இடைக்கழி பகுதி அமைக்கப்படுகிறது. இந்த இடைகழியும், மேல்மூடுகல்லாக ஒரு பலகைக்கல் கொண்டு மூடப்பட்டுள்ளது.

கல்திட்டையின் மையமாக அமையும் இக்கல்லறையைச் சுற்றி வட்டவடிவில் கற்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கற்சுவர் அமைப்பு, கல்லறையின் மேல்மூடுகல் வரை உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது. கற்சுவர் அமைப்புக்கும் கல்லறையின் கற்பலகைகளுக்கும் உள்ள இடைவெளியானது, அளவில் சிறிய கற்கள் கொண்டு நிரவலாக அடுக்கப்பட்டுள்ளது. இது, கல்லறைக்கு தாங்கு சுவர் அமைப்பை அளிக்கிறது.

இந்தக் கற்சுவர் அமைப்புடன், நான்கு முனை கொண்ட செவ்வக வடிவிலான கற்பலகைகளைக் கொண்டு ஒரு கற்பலகை வட்டம் அல்லது இரண்டு கற்பலகை வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கற்பலகை வட்டங்கள் கொண்டவற்றில், வெளி வட்டக் கற்பலகை வட்டமானது முதல் கற்பலகை வட்டத்தின் கற்பலகைகளைவிட உயரத்தில் குறைந்தவையாக இருக்கின்றன. இந்த அமைப்புடைய சில கல்திட்டைகளில் மேற்குப்பகுதியானது, ஒன்பது வரிசைகள் கொண்ட கல்லடுக்காகக் காணப்படுகிறது. இந்தக் கல்வரிசை அடுக்கு முறையை “வழக்கமுறை அடுக்கு” (Regular Coarse) என்று குறிப்பிடுவர்.

(கல்லறையின் ஸ்வஸ்திக் அமைப்பு இடுதுளையுடன்)

இந்த வகைக் கல்திடைகளில், ஒரு கற்பலகை வட்டம் இடம் பெற்றிருக்கும் அமைப்பை, “ஒரு கற்பலகை வட்டக் கற்சுவர் வட்டக் கல்திட்டை” என்றும், இரண்டு கற்பலகை வட்டங்களைக் கொண்டுள்ளவற்றை “இரு கற்பலகை வட்டக் கற்சுவர் வட்டக் கல்திட்டை” என்று குறிப்பிடலாம்.

மல்லச்சந்திரம் கல்திட்டை வகையினங்களில், வகை ஒன்று மற்றும் இரண்டில் ஒரு பலகைக்கல் சுற்றுமுதல் அதிகபட்சமாக மூன்று பலகைச் சுற்றுகள்வரை கொண்டவை அடையாளம் காணப்பட்டுள்ளன. கற்பலகை வட்டம் மட்டுமின்றி, வெளிச்சுற்று வட்டமாக கல்வட்டமே உயரம் குறைந்த கற்சுவர் அமைப்பையும், எழுப்பப்பட்ட அமைப்பையும் சில கல்திட்டைகள் கொண்டிருந்தன. இவ்வாறு வெளிச்சுற்று வட்டமாகக் கல்வட்டமே உயரம் குறைந்த கற்சுவர் அமைப்புகள், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்பாக அமைக்கப்பட்ட கல்திட்டைகளும் கொண்டிருந்தன. அதே சமயத்தில், தாங்குசுவர் அமைப்போ, எவ்வகைக் கல்வட்டமோ அற்ற எளிய வடிவ கல்திட்டையும் இங்கு அமைக்கப்பட்டன என்பது கவனிக்கத்தக்க ஒன்றே.

கல்திட்டை வகை 3

மல்லச்சந்திரம் மோரல் பாறையின் மேல் பகுதியில் உள்ள கல்திட்டைகளின் அமைப்பில், இதுவரை ஆய்வுக்கு உட்பட்ட கல்திட்டைகளில் இருந்து, வடிவமைப்பில் சில மாறுபாட்டை கொண்டுள்ளன. இவை, கல்திட்டை வகை 2-ன் அமைப்புபோல் தோன்றினாலும், நுட்பமான சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.

