கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளி செல்லத் துவங்கிவிட்டனர். புத்தகச் சுமை, பாடங்கள், டியூஷன் என்று மீண்டும் ஆரம்பித்துவிட்டது அவசர வாழ்க்கை.
பாடப் புத்தகங்களுடன் ஐக்கியமாகிவிட்ட மாணவர்களின் வார இறுதி நாட்களை டி.வி ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது. போதாக்குறைக்கு வீட்டுப் பாடம் வேறு!
பாடப் புத்தகங்களைத் தவிர, வேறு புத்தகங்களையோ, செய்தித்தாள்களையோ, வாராந்திர இதழ்களையோ படிக்க முடியாதபடி அவர்களின் வாழ்க்கை முறை சுழல ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில், "மாணவர்களிடையே படிக்கும் பழக்கம் மறைந்து வருகிறது' என்ற பொதுவான குற்றச்சாட்டு பரவலாகக் கூறப்படுகிறது.
மாணவர்களிடையே மறைந்து வரும் (?) படிக்கும் பழக்கத்தை மீட்டெடுப்பது எப்படி? அதற்குப் பெற்றோரும், ஆசிரியர்களும் செய்ய வேண்டியது என்ன?
வாசிப்பை நேசிக்கும் பிரமுகர்கள் சிலரைச் சந்தித்தோம்.
கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையின் தலைமை மன நல மருத்துவர் சீனிவாசன்:
பாடப் புத்தகங்கள் நீங்கலாக, மற்ற புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் மாணவர்கள் மத்தியில் மறைந்து வருவது உண்மை. இதற்கு பெற்றோரும், அந்த மாணவனைச் சுற்றியுள்ள நண்பர்களுமே காரணம். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடலாகத் திகழ வேண்டும். செய்தித்தாள்கள், நாவல்கள் படிக்கும் பெற்றோரைப் பார்த்துதான் குழந்தைகளும் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் இன்றைய நிலையில், பெற்றோர்கள் டி.வி.யில்தானே மூழ்கிக் கிடக்கிறார்கள்?
விடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸில் மூழ்கிக் கிடக்கும் நண்பர்களைப் பெற்ற மாணவன், புத்தகம் படிப்பதில் எப்படி ஆர்வம் காட்டுவான்?
முன்பெல்லாம் வீட்டில் தாத்தா, பாட்டி என பெரியவர்கள் இருப்பார்கள். குழந்தைகளுக்கு கதை சொல்வார்கள். அதனால் கற்பனை நயமிக்க கதைப் புத்தகங்களை குழந்தைகளே தேடிப் படிப்பார்கள். இப்போது கதை சொல்ல யார் இருக்கிறார்கள்? கதை சொல்லும் நேரத்தில் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடையேயான பாசப் பிணைப்பு இறுகுகிறது. இன்று குழந்தைகளுக்கு கதை சொல்லும் பெற்றோரைக் காண்பது அரிதாக இருக்கிறது.
பெற்றோர்கள் குழந்தைகளின் எதிரில் புத்தகங்களையோ, செய்தித்தாள்களையோ வாசித்து அவர்களுக்கு ஒரு ரோல் மாடலாகத் திகழ வேண்டும்.
வாசிக்கும் பழக்கம் இல்லாத குழந்தைகளுக்கு "சோஷியல் ஸ்கில்' எனப்படும் சமூகத்துடன் கலந்து பழகும் தன்மை இல்லாமல் போய்விடுகிறது.
தொடர்ச்சியான வாசிப்பால் மட்டுமே, மொழியறிவு கைகூடும். விதவிதமான சொற்களைக் கையாள்வது சாத்தியப்படும். ஒரு விஷயத்தைச் சாதாரணமாகச் சொல்வதற்கும், கலைநயத்துடன் சொல்வதற்கும் வேறுபாடு உள்ளது. பலதரப்பட்ட நூல்களையும், நாவல்களையும் படித்தால்மட்டுமே மொழியில் ஆளுமை பெற முடியும்.
