நிபா: மனிதர்களின் எதிரி!
பூக்களின் மீது கூட வெüவால்கள் எச்சமிட்டிருக்கலாம். நிபா வைரஸ் பூக்களில் பதுங்கி இருக்கலாம்.
மனிதர்களுக்கு எதிரி எப்போது, எங்கே உருவாகும் என்று யாராலும் சொல்ல முடியாது.
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டம் பெரும்பரா பகுதியில் உள்ளது சூபிக்கடா கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் உள்ளவர்களுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு சிகிச்சை செய்த லினி என்ற செவிலியரும் உயிரிழந்துவிட்டார். அதற்கப்புறம்தான் கண்டுபிடித்தார்கள், அந்த மூவரையும் நிபா வைரஸ் தாக்கியிருக்கிறது என்று.
கேரளாவில் நிபா வைரஸ் பரவியிருக்கிறது என்பதை புணேயில் உள்ள தேசிய வைராலஜி சோதனைக் கூடம் உறுதி செய்திருக்கிறது. அதற்குப் பிறகு 16 பேருக்கும் அதிகமானோர் இந்த நிபா வைரஸால் உயிரிழந்திருக்கிறார்கள்.
நிபா வைரஸால் தாக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் இதில் சோகம்.
இந்த வைரஸ் தாக்குதல் முதன்முதல் மலேசியாவில் 1998 -1999 ஆண்டுகளில்தான் கண்டறியப்பட்டது. மலேசியாவில் உள்ள "நிபா' என்ற கிராமத்தில் இருந்த ஒருவரை இந்த வைரஸ் தாக்கியதால் அதற்கு நிபா வைரஸ் என்ற பெயர் வந்துவிட்டது.
இந்த வைரஸின் இருப்பிடம் பழந்தின்னி வெüவால்களின் உடல்தான். வெüவால்களின் உடலில் உள்ள எச்சில், சிறுநீர், எச்சம் போன்றவற்றின் மூலமாக பிற உயிரினங்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது.
நிபா கிராமத்தில் பன்றி வளர்ப்புப் பண்ணைகள் இருந்தன. அவற்றைச் சுத்தம் செய்த மனிதர்களை இந்த நிபா வைரஸ் தொற்றிக் கொண்டது. இது எப்படி? வெüவால் கொத்திய பழத்தை பன்றிகள் தின்றதால் அவற்றை வைரஸ் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். பன்றிகளின் உணவு, அவை குடிக்கும் நீர் ஆகியவற்றில் வெüவால்களின் எச்சம், சிறுநீர் ஆகியவை விழுந்திருந்து, அவற்றை பன்றி உட்கொண்டால், நிபா வைரஸ் பன்றிகளைத் தாக்கியிருக்க முடியும். அந்தப் பன்றிகளின் உடலிலிருந்து வெளியேறும் கழிவுகளின் மூலம் அவற்றைச் சுத்தம் செய்த மனிதர்களை வைரஸ் தாக்கிவிட்டது.
வங்கதேசம் ஃபரித்பூர் மாவட்டத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு பனைமரத்திலிருந்து எடுக்கப்பட்ட கள்ளை, பதநீரை அருந்தியவர்களை இந்த நிபா வைரஸ் தாக்கியது. வெüவால்கள் பனை மரத்தின் உச்சி வரை பறந்து சென்று, உச்சியில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் கலயங்களில் எச்சமிட்டு, சிறுநீரை கழித்ததால் இந்த வைரஸ் கள்ளில், பதநீரில் பரவிவிட்டது. அந்த கள்ளை, பதநீரை அருந்திய மனிதர்களை வைரஸ் தாக்கியிருக்கிறது. வங்கதேசத்தில் அப்போது 18 பேர் உயிரிழந்துவிட்டார்கள்.
இந்த நிபா வைரஸ் தாக்கியவர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் இறந்து போய்விடுகிறார்கள். அவர்களைக் காப்பாற்ற முடிவதில்லை.
மரத்திலிருந்து கனிந்து கீழே விழும் பழங்களை எல்லாரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இனி அப்படிச் சாப்பிடுவதைக் கூட யோசிக்க வேண்டும். அந்தப் பழம் வெüவால் கொத்தியதால் விழுந்திருக்கலாம். பழங்களைச் சாப்பிடும்போது இனி பார்த்து... பார்த்து கவனமாகச் சாப்பிட வேண்டியிருக்கிறது.
பூக்களின் மீது கூட வெüவால்கள் எச்சமிட்டிருக்கலாம். நிபா வைரஸ் பூக்களில் பதுங்கி இருக்கலாம். பூ விரும்பிகள் கொஞ்சம் யோசிக்க வேண்டிய தருணம் இது.
நிபா வைரஸ் பன்றிகளை மட்டுமல்ல, நாய்கள், குதிரைகள், ஒட்டகங்கள், பூனைகள் என மனிதர்களின் வளர்ப்பு பிராணிகள் அனைத்தையும் தொற்றக் கூடும். படுக்கையறை வரை வளர்ப்பு மிருகங்களை அனுமதிப்பவர்கள்- அவற்றைத் தூக்கி கொஞ்சுபவர்கள் - இனிமேல் அவை தங்கியிருக்க தனியிடம் ஒதுக்குங்கள். ஏனெனில் வளர்ப்பு மிருகங்களைத் தொற்றிக் கொண்ட இந்த வைரஸ், மனிதர்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம்.
கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தாக்கி இறந்தவர்களின் வீட்டை சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆய்வு செய்தபோது, அவர்களின் வீட்டில் இருந்த கிணற்றில் வெüவால்கள் கிடந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தக் கிணற்று நீரைக் குடித்ததால் நிபா வைரஸ் தாக்குதலுக்கு அவர்கள் இரையாகிவிட்டார்கள். எனவே வீட்டில் உள்ள நீர்நிலைகள் எல்லாவற்றையும் மிகத் தூய்மையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெளவால்கள் கிணற்றுக்குள் விழுந்தால்தான் நிபா வைரஸ் தொற்று ஏற்படும் என்பதில்லை. அவை எச்சமிட்டாலேயே போதும். கிணறுகள் இருந்தால் அவற்றின் மேல் பகுதியை மூடி விட வேண்டும்.
அடுத்து குடிக்கும் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு கிருமிகளைக் கொல்லும் சோப்பைப் பயன்படுத்தி கைகளை ஒருமுறைக்கு இருமுறை நன்கு கழுவி பின்னர் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால் நாம் வெளியிடங்களுக்குச் செல்லும்போது, நெரிசலான பஸ்ஸில், ட்ரெயினில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அப்போது நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரை நாம் தொட்டிருக்கலாம். அவர்கள் தும்மி கண்ணுக்குத் தெரியாத எச்சில் நம் மீது பட்டிருக்கலாம். எனவே கைகளை நன்கு கழுவ வேண்டும்.
நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவருடன் உடல்ரீதியான தொடர்பு கொண்டால், தொடர்பு கொண்டவரை இந்த வைரஸ் உடனே தொற்றிக் கொள்ளும்.
இந்த வைரஸ் காற்றில் பரவாது என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவுக்குப் பரவாயில்லை. இல்லையென்றால் எப்படி மூச்சுவிடுவது என்று தெரியாமல் நாம் விழிக்க வேண்டியிருக்கும்.
இந்த வைரஸ் ஒருவரைத் தொற்றிக் கொண்டால், அவருக்குக் காய்ச்சல் வரும். தலை வலிக்கும். வாந்தி எடுப்பார். சோர்ந்து போவார். சிலருக்கு வலிப்பு கூட வரும். இந்த ஆரம்ப அறிகுறிகள் ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு கோமா நிலையை சிலர் அடைந்துவிடுகின்றனர். அதற்குப் பின் மரணம் தழுவிக் கொள்கிறது.
எனவே காய்ச்சல் வந்தவுடன் பக்கத்து மருந்து கடைக்குப் போய், கடைக்காரரிடம் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவது, வீட்டில் உள்ள பழைய காய்ச்சல் மாத்திரையை உட்கொள்வது என்று சுயமருத்துவம் செய்து கொள்ளாமல், அருகில் உள்ள சிறந்த மருத்துவமனையை நோக்கி உடனே செல்லுங்கள்.
நிபா வைரஸ் தொற்றிக் கொள்ளாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நம்மைப் பாதுகாக்க நாமிருக்கமாட்டோம்.