இவ்வகைக் கல்திட்டையின் கல்லறையின் கற்பலகைகள், கல்திட்டை வகை 2-ன் கற்பலகைகள் போலவே உள்ளன. கல்லறையின் மேல் பகுதியானது, ஒரு மூடுகல்லைறையும் கொண்டுள்ளது. இந்த அமைப்பிலும், வட்ட வடிவ இடுதுளையானது, கல்லறையின் கிழக்குப்புற கற்பலகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடுதுளைக்கு முன்புறம், வாயில் என்ற இடைக்கழி 2.9 மீட்டர் நீளத்திலும், 0.80 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாயிலின் மேலே மூடுகல்லுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கற்பலகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கல்திட்டை வகை 2-ன் கட்டட அமைப்புபோல் மையமாக அமைந்துள்ள கல்லறையைச் சுற்றி கற்சுவர் அமைப்பு வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கற்சுவர் அமைப்பு, கல்லறையின் மூடுகல்வரை உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. கற்சுவர் அமைப்புக்கும் கற்பலகைகளுக்கும் இடையேயுள்ள இடைவெளிப் பகுதியானது, சிறிய வகைக் கற்கள் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. இது, கல்லறைக்கு தாங்கு சுவர் அமைப்பை அளிக்கிறது. இந்த அமைப்புடைய சில கல்திட்டைகளில் மேற்குப்பகுதியானது, ஒன்பது வரிசைகள் கொண்ட கல்லடுக்காகக் காணப்படுகிறது. இந்தக் கல்வரிசை அடுக்கு முறையை “வழக்கமுறை அடுக்கு” (Regular Coarse) என்று குறிப்பிடுவர்.

(கல்திட்டையின் கல்லறையைச் சுற்றி எழுப்பப்பட்ட கற்சுவர் அமைப்பு)

(மாதிரி வடிவம் – ஒரு கற்பலகை வட்டக் கல்திட்டை – வடிவம் 1)

(மாதிரி வடிவம் – ஒரு கற்பலகை வட்டக் கல்திட்டை – வடிவம் 2)

கல்திட்டை வகை 4

மோரல் பாறையின் மேல் பகுதியில் மண்ணடுக்கு படிந்த பகுதியில் உள்ள கல்திட்டைகளை நான்காவது கல்திட்டை வகையினமாக வகைப்படுத்தலாம்.

இந்த வகையினக் கல்திட்டைகளின் கல்லறைகளானது, கற்பலகைகள் நிலமட்டத்துக்குக் கீழ் மண்ணில் பாதிப்பகுதியும், நிலமட்டத்துக்கு மேல் பாதிப்பகுதியும் தெரியும் வகையில் அமைக்கப்பட்ட “கல்திட்டை போன்ற கல்பதுக்கை” வகையாகும். இந்த வகையின கல்திட்டை போன்ற கல்பதுக்கையைச் சுற்றி இயற்கையாகக் கிடைக்கும் பெரிய உருண்டைக் கற்களைக் கொண்டு கல்வட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மல்லச்சந்திரத்தில் சில கல்திட்டைகள் உருண்டை அல்லது பலகைக் கல் போன்றவற்றால் ஆன கல்வட்டங்கள் இன்றி தனித்தும் உள்ளன என்பது நினைவுகொள்ளத்தக்கது.

(மாதிரி வடிவம் - கல்திட்டையின் மேல் மூடுகல் அமைப்பும், இடுதுளையும்)

(மாதிரி வடிவம் - கல்திட்டை போன்ற கல்பதுக்கை)

கல்திட்டை வகை 5

மல்லச்சந்திரம் மோரல் பாறையில் அமைந்த பெருங் கற்படைக் கால ஈமச்சின்னங்களில் இன்னொரு சிறப்பு வாய்ந்த வடிவமைப்பு கொண்டதாக இந்த ஐந்தாம் வகையினத்தைக் குறிப்பிடலாம்.

இந்த வகையினக் கல்திட்டைகளில் ஒரு பெரிய கல்திட்டையைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட சிறிய கல்திட்டைகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. பெரிய கல்திட்டையானது, மிகவும் நேர்த்தியான அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வகையினக் கல்திட்டையில், கிழக்குப்புறக் கற்பலகையில் இடுதுளை உள்ளது. அதேபோல, வடபுறத்திலும் இடுதுளை அமைப்பு உள்ளது. இவ்வகையான இரு திசை இடுதுளை அமைப்பு, சில கல்திட்டைகளில் மட்டும் காணப்படுகின்றன.

இந்த வகைத் தொகுப்பான கல்திட்டைகளின் அமைப்பு முறையைக் கொண்டு, இதை ஒரு கூட்டத்தைச் சார்ந்தவர்களின் கல்லறைத் தொகுப்பாகக் கருதலாம் என்பர். பெரிய அளவிலான கல்திட்டை, தலைவனுடையது என்றும்; சிறிய அளவிலான கல்திட்டைகள், குழு உறுப்பினர்களுடையவை என்றும் கருதுவர்.

(தொகுப்பான கல்திட்டைகள் - சித்தரிக்கப்பட்டது)

(கல்திட்டையின் கல்லறையைச் சுற்றியும், பலகை வட்டத்துக்கும் எழுப்பப்பட்ட தாங்கு கற்சுவர் அமைப்பு)

(கல்திட்டையின் கல்லறையைச் சுற்றி எழுப்பப்பட்ட கற்சுவர் அமைப்பு)

(இரு திருச்சுற்றுக் கல்திட்டை - சம அளவு கொண்ட கற்பலகைகள்)

(இரு திருச்சுற்றுக் கல்திட்டை - பெரிய அளவிளான உள்வட்டக் கற்பலகை, சிறிய உயரம் கொண்ட வெளிவட்டக் கற்பலகை கற்பலகைகள்)

(தனி கல்திட்டை)

நீத்தோரை வணங்கும் சிந்தனை மனிதனிடம் எப்போது உருக்கொண்டதோ, அன்றியிருந்து ஈமச்சின்னத்தின் துவக்கம் தொடங்குகிறது என்பது குறித்து முன் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டது. இச்சிந்தனையின் சொந்தக்காரர் யார்? அவர் எங்கிருந்தவர்? எந்த இனத்தை, எந்தக் குலத்தை, எந்தக் குடியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் உலகின் எல்லாப் பகுதி தொல்லியலாளர்களும், தத்துவவாதிகளும் முயன்றுவருகின்றனர். உலகின் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்திய எல்லா நாகரிகத்திலும் இதன் தாக்கம் வலுவாக உள்ளது. சின்னங்களின் புறத்தோற்றத்திலும் இடுபொருட்களின் குணங்களினாலும் எத்தனையோ விதவிதமான வெளிப்பாட்டை கொண்டிருந்தாலும், அடிப்படையான சிந்தனை ஒன்றே. இதன் ஆழமான தாக்கத்தை இந்தியப் பழங்குடிச் சமூகங்கள் சில இன்றும் இப்பண்பாட்டைத் தொடர்வதில் இருந்து அறியமுடிகிறது.  

