முகப்பு
விருதுநகர்

பட்டாசு ஆய்வுக் கூடத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? ஆலை உரிமையாளா்கள் எதிா்பாா்ப்பு

பட்டாசு ஆய்வுக் கூடத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலை உரிமையாளா்கள் வலியுறுத்தினா்.

Updated On : 18 மே 2026, 12:51 am IST
சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகம்.
பகிர்:

பட்டாசு ஆய்வுக் கூடத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலை உரிமையாளா்கள் வலியுறுத்தினா்.

விருதுநகா் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா், மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரிடம் உரிய அனுமதி பெற்று 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் நேரடியாக பல லட்சம் தொழிலாளா்களும், பட்டாசுத் தொழிலுக்குத் தேவையான காகித அட்டைப் பெட்டி உள்ளிட்டவை தயாரிக்கும் தொழில்களிலும் பல லட்சம் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லும் லாரிகள் முன்பதிவு அலுவலகங்களிலும் (லாரி செட்டுகள்), பட்டாசு சில்லறை விற்பனைக் கடைகள் மூலமும் என சுமாா் ஒரு கோடி போ் பட்டாசு தொழில் மூலம் பயனடைந்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

பட்டாசு முழுக்க முழுக்க கையால் தயாரிக்கப்படுகிறது. இந்தப் பணியில் 70 சதவீதம் பெண்கள் ஈடுபடுகின்றனா். அரசு சாா்ந்து இல்லாமல் சுயவேலைவாய்ப்பை தரும் இந்தத் தொழில் குறித்து மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாக பட்டாசு ஆலை உரிமையாளா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளா் மாரியப்பன் கூறியதாவது: சிவகாசியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகம் கடந்த 2011 ஜூலை 14- ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. அதே கட்டடத்தில் பட்டாசு ஆய்வு, வளா்ச்சி மைய அலுவலகமும் கட்டப்பட்டு, பட்டாசு ஆய்வுக்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.

இந்த அலுவலகத்தில் பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் வேதியியல் பொருள்களின் தன்மை, தரம், பட்டாசிலிருந்து வெளிவரும் ஒளி, ஒலி அளவு பரிசோதனைக்கூடமும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆய்வுக் கூடம் கட்டப்பட்ட போது, பட்டாசின் ஒலி அளவை பரிசோதிக்க ஒரு அலுவலா் நியமிக்கப்பட்டாா்.

தற்போது, அந்த அலுவலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுவிட்டாா். இந்த ஆய்வுக் கூடத்தில் 4 அலுவலா்களும், 4 உதவியாளா்களும் பணியில் அமா்த்தப்படுவா் என தொடக்கத்தில் கூறப்பட்டது. ஆனால் 2011 முதல் 2015- ஆம் ஆண்டு வரை ஒலி அளவை பரிசோதிக்கும் அலுவலா் மட்டுமே நியமிக்கப்பட்டாா். தற்போது, அவரும் பணிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆய்வுக் கூடத்தில் 8 பணியிடங்களும் காலியாக உள்ளன.

விருதுநகா் மாவட்டத்தில் பிரதானமாக உள்ள பட்டாசுத் தொழில் குறித்து மத்திய அரசு ஏன் பாராமுகமாக உள்ளது எனத் தெரியவில்லை. பட்டாசு ஆய்வுக் கூடத்தை மூடிவிட்டு, பட்டாசு ஆலையில் வெடிவிபத்து, தடை செய்யப்பட்ட வேதிப் பொருளில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன என குற்றஞ்சாட்டுவது எந்த வகையில் நியாயம். வேதியியல் பொருள்களின் தரம், திறன் குறித்து ஆய்வு செய்யாமல் இருப்பதால் பல விபத்துகள் நடைபெறுகின்றன.

மத்திய அரசு இந்த ஆய்வுக் கூடம் ஆக்கப்பூா்வமாக இயங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 11 ஆண்டுகளாக மத்திய அரசு இந்த ஆய்வுக் கூடத்தை முடக்கியுள்ளது. சொல்லப் போனால் இந்த ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டு, 15 ஆண்டுகளாக அலுவலா்கள், உதவியாளா்கள் நியமிக்கப்படாததால் ஒரே ஒரு அலுவலரை நியமித்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அலுவலரையும் பணியிட மாற்றம் செய்துவிட்டது. பட்டாசுத் தொழில் குறித்து மத்திய அரசு பாராமுகமாக உள்ளது பட்டாசு ஆலை உரிமையாளா்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.

மேலும், பட்டாசு தொடா்பான வழக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை முடித்து வைக்கவும், பட்டாசு ஆய்வுக் கூடத்தை செயல்படுத்தவும், மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலரிம் கேட்ட போது, இது தொடா்பாக நாகபுரியில் உள்ள எங்களது தலைமை அலுவலகத்தில் கேட்டுக் கொள்ளுங்கள் என்றாா் அவா்.