ஹைதராபாத்தைச் சேர்ந்த 54 வயது அரசு ஊழியர் ஒருவர், கேரள மாநில அரசு நடத்தும் லாட்டரியில் பரிசு விழுந்ததாகக் கூறிய மோசடியாளர்களிடம் ரூ.7.5 லட்சத்தை இழந்திருக்கிறார்.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த மோசடி சம்பவம் குறித்து மக்கள் அறிந்துகொண்டால், மேலும் யாரும் இதுபோன்ற மோசடியில் ஏமாறாமல் தப்புவிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
அதாவது, ஒரு நாள், அரசு ஊழியரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மோசடியாளர், கேரள அரசு லாட்டரி நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், ஒரு சிறிய தொகைக்கு லாட்டரி டிக்கெட் வாங்கலாம். இன்றே குலுக்கல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
மிகச் சிறிய தொகை தானே என நினைத்த அவரும், வாட்ஸ்ஆப்பில் வந்த நம்பருக்கு பணம் அனுப்பியிருக்கிறார். மாலையில் அதே எண்ணிலிருந்து அழைப்பு. உங்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு விழுந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். லாட்டரி வாங்கியதாக நினைத்திருந்தவர், மகிழ்ச்சி அடைகிறார்.
ஆனால், மோசடியாளர்களோ, ரூ.5 லட்சத்தைப் பெற முன்கூட்டியே சில வரிகளை செலுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை நம்பாத அவர், எவ்வாறு உறுதி செய்வது என்று கேட்கிறார். அதற்கு ஒரு இணையதள லிங்கை அனுப்புவதாகவும் அந்த இணையதளத்தில் பரிசுத் தொகை விழுந்தது குறித்து அறிவிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதில் சென்று பார்த்தபோது, உண்மையில் அந்த இணையதளமும் அவ்வாறே லாட்டரி சீட்டு எண்ணுக்கு பரிசு விழுந்ததாகக் காட்டியது.
பிறகு, மோசடியாளர்கள் சொன்ன தகவல் உண்மை என நம்பிய அவரும், வெரி, செயல்பாட்டுக் கட்டணம் என அவர்கள் கேட்ட லட்சக்கணக்கான தொகையை சிறுக சிறுக அனுப்பியிருக்கிறார். ஒட்டுமொத்கமாக அவர் அனுப்பிய தொகை ரூ.7.55 லட்சம் என்பதை அவர் பிறகுதான் அறிந்திருப்பார்.
ஆனால், இவ்வளவு தொகை அனுப்பியும் அவர்கள் மேலும் மேலும் பணம் அனுப்பச் சொல்லியிருக்கிறார்களே, தவிர, பரிசுத் தொகையை கண்ணில் காட்டுவதாகத் தெரியவில்லை. பணம் வரவு வைக்கப்படாமல் தொடர்ந்து பணம் கேட்டதால் அவர் ஏமாந்துவிட்டதை அறிந்து சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, உடனடியாக விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
எனவே, இதுபோன்ற லாட்டரி மோசடியாளர்களின் வலையில் மக்கள் விழ வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கிறார்கள். போலியான இணையதளங்களையும் அவர்கள் உருவாக்குவதாகவும், உண்மையில் கேரள லாட்டரியிலிருந்து யாருக்கும் தொலைபேசியில் அழைப்பு விடுத்து டிக்கெட் வாங்கச் சொல்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
இது மட்டுமல்ல, கேரள லாட்டரியில் பரிசுத் தொகை விழுந்த லாட்டரி, கைவசம் இருப்பதாகவும் அது விற்பனைக்கு வந்திருப்பதாகவும் கூட விளம்பரங்கள் வருவதுண்டு. இதனைப் பார்த்தும் பணம் செலுத்தி ஏமாறுபவர்களும் இருக்கிறார்களாம்.
வெளிநபர்களின் செல்போன் எண்களை ஏற்கும்போது கவனம் தேவை.
தொடர்ந்து மோசடி சம்பவங்கள் தொடர்பாக வரும் முன்னெச்சரிக்கைகளை அறிந்து கொள்ளுங்கள்.
முன்பின் தெரியாதவர்களுக்கு எதற்காகவும் பணம் அனுப்ப வேண்டாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.