சைபர் குற்றவாளிகள், ஒவ்வொரு நாளும், மக்களை எவ்வாறு ஏமாற்றலாம், அவர்களது மிக சொற்ப சேமிப்பையும் எப்படி திருடலாம் என பலவாறு யோசித்து புதுப்புது உத்திகளைக் கையாண்டு வருகிறார்கள்.
இதில், சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழப்பது ஒருபுறமிருந்தாலும், மற்றொருபுறம் சைபர் குற்றவாளிகளுக்கு உதவியதாக அப்பாவி மக்கள் சிக்குவதும் வாடிக்கையாகி வருகிறது.
முதலில் சொல்வது, சைபர் குற்றத்தில் பாதிக்கப்பட்டவராகக் கருதப்படுவார், இரண்டாவது சொல்வது குற்றவாளிகளாகக் கருதப்படுவர். இரண்டாவது வகைதான் மிகவும் மோசம். அதில், தாங்களும் சைபர் குற்றவாளிகளின் மோசடியில் சிக்கியவர்கள்தான் என காவல்துறையை நம்ப வைக்க வேண்டும்.
எனவே, அதுபோன்ற மோசடிகள் பற்றிய விழிப்புணர்வும் அவசியமாகிறது. அந்த வகையில், சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிநாட்டு சுற்றுலா செல்ல வாய்ப்பு என்று வரும் விளம்பரங்களைப் பார்த்து அந்த லிங்குகளை தொடரும் அல்லது அழைப்புகளை ஏற்கும் இளைஞர்கள், வெளிநாட்டில் சொகுசாக தங்கிவிட்டு இரண்டு நாள்கள் வரலாம். அதுவரை உங்கள் செல்போனை எங்களிடம் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பது போன்று மோசடியாளர்கள் வலை விரிப்பார்களாம்.
அந்த இரண்டு நாள்களில், அந்த செல்போனை வைத்து நிதி மோசடிகளில் ஈடுபடும் கும்பல், பிறகு, அதனை எதுவும் தெரியாதது போல, உரியவர்களிடம் ஒப்படைத்து விடும் புதிய மோசடி ஒன்று அரங்கேறி வருவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.
இவ்வாறு செல்போனை ஒப்படைக்கும் நபர்களுக்கு, தங்களது செல்போனை வைத்து என்ன நடந்தது என்று எப்போது தெரியவரும் என்றால், நிதி மோசடி குறித்த புகாரை விசாரிக்க காவல்துறை அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டும்போதுதான் தெரியவரும் என்கிறார்கள் காவல்துறையினர்.
எனவே, இதுபோன்று செல்போனை அல்லது வங்கிக் கணக்கை யாரேனும் பயன்படுத்திக் கொள்கிறோம், பணம் தருகிறோம், சுற்றுலா வாய்ப்பை ஏற்படுத்துவோம் என அழைப்பு விடுத்தால், அதற்கு ஒப்புக் கொள்ளக் கூடாது என் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செல்போனில் எந்த செயலியும் இல்லையே, எவ்வாறு நிதி மோசடி செய்ய முடியும் என்று நினைக்கலாம் சிலர். ஆனா, ஒரு செல்போன் இருந்தால் நிதி மோசடிக்கான அழைப்புகளை மேற்கொண்டு, மோசடியாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தலாம். ஆனால், பணம் இழந்தவருக்குத் தெரிந்தது, எந்த செல்போனில் இருந்து அழைப்பு வந்தது என்பது மட்டுமே. அந்த செல்போன் எண் மீதுதான் புகார் வரும். அந்த செல்போன் எண்ணை வைத்திருப்பவர்களிடம்தான் விசாரணை நடத்தப்படும் என்பதால், மக்களே உஷார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.