முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மனதை அமைதிப்படுத்தும் மருந்துகள்!

ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் கர்ப்பமாக இருந்தேன். கருப்பையில் கட்டி இருந்ததால் வேறு வழியின்றி ஆபரேஷன் மூலம் கருவுடன் சேர்த்து கர்ப்பப்பை அகற்றப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களில் 10 கிலோ எடை கூடியுள்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:49 PM
பகிர்:

ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் கர்ப்பமாக இருந்தேன். கருப்பையில் கட்டி இருந்ததால் வேறு வழியின்றி ஆபரேஷன் மூலம் கருவுடன் சேர்த்து கர்ப்பப்பை அகற்றப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களில் 10 கிலோ எடை கூடியுள்ளது. கால் முட்டி வீங்கி மிகவும் வலி உள்ளது. பொறுமையின்மை, அவசர புத்தி, கோபம் அதிகமானால் கையில் கிடைக்கும் பொருளைத் தூக்கி எறிதல், பிரச்னைகளைத் தாங்கும் மனவலிமை இல்லை. என்னை ஹிஸ்டீரியா நோயாளி என்கிறார்கள். இவற்றிலிருந்து நான் விடுபட என்ன செய்வது?

எம்.சத்தியப்பிரியா, திருப்பூர்.

உங்களுடைய நீண்ட கடிதத்தில் உங்கள் வயது 35 என்றும், ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். சிறுவயதிலேயே கருப்பை நீக்கமும், அடுத்ததாக ஓர் ஆண் வாரிசை நீங்கள் எதிர்பார்த்திருந்து அது கிடைக்காமற் போன ஏமாற்றத்தாலும், இனி கருவைச் சுமக்க இயலாது என்ற மனவருத்தமும் சேர்ந்து உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நன்றாகத் தெளிவாகிறது. உறவினர்களிடம் இருந்தும் மன வருத்தம் ஏற்படும்படியாகப் பேச்சுகளை இவ்விஷயத்தில் நீங்கள் கேட்டிருந்தாலும், ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையும் அவர்களைப் பார்த்தால் வெறுப்பும் ஒதுங்கிக் கொள்ளும் மனப்பான்மையும் தங்களுக்கு நேர்ந்திருந்தால் மனம் மேலும் மேலும் பலவீனமடைந்து நீங்கள் குறிப்பிடும் மன உபாதைகள் அனைத்தும் தோன்றக் கூடும்.

Advertisement

இறைவன் உங்களுக்கு ஓர் அழகான பெண் குழந்தையைக் கொடுத்துள்ளார். குழந்தையே பிறக்காதா என்று பல பேர் ஏங்கிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் உங்களுக்குக் கிடைத்துள்ள அன்பான சுட்டியான பெண்ணை அரவணைப்புடன் வளர்த்து நன்றாகப் படிக்க வைத்து அவளுடைய வருங்கால வளமான வாழ்விற்காக நீங்கள் திட்டமிடலாம்.

மனிதர்கள் எதை அடக்கக் கூடாது, எதை அடக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளது. இயற்கை உந்துதல்களாகிய வாயு, மலம், சிறுநீர், தும்மல், தண்ணீர் தாகம், பசி, தூக்கம், இருமல், வேகநடை அல்லது ஓட்டத்தினால் ஏற்படும் பெருமூச்சு, கொட்டாவி, கண்ணீர், வாந்தி ஆகியவற்றை வலுக்கட்டாயமாக அடக்குவதோ, வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதோ கூடாது என்கிறது. அவற்றை அடக்குவதால் ஏற்படும் நோய்களும், அதற்கான சிகிச்சை முறைகளையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளது.

  இம்மையிலும், மறுமையிலும் நன்மையை விரும்புகிறவர், எப்போதும் புலன் அடக்கத்தோடு இருந்து கொண்டு, பேராசை, பொறாமை, பகைமை, குரோதம், வஞ்சனை, துரோகம் நினைத்தல் முதலிய மனதைச் சார்ந்த உந்துதல்களை அடக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் உபதேசிக்கிறது.

மனம் சார்ந்த இவற்றைப் பலரும் உங்களிடம் காட்டியிருக்கக் கூடும். அதனால் நீங்கள் வருத்தம் ஏதும் கொள்ளாமல் கணவர், குழந்தை, உறவினர்களுடன் சகஜமாகவும் அன்புடனும் பழகி வருவதே சிறந்தது.

உடல் எடை குறைய தேன் கலந்த குளிர்ந்த நீரை காலை இரவு உணவிற்குப் பிறகு அருந்தவும். முட்டி வீக்கம், வலி நீங்க சதகுப்பையை புளித்த மோருடன் அரைத்து, லேசாகச் சூடாக்கி காலை இரவு உணவிற்கு அரை மணி நேரம் முன்பாக இரண்டு முட்டியிலும் பற்று இடவும்.

மனதை வலுப்படுத்த மானஸமித்ரம் எனும் ஒரு குளிகையைக் காலை மாலை சிறிது பாலுடன் வெறும் வயிற்றில் சாப்பிடவும். மனம் அமைதியாக இருக்கத் தலையில் பிரம்மீதைலம் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தவும்.

12 அங்குலம் மேலிருந்து சட்டியில் துளையிட்டு அதன் மூலம் நெற்றி, தலை, நெற்றிப் பொட்டு ஆகிய பகுதிகளில் பிரம்மீ தைலத்தை நோயாளி படுத்த நிலையில் ஊற்றச் செய்வது மனம் சார்ந்த உபாதைகளுக்கு நல்ல சிகிச்சை முறையாகும்.

மனதை அமைதியுறச் செய்யும் மருந்துகள் பல இருந்தாலும் நோயாளிக்கு நோயாளி அது மாறுபடும். மேற்குறிப்பிட்டவை அனைத்தும் பொதுவான மருந்துகள் என்பதால் அவற்றைக் குறிப்பிடுவதில் தவறேதுமில்லை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.