இன்று காதலிப்பவர்களைப் பற்றி கேட்கும்போதோ, பேசும்போதோ சொன்னால், ‘பயந்துவிட மாட்டீர்களே?’ என்றுதான் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. மானுடம் தீ கண்ட காலத்திற்கு முன்பிருந்தே கொண்டாடப்பட்ட காதல்கள் இன்று அதன் விதவிதமான பரிணாமங்களைப் பார்த்துவிட்டது என்றாலும் இன்றைய நவீனகால காதல் ஒருவித உச்சத்தையும் கசப்பையுமே அளிப்பதாகவேத் தெரிகிறது. உண்மையில், மனிதர்கள் காதலிக்கும்போது காதலிக்கப்படும்போதும் மட்டுமே பரிசுத்த புத்துணர்வை அடைகின்றனர் என்கிறது இலக்கியங்கள்.
ஆனால், இன்றைய இளம் தலைமுறையினரின் காதல்கள் அப்படி இருக்கின்றனவா? எந்த எதிர்பார்ப்புகளுமற்ற, திக்காட வைக்கும் அன்பையும் ஆறுதல்களையும் கிடைக்கப்பெற்றவர்கள் மிக மிகக் குறைவானவர்களே. ஏன் பெரும்பான்மைக்கு அது சாத்தியமில்லை? சாத்தியம்தான். அதற்கு நாம் சரியாகக் காதலித்துக் கொண்டிருக்கிறோமா என்பதை அவரவர் அனுபவங்களிலிருந்து கறாராகக் கேட்டுக்கொள்ளலாம்.
உண்மையில் ஒரு உறவைத் தக்கவைக்க என்னதான் தேவை? அளவற்ற நேசமா? மணிக்கணக்கான பேச்சா? பொருளியல் காரணங்களா? அடுக்கிக்கொண்டே சென்றாலும் இதற்கு பதில் இல்லை. ஒரு மரத்திற்கு வேரிலிருந்து தண்டு, கிளைகள், இலை, காய் என எப்படி எல்லாமும் முக்கியமோ காதலுக்கும் அதேதான். எல்லா கோணங்களும் சரியாக பொருந்தும்போது உருவாகும் புரிதலே பல நேரங்களில் உறவை காப்பாற்றுகிறது.
அண்மையில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காதலித்து திருமணம் செய்துகொண்ட இணைகள் எதிரெதிர் தரப்பில் அமர்ந்திருக்க, கணவரை ஏன் பிடிக்கவில்லை என்கிற கேள்விக்கு மனைவி சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறார். ‘ஒரு புகைப்படத்திற்குகூட உடன் நிற்க மாட்டார்’. கணவருக்கு புகைப்படங்களை எடுப்பதிலோ ரீல்ஸில் ஆட்டம்போடுவதிலோ எந்த ஆர்வமும் இல்லை. ஆனால், மனைவி அதை தீவிரமாக எதிர்பார்க்கிறார். இதனால் ஏற்பட்ட சண்டைகளால் 2 மாதம் வரை தனியாகவிட்டு செல்லும் அந்த மனைவியின் குற்றச்சாட்டுகளை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த அளவிற்கு மிக மிக எளிய பிரச்னைகள். அதை புரிந்துகொள்ளகூட அப்பெண் தயாராக இல்லை என்பது இன்னும் பரிதாபத்தை வரவழைக்கின்றன. ‘அப்படி இல்லை, இப்படி இல்லை’ என பொதுவெளி என்றுகூட பார்க்காமல் தன் கணவரை அவமானத்திற்கு ஆளாக்குகிறார். ஆத்திரத்தை அடக்கியபடியே நெறியாளர் கணவரிடம், ‘உங்களால ஏன் இவங்களை விட முடியலை’ எனக் கேட்கிறார். அந்தக் கணவர் மகிழ்ச்சி ததும்ப சொல்கிறார்; காதல்தான்!
