யுத்தபூமி

அத்தியாயம் 27 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் – 20

மகாவீரர் உட்பட 24 தீர்த்தங்கரர்களையும் வணங்கும் மரபு, ஜைனர்களிடம் நெடுங்காலம் இருந்து வருவதாகும். புத்தத்தின் மகாயானம், ஹீனயாயம் பிரிவுகள், புத்தரை மூத்தோர் நிலையில் வழிபடுவது, புத்தர் கடைப்பிடித்த முறைகளை மட்டும் அல்லது தாய் தெய்வங்களை, நாட்டுப்புற வழக்காறுகளில் இருந்து தொடரப்பட்ட இயக்கி, இயக்கன் வழிபாடுகளை மட்டும் கடைப்பிடித்தல் என்பதே இரு பிரிவுகளுக்கும் அடிப்படை வேறுபாடுகள்.

த. பார்த்திபன்

குடைவரைப் பெருங் கற்படைச் சின்னங்கள் (தொடர்ச்சி)

பெருங் கற்படைப் பண்பாட்டில் குடைவரைகள் பெற்றுள்ள முக்கியத்துவம் குறித்தும், அவை குகைக்கலையாக வளர்ந்த தன்மைகள் குறித்தும், பெருங் கற்படைச் சின்னங்கள், சமயம் சாராத மூத்தோர் நினைவு வழிபாட்டிடமாகத் திகழ, பெளத்த சைத்தியங்கள் சமயம் சார்ந்த மூத்தோர் நினைவு வழிபாட்டிடமாகத் திகழ்கின்றன என்பதும், சமயம் சார்ந்த / சமயம் சாராத என்ற வேறுபாடு என்பது தவிர உள்ளுறையும் அடிப்படைகள் ஒரு மரபின் தொடர்ச்சியை வலிமையாக உணர்த்துகின்றன என்பது குறித்தும் யுத்தபூமி தொடரின் அத்தியாயம் 26-ல் விளக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, குகைக்கலையைப் பொருத்த அளவில் பெருங் கற்படைக் குடைவரைக்கும், பெளத்த / சமண / ஆசீவக குடைவரைக்கும் ஒன்றுமை வேற்றுமைகளை அறிந்துகொள்வது, குகைக்கலையின் வளர்ச்சியை அறிவதாகிறது.

பெருங் கற்படைப் குடைவரைகள் தரைமட்டத்தில் இருந்து கீழாகப் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன. பெளத்த / சமண / ஆசீவக குடைவரைகள் தரை மட்டத்துக்கு மேலாக அல்லது தரை மட்டத்துக்கு இணையான உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

பெருங் கற்படைக் குடைவரைகள் எளியதாகக் கலை வேலைப்பாடுகள் அற்று உருவாக்கப்பட்டவை. பெளத்த / சமண / ஆசீவக குடைவரைகள் கலை வேலைப்பாடுகள் நிரம்பியவையாக அமைக்கப்பெற்றவை.

பெருங் கற்படைக் குடைவரைகள் ஒவ்வொன்றும், தனி நபருக்கு அரிதாக ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்காகத் தனித்தனியாகக் குடையப்பட்டவை. ஆனால், பெரும்பாலான பெளத்த குடைவரைகள் அனைத்தும் கெளதம புத்தர் ஒருவருக்காகக் குடையப்பட்டவை. (தூபிகளில் புத்தரின் சீடர்களான சாரிபுத்திரர், மெளத்கல்யாயனர் ஆகியோரின் அடையாளச் சின்னங்களைக் கொண்டு எழுப்பட்ட தூபியை சாஞ்சியில் காணமுடிகிறது. இது, புகழ்பெற்ற சாஞ்சி தூபியைவிட அளவில் சிறியது. இதுவும் பெளத்தத்துள் மூத்தோர் வழிபாட்டின் தாக்குறவை காட்டுவதாகும். இதனை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டால், பெளத்த குடைவரைகளில் சீடர்களுக்கும் எழுப்பட்டவை இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. தொடர்ந்த ஆய்வுகளே இதனை உறுதியாக்கும்).

போடுமலை உருளை வடிவ ஈமச்சின்னம் - 1

போடுமலை உருளை வடிவ ஈமச்சின்னம் - 2

பெருங் கற்படைக் குடைவரைகள் யாருக்காக குடையப்பட்டதோ அவரது குடும்பத்தினரால் / அல்லது குடியினரால் மட்டும் பொருளாதாரப் பங்களிப்பு செய்து குடையப்பட்டவை எனத் துணியலாம். பெளத்த / சமண / ஆசீவக குடைவரைகள் அரச மரபுகளால் போற்றி வளர்க்கப்பெற்றவை. அல்லது, தனிப்பட்டவர்களின் நன்கொடை பங்கெடுப்பு குவிக்கப்பெற்று உருவாக்கப்பட்டவை.

பெளத்தம் வளர வளர குடைவரை வழிபாட்டிடங்களான சைத்தியங்களுக்கு அருகிலேயே பிக்குகள் தங்கும் மடங்களாகக் குடைவரை விகாரங்கள் குடையப்பெற்றன. இது, மதம் சார்ந்து கிளைத்த குடைவரையின் நோக்கமாகும். மதத்தின் அபரிமித வளர்ச்சியின் போக்கில், புத்த சங்க உயர்நிலைப் பிக்குகளுக்கு விகாரங்கள், சாதாரண பிக்குகள் தங்கும் விகாரங்களில் இருந்து தள்ளி அமையும்படி குடையப்பட்டுள்ள தன்மையினையும் காணமுடிகிறது. சமணத்திலும் இந்த இருவகைக் குடைவரைகளையும், அதாவது வழிபாட்டு / நினைவிட குடைவரை, இருப்பிட குடைவரை ஆகிய இரு வகைகளையும் காணமுடிகிறது.

மு.பொ. 6-ம் நூற்றாண்டு, இந்தியாவின் தத்துவச் சிந்தனை மரபிலும், வாழ்வியலிலும் புரட்சிகளை உருவாக்கிய ஆண்டு. இந்த நூற்றாண்டில் மகாவீரர், கெளதம புத்தர், மர்கலி கோசர் என மூன்று ஒப்பற்ற தத்துவாதிகளை இந்தியா கண்டது. சற்றேத்தாழ சமகாலத்தில் இவர்கள் தம் கருத்துகளைப் பிரசங்கம் மூலம் வெளியிட்டனர். ஜைனம், பெளத்தம், ஆசீவகம் என இவர்களைப் பின்பற்றுவோர் தனித்தனி மத அடையாளங்களைப் பெற்று வளர்ந்தனர்.

நமது வரலாற்று நூல்கள், இவை மூன்றும் அன்று மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்று இருந்த ‘பிராமணிய’ மதத்துக்கு எதிராகத் தோன்றின என்றே பதிவு செய்துள்ளன. இம்மதங்களைத் தோற்றுவித்தவர்களும் இவர்களே என்றும் பதிவு செய்கின்றன. அக்காலத்துக்குத் தேவைப்பட்ட மாற்று என்றும்கூட எடுத்துக்கொள்ளலாம்.

உண்மையில், இவை அன்று தனித்த கூறுகளுடன் செல்வாக்குடன் திகழ்ந்த ‘பிராமணிய’ மதத்தால் புறக்கணிக்கப்பட்டிருந்த இம்மண்ணின் பண்டைய எல்லா மரபுகளையும் மீட்கும் அடியோட்டத்தைக் கொண்டிருப்பவை. அதாவது, வாழ்வியல், சிந்தனை, தத்துவம், கலை, பண்பாடு போன்று இன்னும் உள்ள எல்லாப் பண்டைய மரபுகளையும் இவை மீட்டன. அவற்றுடன், சம காலத்துக்குத் தேவையானவற்றைப் புத்தாக்கங்களை இம்மூவரும் தனித்துவத்துடன் வழங்கினர். மரபு மீட்பும், தனித்துவத்தையும் கலந்து மக்களை மக்களுடனும், மண்ணுடனும் மீண்டும் இணைக்கத் தேவையான சிந்தனைகளையே இவை கொண்டிருக்கின்றன.

