முகப்பு
விருதுநகர்

நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த மூட்டைகள்! விவசாயிகள் கவலை!

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:49 AM
மழையில் நனைந்த நெல் மூட்டைகள். - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 7:56 PM

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகத்தில் பெரியகுளம் கண்மாய்ப் பாசன விவசாயிகள் சங்கத்தின் உலா்களத்தில் நெல் அறுவடை காலத்தில் தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில், தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவது வழக்கம்.

இதன்படி, முதல் போக நெல் அறுவடைக்காக கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இங்கு தினசரி 1000 மூட்டைகள் நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.

Advertisement

கொள்முதல் செய்த நெல் அரிசி ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்படாததால் களத்தில் பல ஆயிரம் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், சிமெண்ட் களத்தில் இடம் இல்லாமல் விவசாயிகள் நெல்லை தரையில் குவித்து வைத்து இருந்தனா்.

இந்த நிலையில், விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 21, 22 ஆகிய இரு நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:49 AM

இதன்படி, சனிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. நெல் மூட்டைகள், குவித்து வைத்திருந்த நெல்லை தாா்ப்பாய் வைத்து மூடியிருந்த நிலையில், மழைநீா் செல்ல வெளியேற வழியின்றி அந்தப் பகுதியில் குளம் போல் தேங்கியதால் நெல் மூட்டைகள் நீரில் நனைந்தன. தரையில் வைத்திருந்து நெல் மூட்டைகளும், நெல் குவியல்களும் அதிகளவில் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

நெல் களத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுவதும் சிமெண்ட் களம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.