கண்காட்சி: இருக்குமிடம் தேடி..!
புத்தக வாசிப்பு மிகவும் குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் ஓய்வுநேரங்களில் யார் புத்தகங்களை வாசிக்கிறார்கள்? எல்லாரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போய்விடுகிறார்கள்' என்று ஒருபுறம் புலம்புகிறார்க
புத்தக வாசிப்பு மிகவும் குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் ஓய்வுநேரங்களில் யார் புத்தகங்களை வாசிக்கிறார்கள்? எல்லாரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போய்விடுகிறார்கள்' என்று ஒருபுறம் புலம்புகிறார்கள்.
ஆனால், தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் திருவிழாவுக்குச் செல்வதைப் போல இப்போது புத்தகக் கண்காட்சிகளுக்கும் செல்கிறார்கள்.
பிற புத்தகக் கண்காட்சிகளைப் போல இல்லாமல், மிகவும் மாறுபட்டவிதத்தில் தமிழகத்தின் முக்கியப் பதிப்பகங்களில் ஒன்றான அநுராகம் பதிப்பகம், பிற பதிப்பகங்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு இப்போது புத்தகக் கண்காட்சிகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.
அந்தக் கண்காட்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள கலைஞன் - அநுராகம் பதிப்பகத்தைச் சேர்ந்த மா.நந்தனை அணுகிக் கேட்டோம்.
நிறையப் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. நீங்கள் நடத்தும் புத்தகக் கண்காட்சிகளில் என்ன சிறப்பு?
இப்போதெல்லாம் நிறையப் புத்தகக் கண்காட்சிகள் பெரிய நகரங்களில் நடக்கின்றன. நகரத்திலும், நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளவர்கள்தாம் இந்தப் புத்தகக் கண்காட்சிகளுக்கு வருகிறார்கள்.
சிறிய நகரங்களில் உள்ள புத்தகப் பிரியர்களுக்கு அங்குள்ள நூலகங்களைவிட்டால் வேறு கதியில்லை. அவர்களுக்கும் புத்தகங்கள் சென்று சேர வேண்டும் என்று விரும்பினோம். அதற்காகவே சிறிய நகரங்களிலும், தாலுகாக்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தத் திட்டமிட்டோம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், 120 தாலுகாக்களிலும் அநுராகம் பதிப்பகத்தின் சார்பில் புத்தகக் கண்காட்சிகளை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். இப்போது கடந்த ஒருவாரமாக மேட்டுப்பாளையம், குளித்தலை, திருக்கோவிலூர், திருத்தணி, சேலம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், வேலூர், தேனி ஆகிய ஊர்களில் புத்தகக் கண்காட்சிகள் நடந்து வருகின்றன. இது தமிழகத்தின் பல ஊர்களில் இம்மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி வரை நடைபெறும்.
இன்று முதல் பொள்ளாச்சி, ராசிபுரம், செஞ்சி, சங்கராபுரம், மதுராந்தகம், தர்மபுரி, அரூர், பரமக்குடி, பழனி ஆகிய ஊர்களில் புத்தகக் கண்காட்சிகள் தொடங்குகின்றன.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் விஜயா, அம்ருதா, கடலங்குடி, குமுதம், நக்கீரன், காலச்சுவடு, ஆனந்தநிலையம், மதிநிலையம், அன்னம், கங்கை, வனிதா, பூங்கொடி உட்பட 50 பதிப்பகங்கள் பங்கேற்கின்றன.
எந்தெந்த துறை நூல்களை கண்காட்சியில் விற்பனை செய்கிறீர்கள்?
பல பதிப்பகங்கள் பங்கேற்பதால் இந்தப் புத்தகக் கண்காட்சிகளில் பல வகைப்பட்ட நூல்களும் கிடைக்கின்றன. சமையல், அரசியல், மருத்துவம், ஜோதிடம், தன்னம்பிக்கை, கம்ப்யூட்டர், இலக்கியம் என எல்லா வகை நூல்களும் கண்காட்சிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் கண்காட்சிகளை நடத்த வேண்டிய தேவை என்ன?
