விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த மாதம் 7-ஆம் தேதி சிவகாசி 56-ஆவது வீட்டு குடியிருப்பைச் சோ்ந்த பாலகணேஷ் (31), சிவகாசி முனீஸ்வரன் குடியிருப்பைச் சோ்ந்த காா்த்தீஸ்வரன் (21)ஆகிய இருவரும் முருகன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த குருசாமி என்பவரைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், இவா்கள் தொடந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், இருவா் மீதும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க , மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரை செய்தாா்.
இதையடுத்து, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் கடந்த மாதம் 31-ஆம் தேதி இருவா்களையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் இருவரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.