காதலர் தினம்

காதல் வழியில் இறைத் தொண்டைச் சாதித்த பரவை நங்கை

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

கி.பி. 1012 - 1044 வரை செங்கோலோச்சிய மாமன்னன் ராஜேந்திர சோழனின் இதயச் சுடராய் திகழ்ந்தவள் ஆரூர் கோயிலில் பணிபுரிந்த ஆடலரசி நக்கன் பரவை நங்கை. அவளது அழகும் தூய இறைத் தொண்டுமே இம் மாமன்னனை மிகவும் கவரச் செய்திருக்க வேண்டும்...! 

தான் விரும்பியதெல்லாம் உலகாளும் இம்மன்னவன் செய்யத் தயாராய் இருந்த நிலையில், இத்தேவி சாதித்துக் கொண்டதெல்லாம் தனக்கென்று ஒன்றுமே கிடையாது. அத்தனையும் ஆரூர் எம்மான் - வீதி விடங்கனுக்கே ஆகும். ராஜேந்திரன் காலம் வரையில் செங்கற்கோயிலாய் இருந்த தியாகேசனின் திருக்கோயிலைக் கருங்கற்கோயிலாக - கற்றளியாக மாற்றச் செய்த பெருமை இந்நங்கை நல்லாளையேச் சாரும். இத்தேவியின் விருப்பப்படி மாமன்னன் தனது 16 ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1028இல்) தொடங்கி 18 ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1030-இல்) கற்கோயிலாகக் கட்டி முடித்தான். இதனை அவனது சாசனமே சான்று பகிர்கின்றது.

கற்கோயிலாக எடுத்தது மட்டும் பரவை நல்லாளுக்கு நிறைவளிக்கவில்லை. வீதி விடங்கனின் கருவறையின் வெளிப்புறம் உபானாதி ஸ்தூபி வரையும் உட்புறம் முழுவதும் பொன் தகடுகளால் போர்த்தவும் செய்தாள். இது மட்டுமன்றி முன்புற மகாமண்டபத்தின் விதானம், தூண்கள் அத்தனையும் செப்புத் தகடுகள் போர்த்தி அணி செய்தாள். இதற்கெனச் செலவிடப்பட்ட பொன் 20,643 கழஞ்சுகள் என்றும், செம்பு 42,000 பலம் என்றும் கல்வெட்டு விவரிக்கின்றது. இப்பணி இம்மன்னனின் 18 ஆம் ஆட்சியாண்டின் 38 ஆம் நாளில் தொடங்கி 199 ஆம் நாளில் நிறைவெய்தியதாகவும் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

ஆரூரன் திருக்கோயிலுக்குப் பொன் வேய்ந்த மாமன்னன் ராஜேந்திரனும் பரவை நங்கையும் கி.பி. 1030 இல் ஆரூர் வீதியில் தேரில் பவனி வந்து இறைவன் முன்பு நின்றனர். பட்ட மகிஷிக்குக் கூடக் கிடைக்காத ஒரு சிறப்புப் பெற்றாள். இப்பெண்ணரசியும் ராஜேந்திர சோழனும் ஆரூர் இறைவனை தரிசித்தனர். பின்பு அவர்கள் இருவரும் நின்று ஆரூரனை வணங்கிய புனித இடத்தில் ஒரு குத்து விளக்கை ஞாபகச் சின்னமாக ஏற்றினான் இம்மன்னவன். இதனை இம்மன்னவனின் கல்வெட்டு "உடையார் ஸ்ரீ ராஜேந்திரசோழ தேவரும் அணுக்கியார் பரவை நங்கையாரும் நிற்குமிடத்தெரியும் குத்து விளக்கொன்றும்" என விவரிக்கின்றது.

இப்பரவை நல்லாளின் மேல் கொண்ட காதலால், பாசத்தால் இந்நங்கையின் பேரில் ஓர் ஊருக்கு பரவைபுரம் எனப் பெயரிட்டு அங்கு "பரவையீஸ்வரம்" என்ற கோயிலையும் கட்டுவித்துப் பெருமை சேர்த்தான் இம்மன்னர் மன்னவன்.

திருவாரூர் ஆரூரன் கோயிலில் ராஜேந்திர சோழன் - பரவை நங்கையின் மகன் ராஜாதிராஜனே எழுப்பி வழிபட்ட கோயில்.

நங்கையவள் நற்றொண்டு

தனக்கென வாழாது ஆரூரனின் திருத்தொண்டே தன் வாழ்வின் பெரும் பேறு எனக் கருதிய இத்தேவி ஆரூர் இறைவனுக்குச் செய்தளித்த அணிகலன்கள், நிலங்கள் இவற்றின் பட்டியலையும், மாமன்னர்கள் பலரும் செய்தளித்த பட்டியலையும் ஒப்பிடும்போது இத்தேவியின் பங்கு தான் மிகுந்து நிற்பது வியப்பிற்குரிய ஒன்று. திருக்கோயில் திருப்பணிகளாலேயே வணங்குதற்குரிய பெருமை பெற்ற சோழப் பேரரசியான செம்பியன் மாதேவியாரை இங்கு நினைவு கூரத்தக்க அளவு பரவை நங்கையின் தொண்டு, அமைந்தது நோக்குதற்குரிய ஒன்று ஆகும்.

இந்நங்கை நல்லாள் அளித்த அறக்கொடைகளுள் குறிப்பிடத்தக்கவை. 15,579 பலம் எடையுள்ள 28 பிரமாண்ட குத்துவிளக்குகள், பச்சை பாவை உமை நங்கை, பாவை சரியாமுலை நங்கை எனப் பெயரிடப்பட்ட இரண்டு பாவை விளக்குகள் பல ஆயிரக்கணக்கான கழஞ்சு எடையுள்ள பொன்னாபரணங்கள்; 428 உயர் முத்துக்கள், 7 சிகப்புக் கற்கள், 36 வைரங்கள் இன்னும் கணக்கிலடங்கா அணிகலன்கள்...! எண்ணற்ற ஊர்கள்...! நிலங்கள்...! ஆகியவையாகும்.

ராஜேந்திர சோழன் "திருமண்டபம்" என ஒரு மண்டபத்தை ஆரூர் திருக்கோயிலினுள் ராஜாதி ராஜனின் உதவியுடன் கட்டுவித்து அம்மண்டபத்தின் மேற்பார்வைக்கும் மற்ற பணிகளுக்குமாகத் தீபங்குடி, மேல்மங்கலம் போன்ற ஊர்களையும் அளித்து சிறப்பெய்தினாள்.

தென் ஆற்காடு மாவட்டம் விழுப்புரம் அருகிலுள்ள பனையவரம் என்று தற்போது அழைக்கப்படும் ஊரே மாமன்னன் ராஜேந்திர சோழன் பரவை நங்கையின் பெயரில் 'பரவை புரம்' என நிர்மாணம் செய்த ஊராகும். இவ்வூரிலுள்ள பரவை ஈஸ்வரம் எனும் திருக்கோயிலும் ஆரூர் பரவை நங்கையின் பெயரில் எடுக்கப்பட்டதாகும். இத்திருக்கோயிலில் பரவை நங்கைக்கும், ராஜேந்திர சோழனுக்கும் படிமம் எடுத்து நிலங்கள் அளித்து வணங்கியதாக ராஜேந்திர சோழனின் புதல்வர்களான ராஜாதிராஜனும் இரண்டாம் ராஜேந்திரனும் கூறுவதைப் பனையவரம் சாசனங்களில் காணலாம்.

மாமன்னன் மற்றும் பரவை நங்கையின் மறைவிற்குப் பிறகு நங்கை பரவை வாழ்ந்த ஆரூர் திருக்கோயிலில் மாமன்னன் ராஜேந்திர சோழனுடன் திகழும் பரவை நங்கையின் கற்படிமம் எடுக்கப்பட்டுத் தினசரி பூஜைகள் செய்வதற்கு ராஜேந்திர சோழனின் மகனான ராஜாதிராஜனே நிலங்கள் அளித்து வழிபட்டான் என்ற செய்தியை இன்றும் ஆரூர் கல்வெட்டில் காணலாம். தனது தாயோ அல்லது மன்னனது தேவியராகத் திகழாத ஓர் சாதாரண பணிப்பெண்ணிற்கு மன்னனுடன் தெய்வ அம்சம் அளிக்கப்பட்டு, ஓர் சோழ அரசனாலேயே (அதுவும் மன்னனின் மகன்) தெய்வமாக வணங்கப்பட்ட தென்றால் அப்பரவை நல்லாளின் பெருமையும், தொண்டும், தியாகமும், தூய்மையும் சாதாரண ஒன்றா?

இத்தனை பெருமைகளும் கொண்ட பரவை நங்கை - ராஜேந்திர சோழனின் கற்சிலை இதுவரை இருக்குமிடம் தெரியாமல் இருந்தது. ஆரூர் திருக்கோயில்" ஆய்வின்போது, இரண்டாம் பிரகாரம் வடமேற்கு மூலையில் உள்ள அனந்தேசம் என்னும் கோயிலில் ஓர் மாடத்தில் அழுக்கடைந்து, பொலிவிழந்து மறைந்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. வரலாற்றுச் சிறப்புடைய இப்படிமம் தூய்மை செய்யப்பட்டுள்ளது. இதுவரை சோழ மன்னன் ராஜேந்திரனின் சிலை இதனையன்றித் தமிழகத்தில் வேறு எங்கும் கிடைக்கவில்லை. பரவை நங்கையுடன் மன்னன் கை கூப்பிய நிலையில் உள்ள இச்சிலை தமிழக வரலாற்றில் சிறப்பிடம் வகிக்கும் படிமங்களுள் ஒன்று. மேலும் ராஜேந்திரசோழனின் பிறந்தநாள் ஆடித் திருவாதிரை என்பதையும், அவன் அய்யன் இராஜராஜசோழனின் பிறந்தநாள் ஐப்பசி சதயம் என்பதையும் இப்பொற்கோயில் அதிட்டானத்துக் கல்வெட்டுச் சாசனம் ஒன்று எடுத்துரைக்கின்றது.

[கட்டுரையாளர் - கல்வெட்டு ஆய்வாளர், தஞ்சாவூர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT