முரண்சுவை - 45: நிகரில்லா வழிகாட்டி!
இந்தியாவின் இணையற்ற அரசியல் வித்தகர். பெருமைமிக்க தலைவர். தாழ்த்தப்பட்ட மக்களின் தன்னிகரில்லாத வழிகாட்டி, சமுதாய சீர்திருத்தவாதி, போராளி என்றெல்லாம் அழைக்கப்பட்ட பாபு ஜகஜீவன்ராம் 1908-ஆம் ஆண்டு ஏப்ரல்
தினமணி கதிர்முரண்சுவை - 45: நிகரில்லா வழிகாட்டி!
இந்தியாவின் இணையற்ற அரசியல் வித்தகர். பெருமைமிக்க தலைவர். தாழ்த்தப்பட்ட மக்களின் தன்னிகரில்லாத வழிகாட்டி, சமுதாய சீர்திருத்தவாதி, போராளி என்றெல்லாம் அழைக்கப்பட்ட பாபு ஜகஜீவன்ராம் 1908-ஆம் ஆண்டு ஏப்ரல்
இந்தியாவின் இணையற்ற அரசியல் வித்தகர். பெருமைமிக்க தலைவர். தாழ்த்தப்பட்ட மக்களின் தன்னிகரில்லாத வழிகாட்டி, சமுதாய சீர்திருத்தவாதி, போராளி என்றெல்லாம் அழைக்கப்பட்ட பாபு ஜகஜீவன்ராம் 1908-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் தேதி பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் சாந்தவா கிராமத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் சாந்த ஷோபிராம். தாய், வசந்திதேவி. குடும்பத்தில் இவர்தான் கடைசிப்பிள்ளை.
ஜகஜீவன்ராம் 6வது வயதிலேயே தந்தையை இழந்தார். ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டபோது, சாதிய உணர்வால், தீண்டாமைக் கொடுமையால் தாக்கப்பட்டார். சாதி இந்து மாணவர்கள் ஜகஜீவன்ராம் தங்களது தண்ணீர் பானையில் நீர் அருந்த அனுமதிக்கவில்லை. எனவே தலைமை ஆசிரியர் ஜகஜீவன்ராம் குடிப்பதற்கு ஒரு தனி குடிநீர் பானைக்கு ஏற்பாடு செய்தார். இதனால் பெரிதும் மன வேதனைப்பட்ட அவர், தனக்காக வைக்கப்பட்ட பிரத்யேக பானையை உடைத்தெறிந்தார். அதன் பிறகு, உயர்ஜாதி மாணவர்கள் குடிக்கின்ற பானையில் நீர் அருந்த அனுமதி கேட்டார். மீண்டும் புதிய பானைக்கு ஏற்பாடு செய்தார்கள். மீண்டும் பானையை உடைத்துவிட்டார். இவ்வாறு பலமுறை நடந்ததால் கோபம் அடைந்த தலைமை ஆசிரியர் ஒரே பானையில் அனைவரும் நீர் அருந்த வேண்டும் என்று ஆணையிட்டார்.
1926-ல் ஜகஜீவன்ராம் அர்ரா உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிக்குலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். கணிதம் மற்றும் சமஸ்கிருத மொழியில் 100 மதிப்பெண் பெற்றார். அதன்பிறகு பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு மீண்டும் தீண்டாமை மற்றும் சாதிய அவ மதிப்புகளைச் சந்தித்தார். பிர்லா உணவு விடுதியில் வேலை செய்யும் பணியாளர்கள் இவரது சாப்பாட்டுத் தட்டுகளைக் கழுவ மறுப்பு தெரிவித்தனர், முடிதிருத்துபவர் முடித்திருத்த மறுத்தனர்.
பாபு ஜகஜீவன்ராம் படிக்கும்போது எல்லா செலவையும் ஏற்று நாங்கள் படிக்க வைக்கிறோம் என்று கிறிஸ்துவ மிஷனரிகள் கோரிக்கை வைத்த போது அதை ஏற்க மறுத்துவிட்டார். 1928 ஆம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. தேர்வில் வெற்றி பெற்றார். தேர்தலில் ஒரே தொகுதியில் தொடர்ந்து 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952-ல் சசாரம் தொகுதியில் நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று செய்தித் தொடர்பு அமைச்சராக பதவி ஏற்றார். 1936 முதல் 1986 வரை 50 ஆண்டுகள் அரசியலில் தொடர்ந்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக இருந்து சாதனை படைத்தார்.
