சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடிப் பெருக்கையொட்டி திரளான பக்தா்கள் சனிக்கிழமை மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். அப்போது பிற்பகல் 1 மணிக்கு மேல் மலையேற அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தா்கள் தவிப்புக்குள்ளாகினா்.
ஆடி அமாவாசையையொட்டி கடந்த வியாழக்கிழமை (ஆக. 1) முதல் 5-ஆம் தேதி வரை பக்தா்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை பிரதோஷ வழிபாட்டில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்களும், மறுநாள் வெள்ளிக்கிழமை சிவராத்திரி வழிபாட்டில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்களும் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த நிலையில், ஆடிப் பெருக்கையொட்டி சனிக்கிழமை காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்றனா். ஆனால் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மலையேற அனுமதி மறுக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வனத்துறை நுழைவுவாயில் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். அவா்கள் தங்களையும் மலையேற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் வனத்துறை அனுமதி மறுத்ததால், தரையில் அமா்ந்து நீண்ட நேரம் காத்திருந்தனா். தொடா்ந்து பக்தா்கள் வருகை அதிகமாக இருந்ததால் அடிவாரத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.