தமிழகத்தில் தள்ளுவண்டி மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு தமிழக அரசு கடன் வழங்கி ஊக்குவித்து வருவது பாராட்டுதலுக்குரியது என சேலம் மாவட்ட சிறுதொழில் தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வட மாநிலத்தவர்களால் விற்பனை செய்யப்படும் பானிபூரிக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருந்தாலும், சேலத்தில் விற்பனை செய்யப்படும் தட்டு வடைக்கு தனிச் சிறப்பு உண்டு.
அதிலும், இஞ்சித் தட்டுவடை, நொறுக்கல், மசாலா பொரி தட்டுவடை, கார்லிக் தட்டுவடை என பல வகைகளில் மக்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்படுகிறது.
இவை கடைகளை விட தள்ளுவண்டிகளிலேயே தெருக்களில் அதிகளவு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களின் மாலை நேர சிற்றுண்டியாகவே அமைந்துவிட்டன.
இதுகுறித்து கடை நிர்வாகி கிருஷ்ணா (40) கூறியதாவது:
கடந்த 22 வருடங்களாக நானும் எனது குடும்பத்தினரும் இந்த தட்டுவடை வியாபாரம் செய்து வருகிறோம். இயற்கைப் பொருள்கள் மற்றும் காய்கறிகளால் செய்யப்படும் இந்தத் தட்டுவடையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
ஆரம்பக் கால கட்டத்தில் தனித்தனியாக இந்தத் தொழிலை நாங்கள் செய்யத் தொடங்கினோம். ஆனால் தற்போது இதற்கென சிறுதொழில் தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் அமைக்கப்பட்டு, தற்போது பெரியளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம் ஒரு நாளைக்கு ரூ. 1,000 முதல் ரூ. 2 ஆயிரம் வரை வருமானம் பெற முடிகிறது.
இருப்பினும் தட்டுவடை செட்டுகளில் அதிகம் பயன்படுத்துகிற கேரட், பீட்ரூட் காய்கறிகளின் விலை தற்போது ஏறிவிட்டதால் லாபம் சற்றுக் குறைவாகவே கிடைக்கிறது. மேலும் சிறு வியாபாரிகள் தள்ளுவண்டிகள் சங்கம் மூலம் தமிழக அரசு சார்பில் கடன் வழங்கப்படுவதால் தொழிலை மேம்படுத்த உதவியாக இருக்கிறது என்றார்.
-எஸ். ஷேக் முகமது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.