சுதந்திரத்துக்காகப் போராடி அதற்காகப் பலகாலம் சிறை சென்றவர் பாபுஜி.
பாபுஜகஜீவன்ராம் ஓர் எளிய வாழ்க்கையை மேற்கொண்டார். எப்போதும் கதர் ஆடைகளையே அணிந்து வந்தார். அவர் ஒருபோதும் மது அருந்தியது கிடையாது. நேரத்தின் அருமை தெரிந்தவர். ஒரு வினாடியைக்கூட வீணடிக்கமாட்டார். குறைந்த நேரத்தில் அதிக அளவில் சாதனைகளை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார்.
இவருடைய பயணங்கள், சாதனைகள் போன்றவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். இவர் ஆழ்ந்த மதப்பற்றாளர். அதே சமயம் பிற சமயத்தவரையும் மதிக்கின்ற பண்பு உடையவர். எப்படிப்பட்ட சாதிய ஆதிக்கசக்தி உள்ளவர்களையும் தன்னுடைய புன்முறுவலாலும் நகைச்சுவையாலும் இதயத்தை மகிழச் செய்கின்ற பண்புகளாலும் அவர்களைக் கவர்ந்துவிடுவார். வீட்டுக்கு வருகின்ற விருந்தினர்களுக்குத் தானே அறுசுவைமிக்க உணவு பண்டங்களை பரிமாறியும் கஷ்டப்படுகின்றவர்களுக்கு உதவி செய்து அவர்களை மகிழ்ச்சியுறச் செய்வதிலும் வல்லவர்.
பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது டாக்டர் சம்பூரணானந்தா சிலையைத் திறந்துவைத்தார். பாபுஜி போன பிறகு அந்த இடத்தை கங்கை நீரைக் கொண்டு கழுவினார்கள். அதைக் கேள்விப்பட்டு அதிக வேதனைப்பட்டார்.
ராணுவத்தில் வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்குப் பலவகைகளில் உதவக்கூடிய உறுதி மொழிகளை வழங்கினார். இதன் மூலம் இந்திய ராணுவம் மிக உற்சாகத்துடனும் கம்பீரத்துடனும் நடைபோட ஆரம்பித்தது. பாபுஜி அமைச்சராக இருந்தபோது, 2000 பேர்கள் வாழுகின்ற கிராமமாக இருந்தால் இரண்டு மைல் சுற்று வட்டாரத்தில் போதிய மக்கள் தொகையில்லை என்றாலும் அங்கே ஓர் அஞ்சல் நிலையம் ஏற்படுத்திட வழிவகைகள் செய்தார். கிராமப்புறங்களில் அஞ்சலகம் உள்ள இடத்திலேயே அஞ்சலக அதிகாரியின் குடியிருப்பு இருந்ததால் அவர் எந்த சாதியைச் சார்ந்திருந்தாலும் அந்த அலுவலகம் உள்ள இடத்தில் தங்கி வாழ வாய்ப்பு ஏற்பட்டது.
உடல் ஊனமுற்ற சிப்பாய்கள், அதிகாரிகளுக்கு அவர்களின் உடல் நிலைக்கு ஏற்ப புகலிடங்கள் ஏற்படுத்தி மறுவாழ்வு மையங்களாக அமைத்து நன்மை செய்தார். டெல்லியில் உள்ள டாக்டர் ராம் மனோகர் மருத்துவமனையில், 1986-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெருமைமிக்க தலைவர் தாழ்த்தப்பட்ட மக்களின் தன்னிகரில்லா வழிகாட்டி தனது 78வது வயதில் இயற்கை எய்தினார்.
இவருடைய அருமை மகள் மீராகுமார் தற்போது நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கிறார்.
""நான் இறக்கும் போது இழிவைத்தரும் இந்துவாக இறக்கமாட்டேன்'' என்றவர் அம்பேத்கார். அதன்படி புத்த மதத்தில் சேர்ந்து மறைந்தார். ஆனால் பாபுஜி அவர்களோ புத்த மதத்தில் சேருவதால் மட்டும் இழிவு மறைந்து விடாது என்று இந்து மதத்திலேயே இருந்தார். தன்னை இழிவுபடுத்தியது இந்து மத சனாதனிகளே தவிர இந்து மதம் இல்லை என்று இவர் தந்த விளக்கம் இவருடைய வாழ்வின் சுவை முரண்.
(தொடரும்)