மனைவியின் எந்த தர்க்கங்களும் எல்லை மீறல்களும் பிரச்னையாகத் தெரியாத கணவரின் காதல் ஆச்சரியத்தை அளித்தது. ஒருவேளை, பாதுகாப்பின்மையால் அப்படி நடந்துகொள்கிறாரோ எனத் தோன்றினாலும் அக்கணத்தில் அவரின் பதில் உண்மையான அன்பின் வெளிப்பாடாகவே தெரிந்தது.
மலையாளத்தில் உருவான அன்னாவும் ரசூலும் (Annayum rasoolum) படம் மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்று. ஒருவித தாழ்வுணர்ச்சி கொண்ட நாயகனான ரசூல், முதன் முதலாக அன்னாவைப் பார்த்ததிலிருந்து நம்பிக்கை கொண்டவனாக மாறுகிறான். தயக்கங்கள் மெல்ல களைந்து தன்னை ராஜாவாக ஒவ்வொரு கணமும் உணர்கிறான். ரசூலின்மேல் காதல் அரும்பியதும் ஆண்ட்ரியாவின் முக பாவனைகளை மட்டும் பாருங்கள். முதல் காதல் கொடுக்கும் பரவசம், ஆத்மார்த்தம் எல்லாம் அந்த முகங்களில் வழிந்தபடியே இருக்கும். காதல் வந்ததுக்குப் பின் சாதாரண பெண் ஒரு உலக அழகியைப்போல் மாறுகிறாள்.
அதிகம் பேசாத இருவர் காதலிக்கும்போது சூழல் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை கவித்துமான இயக்கத்தில் பதிவு செய்கிறார் இயக்குநர். ஒரு காட்சியில், ரசூல் அன்னா இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்க, அன்னா கிளம்புவதாகக் கூறுவாள். உடனே, ரசூல் அவளிடம் ஒரு நிமிடம் இரு என்றதும் ஆண்ட்ரியா கொடுக்கும் ரியாக்ஷன் அற்புதமான காதல் ஓவியம். படத்தின் உயிரோட்டமான காட்சி.
இந்தப் படத்தின் முடிவு சோகமானதாக இருந்தாலும் இயக்குநர் ராஜீவ் ரவி, ரசூல் மூலம் நமக்குப் புகட்டும் பாடம் நம்பிக்கைதான். எல்லாவற்றையும் இழந்த ரசூல் வாழ்வதற்குத்தான் ஊரைவிட்டு கிளம்புகிறான். காதல் உங்களுக்குள் அந்த நம்பிக்கையை வழங்கும் பலம் கொண்டதாகவே இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையைத்தான் இணைகள் பெரிதாக உருவாக்க வேண்டும். பரஸ்பர புரிதலும், அன்பும் மட்டுமல்ல ஒருவர் மீதான ஒருவரின் நன்னம்பிக்கையும் காதலில் மிக அவசியமானது.
இன்னொரு இணையத்தொடரை குறிப்பிடலாம். நெட்பிளிக்ஸில் வெளியான வார் செய்லர் (war sailor). இரண்டாம் உலகப்போரின்போது நார்வேயிலிருந்து வணிகக் கப்பல்களில் மாலுமியாக இரண்டு நண்பர்கள் செல்கின்றனர். அதில் ஒருவருக்கு காதல் மனைவியும் 4 பிள்ளைகளும் இருக்கின்றனர். தன் குடும்பத்தைப் பிரிந்து கப்பல் ஏறம்போது மனைவி தன் கணவரின் நண்பரிடம் சொல்கிறார். ‘அவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. நீங்கள்தான் பொறுப்பு’ தன் நண்பனுக்கு இப்படிபட்ட அழகான, நேசமான குடும்பம் அமைந்திருக்கிறதே என அந்த நபர் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்.
ஆனால், கப்பல் கடலில் இருக்கும்போதே போர் தாக்குதல்களில் இருவரும் சிக்கிக்கொள்கின்றனர். குடும்பஸ்த நண்பர் காணாமல்போக அந்த இன்னொரு நண்பர் மட்டும் சில மாதங்கள் கழித்து ஊர் திரும்புகிறார். நண்பனை நல்லபடியாக அழைத்து வருவதாக அவனுடைய மனைவிக்கு வாக்களித்திருக்கிறோமே என மனம் உடைகிறார். அந்த மனைவியும் கணவனின் இழப்பை மெல்ல மெல்ல ஏற்றுக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறார். பின், கணவரின் நண்பருடன் வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது திடீரென ஒருநாள் கணவர் உயிருடன் ஊருக்குள் வருகிறான்.
இடையே காணாமல்போன சில ஆண்டுகளில் முழுமையாக பல்வேறு நினைவுகளை அவள் சேகரித்துக்கொண்டாள். ஆழமாகவே தன் கணவன் உயிருடன் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டவளால் காதல் கணவன் திரும்பி வந்ததை நம்ப முடியவில்லை. அப்படி ஒருத்தர் திரும்பி வந்தால் நாம் என்ன செய்வோம்? ஓடி கட்டியணைத்துக் கொள்வோம் இல்லையா? ஆனால், அவள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ’ஏன் இவன் திரும்ப வந்துதொலைத்தான்’ என உள்ளுக்குள் குமைகிறாள். மிக மிக அதிர்ச்சியூட்டும் காட்சியாக இருந்தாலும் இந்த எதார்த்ததைத்தான் நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.
ஒருவர் நம்முடன் பல ஆண்டுகள் பழகினாலும் நேசித்தாலும் காலத்தின் மூப்பால் அவை கூர்மையை இழக்கும். அதை உணர்ந்துகொண்டு உறவுகளுக்குள் அக்கறை, உடலின்பத்தைத் தாண்டி நேரத்தையும் வழங்க பழக வேண்டும். இன்று நேரமின்மையின் காரணங்களால்தான் பல காதல்கள் உடைகின்றன. உங்கள் தனிப்பட்ட காதல் வாழ்க்கை சிறக்க வேண்டுமென்றால் முதலில் கணிசமான நேரத்தை இணையுடன் செலவிட கற்க வேண்டும். பிடித்தது, பிடிக்காதது என பேசித்தீராத விஷயங்கள் எவ்வளோ இருக்கின்றன. அதையெல்லாம் அந்த நேரத்தை பயன்படுத்தி உறவில் ஆரோக்கியத்தைக் கொண்டு வரலாம்.
காதலிக்கும் காலத்தில் கிடைக்கும் பரவசமான உன்மத்த நிலை பிறகேப்போதும் வாய்ப்பதில்லை. இருவரும் நேசிக்கும்போது கிடைக்கும் ஆத்ம திருப்திகளும், உச்சங்களும் காலம் கடந்தபின் அதே இணையிடம் கிடைக்கப்போவதுமில்லை. வெறும் இறுக அரவணைத்துக் கொள்வதிலும் பாதுகாப்பின்மையால் உருவாகும் வெற்று அன்புகளும் மட்டுமே காதலுக்குத் தேவையானது இல்லை. சில நேரங்களில் ஆணோ, பெண்ணோ தங்கள் இணையின் சுதந்திரத்திற்கு எந்த வகையிலும் இடையூறு கொடுக்கவில்லை என்பதையும் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
காதல் உறவுகள் அந்தரங்கமானது மட்டுமல்ல சுதந்திரமானதும்கூட என்கிற புரிதலுடன் வாழ்க்கையை இணைந்து கடப்பவர்களே காதலர்கள். பெருமிதங்களுக்காக, பொருளாதார தேவைகளுக்காக ஓர் உறவை நீங்கள் கையிலெடுப்பீர்கள் என்றால் மிக விரைவாகவே பெரிய ஏமாற்றத்தையே சந்திப்பீர்கள். ஒருவகையில் காதல் பகடையாட்டம்தான். ஏன் தாயம் விழவில்லை, ஏன் பன்னிரண்டு விழவில்லை என தர்க்கங்கள் அங்கு கிடையாது. ஆனால், வென்றுவிடலாம் என்கிற வேட்கையுடன் மிக பொறுப்பான ஆட்டத்தைக் கொடுக்கலாம் இல்லையா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.