இப்படி சிறிய ஊர்களில் கூட புத்தகக் கண்காட்சிகள் நடத்த வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுள்ளது. காட்சி ஊடகங்களின் பெருக்கத்தால் புத்தகம் படிக்கும் பழக்கம் தற்போது குறைந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. பள்ளி மாணவர்கள் முன்பைப் போல பாஸ் மார்க் எடுத்தால் மட்டும் போதாது. அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான் அவர்களுடைய உயர்கல்வி எளிதாகும். அதற்காக மாணவர்கள் அதிகச் சிரமம் எடுத்துக் கொண்டு படிக்கிறார்கள். பள்ளி முடிந்ததும் ட்யூஷன் போகிறார்கள். ஹோம் ஒர்க் செய்து முதுகு ஒடிகிறார்கள். இதனால் வெளி நூல்களைப் படிக்கச் சிலருக்கு மனமிருந்தாலும் படிக்க முடிவதில்லை.
இன்னொருபுறம் தங்களுடைய அன்றாடத் தேவையை ஒட்டி படிப்பது அதிகரித்துவிட்டது.
ஆனால் உண்மையில் அனைத்து வகையான நூல்களையும் ஒருவர் படிக்க வேண்டும். ஐஏஎஸ் படிப்பவர்கள் பரந்த அளவில் வாசித்தால்தான் தேர்வில் வெற்றி பெற முடியும். இந்த அவசரயுகத்தில் இலக்கியத்தின் தேவை முன் எப்போதைக் காட்டிலும் அதிகரித்து உள்ளது. இலக்கியம் படித்தால் மனம் பண்படும். அமைதியடையும். எனவே மக்களுக்குப் புத்தக வாசிப்பின் தேவையை உணர வைப்பது அவசியமாகிறது.
பலருக்கு புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் புத்தகக் கடைக்கு வந்து புத்தகம் வாங்கச் சோம்பேறித்தனப்படுவார்கள். சிறுநகரங்களில், கிராமங்களில் உள்ளவர்கள் புத்தகம் வாங்குவதற்கென்று நகரத்திற்குச் செல்வது எல்லாம் நடக்காத கதை.
எனவே வாசகர்கள் இருக்குமிடம் தேடி அங்கேயே புத்தகங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தோம். அதற்காகத்தான் எல்லா ஊர்களிலும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துகிறோம்.
பெண்கள் புத்தகக் கண்காட்சிகளுக்கு அதிக அளவில் வருகிறார்களா?
முதலில் எல்லாம் அதிக அளவில் ஆண்கள்தாம் புத்தகங்கள் வாசித்துக் கொண்டு இருந்தார்கள். வீட்டில் கணவர் புத்தகம் வாங்கினால் எதற்கு இது தண்டச் செலவு? என்று பெண்கள் தடுத்து வந்தார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
இப்போது பெண்களும் புத்தகங்களை அதிக அளவில் வாசிக்கிறார்கள். எனவே சிறிய நகரங்களிலும் சிறிய ஊர்களிலும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துவதன் மூலம், நல்ல நல்ல புத்தகங்களை பெண் வாசகர்களுக்கும் கொண்டு சேர்க்க முடியும் என்று நினைத்தோம்.
பெண்கள் புத்தக வாசிப்பில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால்தான் எங்களுடைய புத்தகக் கண்காட்சியின் துவக்க விழா சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற போது, 100 பெண்களைக் கொண்டு 200 புத்தகங்களை வெளியிட்டோம். இது தமிழகத்தில் இதுவரை யாரும் செய்யாத ஒன்று.
இந்தப் புத்தகக் கண்காட்சிகளால் என்ன நன்மை?
புத்தகங்களைப் பரவலாகக் கொண்டு செல்வதால் படிக்கும் பழக்கம் அதிகரிக்கும். இதனால் புத்தகங்களின் தேவை அதிகரிக்கும். நிறைய நூல்கள் வெளிவரும். எனவே தமிழகம் முழுவதும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துவதை ஓர் இயக்கமாகச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம்.
ஒரு வாரத்துக்கும் மேலாகப் புத்தகக் கண்காட்சிகள் நடத்தி வருகிறீர்கள். எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது?
தற்போது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வரும் இடங்களில் நல்ல விற்பனையாகிறது. நல்ல ஆதரவு இருக்கிறது. புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டு சென்றால் வாங்கிப் படிப்பார்கள் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
புத்தகங்களை வாங்குவதை ஊக்குவிக்கும்விதமாக வாங்கக் கூடிய புத்தகங்களுக்கு புத்தக விலையில் 10 சதவீதம் கழிவு தருகிறோம்.
அநுராகம் பதிப்பக நூல்களைப் பொறுத்தவரை ரூ.42 க்கு வாங்கினால் ரூ.40 பெறுமானமுள்ள நூல்களை இலவசமாகத் தருகிறோம்.
படங்கள்: ஏ.எஸ்.கணேஷ்