இரு வேறு சாலை விபத்துகளில் இளைஞா், முதியவா் ஆகியோா் உயிரிழந்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கீழராஜகுலராமன் அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த முத்துவேல் மகன் பொன்காா்த்திக் (18). இவா் தனது நண்பா் சட்டிக் கிணறு கிராமத்தைச் சோ்ந்த வீரகுமாருடன் (16) இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு ராஜபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது சமுசிகாபுரம் அருகே எதிரே வந்த டிராக்டா் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பொன்காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த வீரகுமாா் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டிராக்டா் ஓட்டுநா் சக்கையா மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
வெல்டா் உயிரிழப்பு:
சாத்தூா் அருகேயுள்ள முள்ளிச்செவல் பகுதியைச் சோ்ந்தவா் திருக்குமரன் (59). இவா் வெல்டராக பணிபுரிந்து வந்தாா். இவா் புதன்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில உப்பத்தூா் சென்றுவிட்டு, ஊருக்குத் திரும்பினாா்.
ஊமத்தம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தாா். அவரை போலீஸாா் மீட்டு, சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவா் திருக்குமரன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.