புறத்தோற்றம் கொண்டு பெருங் கற்படைச் சின்னத்தின் தோற்றமும் பரவலும் இன்று வரையறை செய்யப்பட்டு வருகின்றன. பரவல் குறித்த கொள்கைகள் ஏறத்தாழ ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவுகளை வழங்கியுள்ளன. இம்முடிவின்படி, தென்னிந்திய பெருங் கற்படைக் காலப் பண்பாடு, ஐரோப்பிய / சின்ன ஆசியாப் பண்பாட்டின் தொடர்ச்சியே. ஆனால், அடிப்படையான வித்தியாசம் ஐரோப்பிய / சின்ன ஆசியாப் பகுதிகளில் வெளிப்பட்ட பெருங் கற்படைப் பண்பாடு என்பது புதிய கற்காலப் பண்பாட்டின் ஒரு அங்கமே தவிர தனிப் பண்பாட்டின் வெளிப்பாடு அல்ல. இப்பெருங் கற்படைப் பண்பாடு, அவ்விடங்களில் புதிய கற்காலப் பண்பாட்டு மக்களாலும், செம்புக் காலப் பண்பாட்டு மக்களாலும், வெண்கலக் காலப் பண்பாட்டு மக்களாலும் தொடரப்பட்டன. ஆனால், இரும்புக் காலத்துக்கும், ஐரோப்பிய / சின்ன ஆசியாப் பெருங் கற்படைகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. நாம் தொடர்ந்து இவ்வாறுதான் போதிக்கப்பட்டு வருகிறோம்.

ஆனால், எகிப்திய பிரமிடுகளில் பயனாகியுள்ள இரும்புக் கருவிகள் குறித்த செய்திகள், தொல்லியலாளர்களால் எந்த அளவு உள்வாங்கிக்கொள்ளப்பட்டுள்ளது, அவை ஐரோப்பிய / எகிப்திய உற்பத்தியைச் சாராதவை என்ற முடிவுகளும், அவை தகடூர் நாட்டுக் கஞ்மலை (இன்றைய சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலை) உற்பத்தி சார்ந்தவை என்ற முடிவுகளும், எந்த அளவு உரிய கவனத்துடன் தொல்லியலாளர்களாலும், வரலாற்று ஆசிரியர்களாலும், உலோகவியலார்களாலும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன, இரும்பின் வரலாறு மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது என்ற கேள்விகளுக்கான பதில் அநேகமாக வெற்றிடமாகவே உள்ளது.

உலகின் இரும்பின் வரலாற்றுக்குப் புதிய முகத்தை அளிக்கக்கூடிய இக்கண்டுபிடிப்பு பற்றியும், இந்திய வரலாற்றுக்கு தனிச்சிறப்பு அளிக்கக்கூடிய இச்செய்தி குறித்தும், ஏன் மேலாய்வுகளுக்கு உள்ளாகவில்லை. இரும்புக்காலத்துடன் தொடர்புபடுத்தப்படும் தென்னிந்தியப் பெருங் கற்படைப் பண்பாட்டின் பழைமை, மு.பொ.ஆ. 1500 - 2000-க்கு முற்பட்டது எனில், தென்னிந்தியாவில் இரும்பின் காலமுறை வரலாறு மறுபரிசீலனைக்கு உரியதே.

இக்கேள்வி முக்கியமானது. ஏனெனில், துவக்கம் என்று கருதப்பட்ட ஓரிடத்தில், அப்பண்பாடு மறைந்தொழிந்த காலத்தில் வேறு ஒரு இடத்தில் ஆதியும் அந்தமுமாகத் தொடங்குமா? அல்லது எச்சமாகத் தொடங்குமா? தொடர்ச்சியான வணிகத் தொடர்பும், பண்பாட்டுக் கலப்பும் நிகழ்ந்து வந்தபோது, மறைந்தொழிந்த ஒரு பண்பாடு முழு வீச்சுடன் ஏன் தொடரப்பட்டது? சமகாலத்தில் சமகாலத்தியப் பண்பாடும், தொழில்நுட்பமும்தான், சிந்தனையும் அதன் மேம்பட்ட நிலை கருதி, உற்பத்தி இடத்தில் இருந்து பிற பகுதிகளுக்குப் பரவுமே அன்றி, காலாவதியான ஒன்று பரவாது. மீறிப்பரவியது எனக் கொண்டாலும், பரவிய இடத்தில் நெடுங்காலம் அதாவது 2000 ஆண்டுகளுக்கும் குறையாத செல்வாக்குடன் அத்தனை வலுவுடன் இருக்கும் என்று கருதமுடியாது.

இம்முரணை கணக்கில் கொண்டு பார்க்கையில், நாம் இன்னும் நமது மிகத்தொன்மையான ஈமச்சின்னத்தை கண்டறியாமல்தான் உள்ளோம் என்ற முடிவுக்கு வரவேண்டியவர்களாக உள்ளோம்.

இல்லையெனில், நம்மை நாமே பண்பாட்டுப் பரவல்களுக்கான கால இடைவெளிப் புரிதல் அற்ற தொழில்நுட்ப அறிவின் பரவல் குறித்தும் விழிப்புணர்ச்சி அற்றவர்களாகத்தான் கருதப்பட வேண்டும்.

தரவுகளை ஒருங்குபடுத்தவும், மறுபரிசீலனைக்கும் ஆய்வாளர்கள் முன்வருவார்களா!

இது ஒருபுறம் இருக்க, பெருங் கற்படைச் சின்னங்களின் அனைத்து வடிவமைப்புகளுக்கும் ஐரோப்பிய / சின்ன ஆசியாப் பண்பாட்டிலிருந்து சான்று தேடுவது எந்த அளவு பண்டைக் காலத்திலேயே வெளியுலகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை அறிவிக்கின்றதோ, அதே அளவு எல்லா வடிவங்களும் இறக்குமதி வடிவமைப்புகள் அல்ல என்பதை மல்லச்சந்திரம் வகை கல்திட்டைகள் சான்றாக நிற்கின்றன.

மல்லச்சந்திரம் வகை கல்திட்டைகள் உள்ளூர் வடிவமைப்பும் (Indigenous Plan), உள்ளூர் தொழில்நுட்பமும் (Indigenous Technology), உள்ளூர் வழிபாட்டு மரபுகள் (Indigenous Worship / Adoration Culture) சார்ந்தும் வளர்ந்தவையாக உள்ளன.

இரும்பின் பயனை முழுமையாக அறிந்துகொண்டிராமல், மல்லச்சந்திரம் வகைக் கல்திட்டைகளை உருவாக்கியிருக்க முடியாது. இதற்கான கற்பலகைகளை இவ்வளவு நேர்த்தியாகவும், சமகனம் கொண்டவையாகச் செதுக்கவும், அரை வட்ட வடிவமாக வெட்டி எடுக்கவும் இரும்பின் பயன்பாடு மிகுதியாக அறியப்பட்ட நிலை நிலவியிருக்க வேண்டும். எனில், இதன் காலம் இரும்புக் காலத்தின் மத்தியக் காலகட்டமாக இருக்கும் எனலாம்.

அநேகமாக, கல்லின் தேவையற்ற ஒரு பகுதியை நீக்கி கல்லுக்கு ஒரு வடிவம் தரும் முயற்சி, மல்லச்சந்திரம் வகைக் கல்திட்டைகளின் சிறப்பான வடிவமைப்பில் இருந்து தொடங்குகிறது என்பது மிகையான ஒன்றாக இருக்கமுடியாது. 

குடைவறை பெருங் கற்படை ஈமச்சின்னத்தை பாறைகளிலும், குன்றுகளில் குடைந்து உருவாக்குவதும், கற்பேழைகளை செதுக்கி எடுப்பதும் இதே காலத்தில்தான் உருப்பெற்றிருக்கும் எனலாம். அதாவது, அது இரும்பு ஆயுதங்கள் மட்டுமின்றி சுத்தி, உளி உட்பட பல்வகைப் பயன்பாட்டுக் கருவிகள் (Iron Tools) செய்யப்பட்ட காலகட்டமும்கூட. 

(அடுத்த வாரம், குடைவறைப் பெருங் கற்படைச் சின்னங்கள் பகுதி இடம்பெறும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியா் பங்களிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் மீது வழக்கு

ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் மாசித் திருவிழா திருக்கல்யாணம்

உதவி ஆய்வாளரை தாக்கிய இருவா் கைது

குப்பைக் கிடங்கை இடமாற்றக் கோரி 3-ஆவது நாளாக பொதுமக்கள் பேரணி

SCROLL FOR NEXT