நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பலவகையான மோசடிகளும் நடைபெற்று வரும் நிலையில் இதில் சாதாரண மக்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. சாதாரண மக்களின் கோடிக்கணக்கான பணத்தை நிர்வகிக்கும் வங்கிகளும்தான் பாதிக்கப்படுகின்றன.
என்னது வங்கிகளே மோசடியால் பாதிக்கப்படுகின்றனவா? என்றால் உண்மைதான்.
எப்படி நடக்கிறது?
வங்கிகளில் தொடர்ச்சியாக சில வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றம் செய்வார்கள்.
வங்கிகளில் ஏற்கனவே வங்கிக்கணக்கு வைத்திருந்து வாடிக்கையாளராக இருப்பதுபோல காட்டிக்கொள்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் மின்னஞ்சல் மூலமாக வங்கிகளுக்கு பணப்பரிமாற்றம் செய்ய கோரிக்கை வைக்கின்றனர். அவசரம் என்று கூறி உடனே செய்ய வைக்கின்றனர்.
வங்கி ஊழியர்கள் சிலர் முழுவதுமாக சரிபார்க்காமல் மோசடியாளர்களின் கோரிக்கையின்படியே பணத்தை மாற்றியும்விடுகின்றனர். அதன்பின்னரே இது மோசடி என்று தெரிய வருகிறது.
வங்கிகளை குறிவைத்து நடத்தப்படும் இந்த மின்னஞ்சல் மோசடிகள் ஃபிஷிங் தாக்குதல்கள் எனப்படும்.
மின்னஞ்சல் மூலமாக கோரிக்கை விடுப்பதன் அடிப்படையில் வங்கி ஊழியர்கள் தங்கள் வாடிக்கையாளரின் கடவுச்சொற்கள், வங்கிக் கணக்கு எண்கள் அல்லது ஏடிஎம் பின் போன்றவற்றை முக்கியமான தகவல்களை தெரிவிக்கிறார்கள்.
இந்த தகவல்களைப் பெறும் அளவில் நம்பும்படியாக மோசடி கும்பலின் மின்னஞ்சல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
பாதுகாப்பு வழிமுறைகள்
வங்கிகள் பொதுவாக இதுகுறித்து தற்போது விழிப்புணர்வுடன்தான் செயல்பட்டு வருகின்றன. வங்கி ஊழியர்களுக்கு தொடர்ந்து இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும் பணப்பரிமாற்ற கோரிக்கைகளை அந்த வாடிக்கையாளருடன் நேரடியாக தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும்.
போலி மின்னஞ்சல்களைக் கண்டறிய கடுமையான மின்னஞ்சல் சான்றியல் செயல்முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
போலி மின்னஞ்சல்களைக் கண்டறிய மென்பொருள் உள்ளிட்ட உதவிகளை நாடலாம்.
வங்கி பணியாளர்களுக்கு இதுபோன்ற போலி மின்னஞ்சல்கள் அல்லது சதேகத்திற்கிடமான பணபரிமாற்ற கோரிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.
அதிக மதிப்புள்ள அல்லது அவசர பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதற்கு முன்பு ஆராய வேண்டும்.
இதேபோல வங்கிகள் பெயரில் மின்னஞ்சல்களை உருவாக்கி போலி மின்னஞ்சல்கள் மூலமாக வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பெற்று மோசடியில் ஈடுபடுவதும் நடக்கிறது.
எனவே, வாடிக்கையாளர்களும் வங்கிகளின் இ-மெயில்தானா என்பதை ஒருமுறை பரிசோதித்துக்கொள்ளவும். தனிப்பட்ட தகவல்களை வங்கிகள் இ- மெயில் மூலமாக கேட்காது. பணப்பரிமாற்றத்திற்கு வங்கி ஊழியர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.