சைபர் குற்றங்களினால் பாதிக்கப்பட்டால் உடனடியாக புகார் அளிப்பது அவசியம் என சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் சைபர் குற்றங்களில் இந்தியர்கள் ரூ.22,842 கோடியை இழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் புகார் அளிப்பது பல மடங்கு அதிகரித்து வருகிறது.
ஆண்டுக்கு லட்சக்கணக்கில் சைபர் குற்ற புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 2024ல் 20 லட்சம் புகார்கள் பதிவானதாகக் கூறப்படுகிறது.
மேலும் மோசடியில் சிக்கிய பலரும் புகார் கொடுக்க மிகவும் தயங்குகின்றனர். அனைவரும் புகார் கொடுக்க முன்வந்தால் ஒட்டுமொத்த புகார்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டால் அதுகுறித்து உடனடியாக புகார் அளிக்க வேண்டும்.
மோசடி என்று தெரிந்தவுடன் உடனடியாக அருகில் உள்ள காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம்.
எப்படி செய்வது?
டிஜிட்டல் அரெஸ்ட் அல்லது இணையவழி மோசடிகளுக்கு 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930 -யை உடனடியாக அழைத்து உங்கள் புகாரைத் தெரிவிக்கவும் அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். புகாரை தெரிவிக்க இது வேகமான ஒரு வழியாகும்.
1930 எண்ணை அழைத்த பிறகு புகார் எண்ணுடன் கூடிய எஸ்எம்எஸ் ஒன்றைப் பெறுவீர்கள். உடனே 24 மணி நேரத்திற்குள் cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து முழு புகார் விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த புகார் எண்ணைப் பயன்படுத்தி புகாரை பதிவு செய்ய வேண்டும்.
உங்கள் வங்கிக் கணக்கு எண், பணப்பரிவர்த்தனை ஐடி/யுடிஆர், சந்தேக நபர் விவரங்கள் (பெயர், தொலைபேசி எண்கள் ஆகியவை), உங்களிடம் உள்ள ஸ்கிரீன்ஷாட்கள் அல்லது பரிவர்த்தனை ரசீதுகள் போன்ற வேறு ஏதேனும் ஆதாரங்களையும் அதிகாரிகளிடம் சமர்ப்பியுங்கள்.
சம்மந்தப்பட்ட வங்கிக்கும் தொடர்புகொண்டு உங்களுடைய வங்கிக்கணக்கில் இருந்து பணம் இழப்பதை நிறுத்திவைக்கலாம்.
புகார் அளிப்பது ஏன் அவசியம்?
புகார் அளிப்பதன் மூலமாக நீங்கள் இழந்த பணத்தை மீட்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. முழு பணத்தையும் எடுக்க முடியாவிட்டாலும் முடிந்தவரை பணத்தை மீட்டுத்தர அதிகாரிகள் முயற்சி செய்வார்கள்.
நிதி மோசடிக்குப் பிறகு, பணத்தை மீட்டெடுப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் குற்றவாளிகளைத் தடுக்கவும் உதவும். சட்ட காரணங்களுக்காகவும் இது அவசியம்.
சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகளும் உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு மோசடியாளர்களின் கணக்கையும் பணபரிமாற்றத்தையும் முடக்குவார்கள்.
புகாரைப் பதிவு செய்வது மற்றவர்களுக்கு அதிகாரிகள் அந்த மோசடி குறித்த எச்சரிக்கைகளை வழங்கவும் போலி வலைத்தளங்களை முடக்கவும் நிதி நிறுவனங்களை எச்சரிக்கவும் உதவுகிறது. இதனால் வேறு யாரேனும் மோசடியால் பாதிக்கப்படுவது தடுக்கப்படலாம்.
மோசடி தொடர்பாக வழக்கு தொடரவும் இந்த புகார்கள் அடித்தளமாகவும் ஆதாரமாகவும் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.