படிப்பதில் இரண்டு வகை உண்டு. ஒன்று மகிழ்ச்சிக்காகப் படிப்பது. இரண்டாவது கட்டாயத்தின் பேரில் படிப்பது. நாவல்கள், வார இதழ்கள் படிப்பது மகிழ்ச்சிக்காகப் படிப்பதில் வரும். ரசித்துப் படிப்பது. பிறர் ரசிக்கப் படிப்பது. ஓர் அனுபவத்திற்காகப் படிப்பது என்பதும் இதில் அடங்கும். இத்தகைய மகிழ்ச்சியை நம் குழந்தைகளுக்கு நாம் கட்டாயம் கொடுத்தாக வேண்டும்.
பள்ளிகளில் மாரல் பீரியட் நேரத்தில் கதைகள் வாசிப்பதற்கும், அதை மற்றவர்கள் கேட்பதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும். நாவல்கள், கதைகள் படிப்பதால் குழந்தைகளின் மொழி வளம் பெருகும். உச்சரிப்பு மேம்படும். பேச்சுவன்மை கூடும். பிழையில்லாமல் பேச, எழுத முடியும்.
பாடப் புத்தகங்களைத் தவிர, பிற புத்தகங்களையும் படிக்கும் ஆர்வத்தை 5-ம் வகுப்பு வரை ஒரு மாணவனுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்குப் பிறகு வாசிக்கும் பழக்கத்தை அவனே நேசிக்க ஆரம்பித்துவிடுவான்.
கோவை பீளமேடு ஜி.ராமசாமி நாயுடு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சீதா பூவைய்யா: செய்தித்தாள்கள் வாசிப்பதற்கென்றே குறிப்பிட்ட நேரத்தை எங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கியுள்ளோம். தினந்தோறும் காலை 10.50 மணி முதல் 11.10 வரை (20 நிமிடங்களுக்கு) எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு படிக்கும் ஈழ்ர்ல் உஸ்ங்ழ்ஹ்ற்ட்ண்ய்ஞ் ஹய்க் தங்ஹக்ண்ய்ஞ் வழக்கத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம். நான்காம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் இந்த 20 நிமிடங்களில் கட்டாயம் ஏதேனும் ஒரு செய்தித்தாளை (தமிழ் அல்லது ஆங்கிலம்) வாசிக்க வேண்டும். இதற்கென நிறைய செய்தித்தாள்களை வாங்குகிறோம். இதனால் செய்தித்தாள்கள் படிப்பது மாணவர்கள் மத்தியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அசெம்பிளி முடிந்ததும், அந்த வாரம் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சிகளில் இருந்து 5 வினாக்களை மாணவர்களிடம் கேட்பேன். அதற்கு முதலில் விடைகூறும் 3 மாணவர்களுக்கு அதற்கு அடுத்த வாரம் திங்கள்கிழமை நடைபெறும் அசெம்பிளியில் பரிசுகள் வழங்குகிறேன். இதனால் கேள்விக்கு விடை தேடும் ஆர்வத்தில் மாணவர்கள், செய்தித்தாள்கள், புத்தகங்களைப் புரட்டுகிறார்கள். இதற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
செய்தித்தாள்களை சரியாகப் படித்து வரும் மாணவர்களுக்கு மாரல் சயின்ஸ் பாடத்திலோ அல்லது பொது அறிவு சப்ஜெக்டிலோ 5 மதிப்பெண்களை வழங்குகிறோம். மாதத்துக்கு ஒரு முறை வினாடி-வினா நிகழ்ச்சியை நடத்துகிறோம். இதனால் பாடப் புத்தகத்தைத் தவிர, மற்ற புத்தகங்களைப் படித்து, பொது அறிவுத் தகவல்களைத் திரட்ட மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
மாணவர்களின் கதை, கவிதை, கட்டுரை எழுதும் திறமையை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது படைப்புகளை நோட்டீஸ் போர்டில் இடம்பெறச் செய்கிறோம்.
எங்கள் பள்ளியில் செயல்படுத்தப்படும் இந்த நடைமுறையை மற்ற பள்ளிகளும் பின்பற்றினால், மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை நிச்சயம் ஏற்படுத்த முடியும்.