மரபு மீட்பு, புத்தாக்கம், தனித்துவம் இம்மூன்றும் தமக்குள் கொண்டிருந்த முரண்களே, இம்மூன்று தனித்தனித்தனி அடையாளங்களுக்குக் காரணமாக அமைந்தன. காலத்தால் இவை எவ்வாறு தம்மை உருப்படுத்திக்கொண்டன; பிளவுண்டு வளர்ந்தன; பிளவுண்டு மறைந்தன; இன்னும் எவ்வாறு மற்றொன்றில் கரைந்தன; கரைந்ததால் மறைந்தன; மற்றும் உயிர்ப்புடன் தம் அடையாளங்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளன என்பது வேறு வரலாறு எனினும், இவற்றுள் அடிநாதமாக இருக்கும் மரபு மீட்சி மற்றும் மரபுத் தொடர்ச்சியின் அடையாளங்கள் இந்த அத்தியாயத்துக்கு அவசியமாகிறது.

மரபு மீட்பின் மிக முக்கியக் கூறு, மூத்தோர் வழிபாட்டிலிருந்து தொடங்குகிறது என்பது மிகையான கூற்றாக இருக்க முடியாது. மற்றொரு முக்கிய மீட்பு தாய்தெய்வங்கள், இயக்கன், இயக்கி வழிபாடு மீட்பு.

வேறு எந்த மூத்தோர் வழிபாட்டுக்குரிய பெருங் கற்படைச் சின்னங்களைவிடவும், குடைவரைகள் இம்மூன்று மதங்களையும் ஈர்த்தன. வாழ்வதற்கு அல்லது தங்குவதற்கு ஏற்ற இட வசதியை குடைவரைகளே அளித்தன. மேலும், கடவுள் (மூத்தோர்) நிலைக்குத் தம்மை நகர்த்திக்கொண்டவர், குடைவரை போன்று ஒரு இடத்தைத் தேர்ந்துகொண்டது வியப்பில்லை. அதுபோன்ற ஒரு இடத்தில் வாழ்பவரை வணங்கத்தக்கவராக மக்கள் ஏற்று மதித்தனர்.

மகாவீரர் உட்பட 24 தீர்த்தங்கரர்களையும் வணங்கும் மரபு, ஜைனர்களிடம் நெடுங்காலம் இருந்து வருவதாகும். புத்தத்தின் மகாயானம், ஹீனயாயம் பிரிவுகள், புத்தரை மூத்தோர் நிலையில் வழிபடுவது, புத்தர் கடைப்பிடித்த முறைகளை மட்டும் அல்லது தாய் தெய்வங்களை, நாட்டுப்புற வழக்காறுகளில் இருந்து தொடரப்பட்ட இயக்கி, இயக்கன் வழிபாடுகளை மட்டும் கடைப்பிடித்தல் என்பதே இரு பிரிவுகளுக்கும் அடிப்படை வேறுபாடுகள். மர்கலி கோசரும் - ஆசீவகமும் தாய் தெய்வ வழிபாட்டில் இருந்து விலகியிருந்ததாக அறியமுடியவில்லை.

