அழகி' உள்ளிட்ட சில படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்த அருள்மணி "ஒரு சந்திப்பில்' படம் மூலம் கதாநாயகனாகிறார். பவீனா என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஷீலா என்பவர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். சிங்கமுத்து, சிந்து உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஆனைவாரி ஸ்ரீதர். படம் குறித்து அவரிடம் பேசிய போது,""என் நண்பரின் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தைத்தான் திரைக்கதையாக்கி இருக்கிறேன். 50 சதவீத குடும்பங்களின் சந்தோஷம் சந்தேகத்தால்தான் சீரழிகிறது என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. செய்தித்தாளில் வரும் படுகொலை உள்ளிட்ட பிரச்னைகளுக்கெல்லாம் சந்தேகம்தான் காரணமாக இருக்கிறது. அப்படி சந்தேகத்தின் பேரில் அழிந்து போன ஒரு குடும்பத்தின் கதையைத்தான் பரபரப்பான திரைக்கதையின் பின்னணியில் காட்சிப்படுத்திருக்கிறேன். கோவையில் என் நண்பன் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களுக்கு கற்பனைகளையும் கலந்திருக்கிறேன். சென்னை, ஏலகிரி, ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது'' என்றார்.
கனிமொழி தந்த வாய்ப்பு!
நடிகை சோனா தயாரித்துள்ள "கனிமொழி' படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்துள்ள மைக்கேல்லின் நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ""கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நான் ஐரோப்பாவில் "பாரதி தி ஷோ'வில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தேன். பின் இங்கு வந்து பட வாய்ப்பு தேடினேன். அப்போது விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி நல்ல அறிமுகத்தை தந்தது. அந்தச் சமயத்தில் நடந்த "சரோஜா' படத்தின் 100-வது நாள் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் என்னுடைய பங்களிப்பை பார்த்துதான் இயக்குநர் ஸ்ரீபதி "கனிமொழி' படத்தில் நான் நடிப்பதற்கு வாய்ப்பு தந்தார். படத்தில் என் நடிப்பை வெங்கட்பிரபு, சிம்பு உள்ளிட்ட பலர் பாராட்டினார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்து தனி ஹீரோவாகும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்'' என்றார் நடிகர் மைக்கேல்.
விஜய்க்கு அடித்த மெகா லாட்டரி!
""பா.விஜய்யின் "ஞாபகங்கள்' படம் வீழ்ந்தபோது நான் கொஞ்சம் கசங்கி போனேன். கொஞ்சம் என் மனம் இறுகியும் போனது. ஓர் இளைஞன். அதுவும் எழுத்தாளன் தோற்று விடக் கூடாது என்பதால். அவன் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணினேன். பா.விஜய்யும் துவண்டு விடவில்லை. எத்தனை முறை விழுகிறோம் என்பதல்ல, எத்தனை முறை எழுகிறோம் என்பதுதான் முக்கியம். முயற்சி தேடி அடுத்த வாய்ப்புக்கு அலைந்த போது விஜய்க்கு லாட்டரி அடித்தது. அதுவும் சாதாரண லாட்டரி அல்ல. மெகா லாட்டரி. கலைஞர் வசனத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஒரு டீக்கடைக்காரி ஊருக்கு வந்த வாத்தியாரை சார் சார் என்று அழைத்து சினேகம் கொள்கிறாள். அவளின் அன்பை, உள்ளூர இருக்கும் உணர்வை வெளிப்படுத்துவதுதான் "களவாணி' சற்குணம் இயக்கும் படத்துக்கான ஒரு பாடலின் ஒரு சூழல். சார் என்ற வார்த்தை இந்த பாடலில் கொஞ்சம் அழுத்தமாக இருக்க வேண்டும் என்றார் சற்குணம். உடனே நான் இப்படி எழுதினேன்.
""அந்த சாரக் காத்து வீசும் போதும்...
சாரப் பாத்து பேசும் போதும்...
சாரப் பாம்பு போல மனசு சத்தம் போடுதே....''ன்னு எழுதி முடித்தேன். சற்குணத்துக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
"இளைஞன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவ்வாறு பேசினார் கவிஞர் வைரமுத்து.
கப்பலில் காதல்.. கப்பல் நின்றால் பாடல்!
"மன்மதன் அம்பு' படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியது;
""கமல்ஹாசனுடன் நான் மீண்டும் இணைந்திருப்பதால் இது "பஞ்சதந்திரம்' மாதிரி இருக்குமா? இல்லை "தெனாலி' மாதிரி இருக்குமா என்கிறார்கள். காமெடி கலந்த காதல் கதையாக இருக்கும். 3 நீச்சல் குளம், 18 மாடிகள் கொண்ட பிரமாண்ட கப்பலில் கதை நடக்கிறது. 5,000 பேர் அமரக்கூடிய ஒர் அரங்கம் அந்தக் கப்பலுக்குள் இருக்கிறதென்றால் கப்பல் எவ்வளவு பெரியதாக இருக்கும் என நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். கப்பலைச் சுற்றிப் பார்க்க மட்டும் ஒன்றரை நாள் ஆனது. கப்பல் எங்கு நிற்கிறதோ அந்த இடத்தில் இறங்கி பாடல் காட்சிகளைப் படமாக்கினோம். இந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் கமலே எழுதியிருக்கிறார். அவருடன் பழகி வந்த முதல் நாளிலிருந்து அவருடைய கவிதைகளுக்கு நான் ரசிகன். விரைவில் அந்த கவிதைகளையெல்லாம் கமல் தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டும் என ஆசைப்படுகிறேன்'' என்றார்.
அட்டையில் : அமலா பால்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.