கவிஞர் புவியரசு: 15 வயதுக்குள் ஒரு மாணவனுக்கோ, மாணவிக்கோ பாடப் புத்தகங்கள் நீங்கலாக மற்ற புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் வரவில்லை என்றால், பிறகு என்ன செய்தாலும் அப்பழக்கத்தைக் கொண்டு வர முடியாது. தாய் மொழி வழிக் கல்வி பயிலாத குழந்தைகளிடம், படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது கடினம். தற்போது நடைமுறையில் இருக்கும் அனைவருக்கும் கல்வித் திட்டத்தால் (சர்வ சிக்ஷ அபியான்), குழந்தைகளால் சரியாக எழுதவோ, படிக்கவோ முடிவதில்லை. வாக்கியங்களை உருவாக்கக் கூட அவர்களுக்குத் தெரிவதில்லை.
இப்போது இருக்கும் சூழ்நிலையில், தங்கள் குழந்தைகள் பள்ளிப் பாடங்களை சரிவரப் படிக்க வேண்டும், முதல் ரேங்க் வாங்க வேண்டும் என்பதிலேயே பெற்றோர் குறியாக இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளைப் பிழிந்தெடுக்கிறார்கள். பள்ளிப் பாடங்களைப் படிக்கவே போதிய நேரமின்மையால் அவதிப்படும் குழந்தைகள், வேறு வகையான புத்தகங்களையோ, நாவல்களையோ படிக்க முடிவதில்லை. அவர்களுக்கு அதற்கு நேரமும் இருப்பதில்லை. மனம் அமைதியாக ரிலாக்ஸôக இருந்தால் மட்டுமே, நாவல்கள், இதர புத்தகங்கள் படிப்பது சாத்தியம். அதற்குத்தான் இப்போது வாய்ப்பே இல்லையே!.
தாய் மொழி வழிக் கல்வியில் படித்தவர்கள்கூட பின்னர் ஆங்கில வழிக் கல்விக்கு மாறி விடுகிறார்கள். நகராட்சிப் பள்ளிகள் மூடு விழா கண்டு வருகின்றன. அங்கு படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எல்லோரும் ஆங்கில மோகத்தால், ஆங்கில வழிக் கல்வி போதிக்கும் பள்ளிகளைத் தேடிப் போக ஆரம்பித்துவிட்டார்கள். ஆங்கில மொழி நாவல்களைப் படிக்கும் பழக்கமாவது அதிகரித்து வருகிறதா என்றால், அதுவும் இல்லை.
ஹாரிபாட்டர் புத்தகங்களை நம்மவர்கள் வரிசையில் நின்று வாங்கிக் குவித்தார்கள். குழந்தைகளும் கால்கடுக்க நின்று வாங்கினார்கள். ஆனால் அந்தப் புத்தகம் முழுவதையும் அவர்கள் வாசித்தார்களா என்றால், இல்லை. பெற்றோரும் அந்தப் புத்தகங்களைப் படிக்கவில்லை. காரணம், மெத்தப் படித்தவர்கள்கூட எளிதில் புரிந்து கொள்ள முடியாதபடி அந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது. போலித்தனமான ஆங்கில மோகத்தால் புத்தகத்தை வாங்கிக் குவித்ததே மிச்சம்.
தமிழகத்தில் பிளஸ் 2 படிக்கும் பிள்ளைகள்கூட எழுத்தாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட தமிழில் தலைசிறந்த எழுத்தாளர்களைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை என்பதே நிஜம். குழந்தைப் பருவத்தில்தான் வாசிக்கும் பழக்கம் வரும். ஆனால் அந்தப் பருவத்தில் குழந்தைகளை டி.வி. பார்க்க நாம் அனுமதிக்கிறோம். டி.வி. பெட்டி முன் உட்கார்ந்து பொழுதைப் போக்கும் குழந்தைகளே அதிகம்.
படிப்பைப் பாதியில் விட்டவர்கள், பல சரக்குக் கடை வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட அரைகுறைப் படிப்பாளிகளால் மட்டுமே இப்போது இலக்கியம் வளர்ந்து வருகிறது.
அப்படியென்றால் குழந்தைகளிடையே படிக்கும் பழக்கத்தை வளர்ப்பது எப்படி என்கிறீர்களா?. தாய் மொழியில் குழந்தைகள் கல்வி கற்கும் நிலை வரும் வரை வேறு எதுவும் செய்ய முடியாது. இது எதிர்மறையான சிந்தனையாக இருந்தாலும்கூட, இதுதான் அப்பட்டமான நிஜம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.