வேதக் கடவுளுக்கு, குறிப்பாக ரிக் வேதம் கொண்டாடும் கடவுள்களுக்கு உருவங்கள் வழங்கப்படாதிருந்த காலம் ஒன்று இருந்தது. ரிக் வேதம் போற்றாத கடவுள் வணக்கம், பிற்காலத்தில் “பிராமணியக் கடவுள்”களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிராமணிய முறை வழிபாட்டுக்கு உள்ளான காலம் எது என்பது குறித்து, இன்றைய நிலையில் அறுதியிட்டுக் கூறமுடியாது எனினும், ஜைனம், பெளத்தம் மரபில் இருந்து மீட்டுக்கொண்ட மூத்தோர் வழிபாட்டுக்கு மக்களிடையே கிடைத்திருந்த மிகுந்த செல்வாக்கின் காரணமாக, நாட்டுப்புற வழக்காறுகளில் பல்வேறு வடிவங்களில், பல்வேறு பிரதேச மணம் கொண்டிருந்த வீரக் கதைப்பாடல்கள் தொகுக்கப்பட்டு, இந்தியாவின் இரு இதிகாசங்களாகவும், பதினெண் புரணங்களாகவும் உருக்கொண்டன. இதிகாசங்களின் நாயகர்களும், புராணங்களின் நாயக நாயகிகளும், மூத்தோர் நிலையில் இருந்து பிராமணியக் கடவுள்களாக உருக்கொண்டனர். ரிக் கடவுளர்களுக்கும், இதிகாசக் கடவுளர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இதனை, மூல நூல்களின் மூலங்களின் ஒப்பாய்வுகளில் இருந்து தெளியலாம்.

நன்கு வளர்ச்சிபெற்ற நிலையில், தீர்த்தங்கரர்கள் மற்றும் புத்தர் பெற்றிருந்த பெருநிலைக்கு ஈடாக, புராண இதிகாசங்களின் கடவுளர்கள் உயர்த்தப்பட வேண்டிய நிலையில்தான், அதுவரை நாட்டுப்புற மரபுகளில் மூழ்கியிருந்த புராண, இதிகாசங்களின் கடவுளர்கள் பிரதேச எல்லைகளைத் தாண்டிய கடவுளர்களாக நிலைபெற்றனர்.

தென்னிந்தியாவில், தொல்காப்பியத்தை ஒரு கருவி சான்றாகக் கொண்டால், நான்கு நில தெய்வங்கள் தனித்தனியாகவும், சைவ, வைணவ, சாக்தக் கடவுளர்கள் தனித்தனியாகவும் காட்சிப்படுத்தப்படுவதில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

அரசு உதவியுடன், அதாவது மெளரியப் பேரரசன் அசோகரிடமிருந்து குடைவரைக் கலையானது ஜைன, பெளத்த, ஆசீவகம் சார்புகொண்டு வளர்ச்சி அடைந்ததாக, நமது வரலாற்றுக் கால கலை வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இவை அனைத்துமே இந்தியப் புதிய கற்கால மற்றும் பெருங் கற்காலப் பண்பாடுகளைக் கணக்கில் கொள்ளத் தவறுகின்றன; அக்காலங்களின் கலை வளர்ச்சிகளைக் கவனப்படுத்தத் தவறுகின்றன. இன்னும் குறிப்பாகச் சொன்னால், மு.பொ.ஆ. 5000 முதல் தொடர்ச்சியாகக் கிடைத்துள்ள கலைப் பொருட்கள் பற்றிய காலநிலைத் தகவலே நம்மிடை முறையாக அளிக்கப்படவில்லை.

இதன் விளைவின் ஒருமுகமாகத்தன், மு.பொ.ஆ. 300-களில் அசோகரிடமிருந்து குகைக்கலை மட்டுமல்லாது, அனைத்துக் கலை வடிவங்களும் உருக்கொண்டன என்ற கருத்துருவம் நிகழக் காரணம் எனலாம்.

அசோகர் காலத்துக் கட்டடங்களில் மிகச் சிறந்தது குடைவரைகளே. அவற்றுள் மிகவும் முதன்மையானவையும், சிறப்பு வாய்ந்தவையும் கயைக்கு வடக்கில் பர்பாரா குன்றுகளில் உள்ள ஏழு குடைவரைகளும், நாகர்ஜுனக் குன்றுகளில் உள்ள மூன்று குடைவரைகளும், இராகிருகத்துக்குத் தெற்கே சீதாமாருதி என்னும் இடத்தில் உள்ள ஒரு குடைவரையையும் குறிப்பர். இவை, அசோகனின் ஆணையின் பேரில் 'ஆசிவக’த் துறவிகளுக்காக மு.பொ.ஆ. 254-ல் குடையப்பட்டவை.

