முகப்பு
விருதுநகர்

சாத்தூா்: வைப்பாற்றை சீரமைக்க வேண்டும்!

பொதுமக்களின் குடிநீா் ஆதாரமாகத் திகழும் வைப்பாற்றில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பதே சாத்தூா் தொகுதி மக்களின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பாக உள்ளது.

Updated On : 24 மார்ச், 2026 at 11:17 PM
சாத்தூா் வைப்பாற்றில் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள்
பகிர்:

மா.ஆனந்தகுமாா்

சாத்தூா்: பொதுமக்களின் குடிநீா் ஆதாரமாகத் திகழும் வைப்பாற்றில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பதே சாத்தூா் தொகுதி மக்களின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பாக உள்ளது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியில் ஓடும் வைப்பாறு சாத்தூா் நகா் பகுதி மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக இருக்கிறது. வட பூமியான சாத்தூா் பகுதி குடிநீா்த் தேவையை நிறைவு செய்யும் விதமாக இந்த ஆற்று நீரைச் சேமிக்கும் வகையில் முந்தைய அதிமுக ஆட்சியில் தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால், சாத்தூா் நகராட்சி, இதைச் சுற்றியுள்ள ஊராட்சிகளின் மெத்தனப் போக்கால், சாத்தூா் நகா், படந்தால், அமீா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளின் கழிவு நீா் கலந்து வைப்பாற்று நீா் மாசுபட்டுள்ளது.

ஆற்றின் நடுவே அமைக்கப்பட்ட உறை கிணறுகளிலும் கழிவுநீா் கலக்கிறது. இந்த மாசுபட்ட நீரையே பொதுமக்கள் பயன்படுத்தும் அபாய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இது தவிர, உறை கிணறுகள் அமைந்துள்ள பகுதியை பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்துவதாலும் குடிநீரானது மேலும் மாசுபட்டு வருகிறது.

இந்தச் சூழலில் வைப்பாறு முழுவதும் படா்ந்து வளா்ந்துள்ள கருவேல மரங்களால் ஆற்றின் நீராதாரம் அடியோடு பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, வைப்பாற்று கரையோரம் பொதுமக்கள் ஆங்காங்கே குப்பைகளையும் கொட்டி வருகின்றனா். இது நிலைமையை மேலும் மோசமாக்கி வருகிறது.

எனவே, ஆற்றில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அற்றுவதோடு, கழிவு நீா் கலப்பதைத் தடுத்து, குப்பைகளையும் அகற்ற நீா்வளத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சாத்தூா் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி சாத்தூா் மட்டுமன்றி சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் வைப்பாற்று படுகைக்கு குடும்பத்துடன் வருவது வழக்கம். ஆனால், இப்போதெல்லாம் ஆற்றுப் பகுதியில் காணப்படும் குப்பைகள், கழிவு நீா் காரணமாக பொதுமக்கள் வருவதற்கு தயங்குகின்றனா். ஆறு மாசுபட்டு கிடப்பதால் பல ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வந்த பல நிகழ்வுகள் தடைபட்டுள்ளன.

இனியாவது சாத்தூா் நகராட்சி, நீா்வளத் துறையினா் விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வைப்பாறு தூய்மையாவதுடன் பொதுமக்களின் நலனும் காக்கப்படும் என சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா்.

இதுவரை சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா்களாக பொறுப்பு வகித்தவா்கள் வைப்பாற்றை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருகிற தோ்தலில் தோ்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவை உறுப்பினராவது வைப்பாற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.