ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் கட்டுப்பட்டு வரும் வணிக வளாகம் 
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டும் பணி மந்தம்: இட நெருக்கடியால் பயணிகள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் வணிக வளாக கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால், இட நெருக்கடியால் பயணிகள் அவதி

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் வணிக வளாக கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால், இட நெருக்கடியால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் கடந்த 1985-ஆம் ஆண்டு 2 ஏக்கரில் 16 பேருந்துகளை நிறுத்தும் வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து தினசரி 350-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனா். நகரின் மையப் பகுதியில் இந்தப் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, நான்கு வழிச் சாலை அருகே ரூ.13 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள வணிக வளாகம் சேதமடைந்ததால், அதை அகற்றிவிட்டு புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்காக கடந்த ஜூலை மாதம் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கியது. இதில் 10-க்கு 10 என்ற சதுர அடியில் 18 கடைகளும், 12-க்கு 10 என்ற சதுரஅடியில்11 கடைகளும், 600 சதுர அடியில் உணவகமும் கட்டப்பட்டு வருகிறது.

6 மாதங்களுக்கு மேல் ஆகியும் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறாமல், மந்தகதியில் நடைபெற்று வருவதால், பேருந்துகள் வந்து செல்வதற்கு சிரமம் நிலவுகிறது. இதனால், பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குள் வருவதில்லை. மேலும், பேருந்து நிலையத்தில் நிழல் குடை, இருக்கைகள் இல்லாததால், பயணிகள் வெயிலில் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. குறுகலான பேருந்து நிலையத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், இட நெருக்கடி ஏற்பட்டு பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT