தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தோல் நோய் குணமாக...

சொரியாசிஸ் எனும் தோல்நோயை ஆயுர்வேதத்தின் மூலம் குணப்படுத்த முடியுமா? என் அனுபவத்தில் கட்டுப்பட வைக்க முடியுமே தவிர, குணப்படுத்த இயலாது என்பதுதான் விடையாக இருக்கிறது. முடியும் என்றால் என்ன மருந்து உட்க

எஸ். சுவாமிநாதன்

சொரியாசிஸ் எனும் தோல்நோயை ஆயுர்வேதத்தின் மூலம் குணப்படுத்த முடியுமா? என் அனுபவத்தில் கட்டுப்பட வைக்க முடியுமே தவிர, குணப்படுத்த இயலாது என்பதுதான் விடையாக இருக்கிறது. முடியும் என்றால் என்ன மருந்து உட்கொள்ள வேண்டும்?

சி.வி.பாலகிருஷ்ணன், கோவை.

அஷ்டாங்க ஹிருதயம் எனும் ஆயுர்வேத நூல், தோல் உபாதைகளுக்கான காரணங்களை மற்ற மருத்துவமுறைகளிலிருந்து மாறுபட்ட கோணத்தில் ஆராய்ந்து வெளிப்படுத்துகிறது. அவற்றில் முக்கியமாக முறைகேடான உணவு, செயல் ஆகியவற்றாலும், பொருந்தா உணவு, பொருந்தா பக்குவமுறை முதலியவற்றாலும் இப்பிறவி அல்லது முற்பிறவியில் தொடர்ந்து நல்லோரை நிந்தித்தல், பிறர் பொருளை அபகரித்தல் முதலிய பாபச் செயல்களைத் தொடர்ந்து செய்ததாலும், தூண்டப்பட்ட தோஷங்கள் உடலில் குறுக்காகச் செல்லும் சிரைகளை அடைந்து சருமம், நிணநீர், ரத்தம், மாமிசம் ஆகியவற்றைக் கெடுக்கின்றன. மேலும் கேடுற்ற தோஷங்கள் சருமம் முதலியவற்றைத் தளரச் செய்து பிறகு வெளிப்புறம் வந்து சருமத்தில் நிறமாற்றத்தை உண்டாக்குகின்றன. தக்கவாறு சிகிச்சை செய்யாவிடில் இந்நோய் நாளடைவில் உடல் முழுவதையும் சிதைக்கும் தன்மை உள்ளது.

தோல் உபாதைகள் தோன்றும்  முன் சில முன்குறிகள் தென்படும் சருமத்தில் அதிக வழவழப்பு அல்லது அதிக கரடு, வியர்வை காணுதல் அல்லது வியர்வை காணாமை, நிறமாற்றம், எரிச்சல், அரிப்பு, உணர்ச்சியின்மை, குத்துவலி, கொப்புளங்கள், களைப்பு, புண்களில் அதிக வலி, விரைவில் புண் உண்டாகி வெகுநாட்கள் இருத்தல், ரணம் ஆறினாலும் வறட்சியாயிருந்து சிறிய காரணங்களாலும் கிளர்ந்தெழுதல், மயிர்க்கூச்சம், ரத்தம் கருநிறமடைதல் ஆகியவை கவனித்தக்கவை.

சொரியாஸிஸ் நோயிலும் சில மாறுபாடுகள் தோலில் காணப்படும். வறட்சி, விரணத் தழும்பு போன்ற கடினமான தோல், அதிக அரிப்பு, கடினம், கறுப்பு நிறம் போன்றவை கிடிபகுஷ்டம் எனும் வகையைச் சேர்ந்த சொரியாஸிஸ் ஆகும். மேற்புறம் வறட்சி, உட்புறம் நெய்ப்பு, சருமத்தைத் தேய்க்க பொடி உதிர்தல், வழவழப்பு, மென்மை, சுரையின் பூப்போன்று வெளுப்பு, சிவப்பு நிறங்கள் இவற்றுடன் பெரும்பாலும் இடுப்புக்கு மேலாக உண்டாவது "ஸித்ம குஷ்டம்'எனப்படும் சொரியாஸிஸ் வகையாகும்.

தோல் உபாதைகளுக்கான சிகிச்சை முறைகள் ஆயுர்வேத முறைப்படி கடும் பத்தியத்துடன் செய்யப்பட வேண்டும். மேலே ஏதோ ஒரு களிம்பைத் தடவி, மாத்திரைகள் சாப்பிட்டால் நீங்கள் குறிப்பிட்டபடி கட்டுப்படுமே தவிர நோய் நீங்க வாய்ப்பில்லை.

சருமம் சார்ந்த எந்த நோய்களுக்கும் முதலில் நெய்ப்புப் பொருள்களால் உபசரிக்க வேண்டும். அந்த வகையில் திக்தகம், மஹாதிக்தகம் எனும் நெய் மருந்துகள் அல்லது கடுகு எண்ணெய், சேங்கொட்டை எண்ணெய் ஆகியவற்றில் நோயாளிக்கு எது உகந்ததோ அதைக் கொடுத்துக் குடலுக்குத் தேவையான அளவில் நெய்ப்பு ஏற்பட்ட பின், வாந்தி, பேதி போன்ற குடல் சுத்திமுறைகளைச் செய்ய வேண்டும். நெற்றி, கை, கால் ஆகிய இடங்களில் சிரைகளைக் குத்தி கெட்டுள்ள ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். வஜ்ரகம், மஹாவஜ்ரகம் எனும் நெய் மருந்துகளில் ஒன்றைக் கொடுத்து குடலை வலுப்படுத்த வேண்டும்.

பழைய அரிசி, பார்லி, கோதுமை, வரகு, தினை, பயறு, காராமணி, துவரை, கசப்புச் சுவையுள்ள காய் வகையறாக்கள், கார்போக அரிசி கலந்த மோர், கருங்காலிக் கட்டையினால் கொதித்து ஆறிய தண்ணீர் போன்றவை சாப்பிடவும் குடிக்கவும் மிகவும் நல்லது.  புளிப்பு, உவர்ப்பு, காரம் ஆகிய சுவையுள்ள பொருள்கள் உணவில் தவிர்க்கப்பட வேண்டும். தயிர், பால், வெல்லம், எள்ளு, உளுந்து ஆகியவற்றை விசேஷமாக நீக்க வேண்டும்.

விரதமிருத்தல், கோபம் முதலியவற்றை அடக்குதல், புலன்களை அடக்குதல், தானம், ஒழுக்கம் இவற்றை மேற்கொள்ளுதல் போன்றவை சரும நோய்களை வேரறுக்கின்றன என்று அஷ்டாங்க ஹிருதயம் மேலும் தெரிவிக்கிறது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அபார வெற்றி - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT