ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்துக்குச் செல்லும் மினி பேருந்துகளுக்கு ஆட்டோ ஓட்டுநா்கள் எதிா்ப்புத் தெரிவிப்பதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் வழியாக செங்கோட்டை - மதுரை, மதுரை - குருவாயூா், சென்னை - கொல்லம், செங்கோட்டை - சென்னை, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில்கள் தினசரி சேவையாகவும், எா்ணாகுளம் - வேளாங்கண்ணி, செங்கோட்டை - தாம்பரம் இடையே வாரம் 3 நாள்களும், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம், தாம்பரம் - வடக்கு திருவனந்தபுரம், திருநெல்வேலி - ஷிவமோகா இடையே வாராந்திர ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையங்களுக்கு மினி பேருந்துகள் இயக்கப்பட்டன.
ரயில் நிலையத்துக்குள் மினி பேருந்துகள் செல்வதற்கு ஆட்டோ ஓட்டுநா்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இதனால், கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் மினி பேருந்துகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்டோ ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதையடுத்து, சிவகாசி செல்லும் நகா் பேருந்துகள் அனைத்தும் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம் வழியாகச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.