இந்த வகையில், மரபை மீட்ட மூன்று மதங்களில், முதலில் குடைவரைகளை அமைத்துக்கொண்டது ஆசீவகமே என்பது தெளிவாகிறது. ஆசீவகத்தின் வரலாற்றை நுணுகி ஆய்வோர், ஆசீவகத்தின் துவக்கமும், வளர்ச்சியும் தென்னிந்திய குறிப்பாக பண்டைய தமிழகத்தின் சார்பு கொண்டது என்பதை வலியுறுத்துகின்றனர்.

எனில், பண்டைத் தமிழகத்தின் குடைவரைக் கலை வட இந்தியாவில் புகுந்தது ஆசீவகம் கொண்டே எனலாம். மக்களிடையே இந்தக் குடைவரை வாழ்க்கைக்குக் கிடைத்த வரவேற்பு, பிற இரு சமயங்களும் அதனை உடனடியாக சம காலத்தில் நிகழ்ந்தது போன்ற தோற்றத்தை வழங்குவதுபோல் தமக்கும் உரியனவாக அமைத்துக்கொண்டன எனலாம். ஜைன குரு பத்திரபாகு, பிம்பிசாரர் உட்பட, கிடைத்துள்ள சான்றுகள் கொண்டு பார்க்கும்பொழுது, குகைகளில் வசிக்கப் புகுந்த வடபகுதி துறவிகள் பற்றி அறியமுடியாது உள்ளோம்.

இப்பின்புலத்தில், தமிழகத்தில் அமைக்கப்பட்ட ஆசீவக, பெளத்த, சமணப்படுகை கொண்ட குகைகள், குடைவரைகள், துறவியர் உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைய அமைக்கப்பட்டிருக்கலாம் என்று திரு. பூங்குன்றன் அவர்கள் கருதுவதும், மேலாய்வு தேவை என்று குறிப்பிடும் கருத்தும் கவனிக்கத்தக்கது. படுகை கொண்ட குகைகள், குடைவரைகள், மூத்தோர் பெருங் கற்படைச் சின்னங்களின் வகைகளில் ஒன்றான குடைவரைகளின் நீட்சியே என்ற முடிவுக்கோ அல்லது முன்னுதாரணமாக் கொண்டவை என்ற முடிவுக்கு வர வாய்ப்பளிக்கின்றன.

ஜைன, பெளத்த, ஆசீவகம் ஆகியவற்றின் மரபு மீட்புகள் தென்னிந்திய பெருங் கற்காலப் பண்பாட்டின் செழுமையை உள்வாங்கிக்கொண்டு தம்தம் கொள்கை சார்ந்து வளர்ந்தன. அதனை பிராமணியம் மேலும் தனதாக்கிக்கொண்டுள்ளது. இந்த இணைவே, சமயம் சாரா பெருங் கற்காலப் பண்பாட்டையும், பிற்கால சமயம் சார்ந்த பண்பாட்டையும் இணைக்கும் புள்ளியாக விளங்குகிறது.

இந்தப் புள்ளியை, குத்துக்கல் பெருங் கற்படைச் சின்னங்களின் வளர்ச்சி நிலையில் இருந்தும், நடுகற்களின் தோற்றத்தின் இருந்தும் அறிய வேண்டியவர்களாக உள்ளோம்.

(தொடரும்)            

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியா் பங்களிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் மீது வழக்கு

ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் மாசித் திருவிழா திருக்கல்யாணம்

உதவி ஆய்வாளரை தாக்கிய இருவா் கைது

குப்பைக் கிடங்கை இடமாற்றக் கோரி 3-ஆவது நாளாக பொதுமக்கள் பேரணி

SCROLL FOR NEXT