முகப்பு
தினமணி கதிர்

ஆப்பிள் தேசம் - 17: அமெரிக்காவிலும் ஏழைகள்!

வர்ஜீனியா மாநிலத்தில் நிலவறைக் குகைகள் முக்கியமான சுற்றுலா இடங்கள். பல லட்சம் வருடங்கள் முன்பு இன்றைய நிலப்பகுதி கடலாக இருந்தது.  இயற்கை மாற்றங்களாலும் நில அதிர்வுகளாலும் கடல் மாறி நிலமாகியது. அந்த நி

தினமணி கதிர்

ஆப்பிள் தேசம் - 17: அமெரிக்காவிலும் ஏழைகள்!

வர்ஜீனியா மாநிலத்தில் நிலவறைக் குகைகள் முக்கியமான சுற்றுலா இடங்கள். பல லட்சம் வருடங்கள் முன்பு இன்றைய நிலப்பகுதி கடலாக இருந்தது.  இயற்கை மாற்றங்களாலும் நில அதிர்வுகளாலும் கடல் மாறி நிலமாகியது. அந்த நி

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:36 PM
பகிர்:

வர்ஜீனியா மாநிலத்தில் நிலவறைக் குகைகள் முக்கியமான சுற்றுலா இடங்கள். பல லட்சம் வருடங்கள் முன்பு இன்றைய நிலப்பகுதி கடலாக இருந்தது.  இயற்கை மாற்றங்களாலும் நில அதிர்வுகளாலும் கடல் மாறி நிலமாகியது. அந்த நிலப்பகுதியின் அடிப்பகுதியில்  சுண்ணாம்புக் கல், ஜிப்சம் போன்ற பாறைகளும் அவற்றிடையே ஓடும் நிலத்தடி ஓடைகளும் உருவாகின.  நீர்க்கசிவுகள் சுண்ணாம்புப் பாறைகளைக் கரைத்தபடி ஓடும்போது ஸ்படிக வடிவங்களும் குகை அமைப்புகளும் உருவாகின.  

ரயில் பாதை போடுவதற்காகப் பாறைகளை வெடி வைத்துத் தகர்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் தற்செயலாக இந்த ஷெனண்டோவா நிலத்தடி குகைகளை 1880-களில் கண்டுபிடித்தார்கள். அவர்கள் கண்டுபிடிப்பதற்கும் முன்பே இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்களுக்கு இந்தக் குகைகள் பற்றித் தெரிந்திருந்தது. ஷெனண்டோவா என்பதே  ஆதி அமெரிக்க இந்தியர்களின் குழுப்பெயர்தான். 1922-ல் இது முறையாக வடிவமைக்கப்பட்டு சுற்றுலா இடமாக்கப்பட்டது.

தரையிலிருந்து லிஃப்ட் வழியே சுமார் 220 அடி கீழே இறங்கியதும் குகைகளுக்குள் சுமார் ஒரு மைல் தூரம் குறுக்கும் நெடுக்குமாக அழைத்துச் சென்றார்கள். குறுகலான வழிகள். ஒவ்வொரு பகுதிக்கும் பெயர்கள் சூட்டி, வண்ண விளக்குகளால் வடிவ மாற்றங்கள் செய்து, சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க முயற்சித்திருக்கிறார்கள். ஓரிரு பகுதிகளைப் பார்த்த பிறகு எனக்கு, எல்லாமே ஒரே மாதிரி இருப்பதாகவும் விளக்கு ஏற்பாட்டினால் மட்டுமே மாறுபட்டுத் தோன்றுவதாகவும் பட்டது. எதையும் சாமர்த்தியமாக விற்கத் தயார்ப்படுத்தும் அமெரிக்க அணுகுமுறை  பூமிக்கடியிலும் தெளிவாகத் தெரிந்தது.

கீழிருந்த ஒரு மணி நேரம் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. உடல்நிலை எதேனும் கோளாறாகிவிட்டால், என் கதி என்னாகும் என்று யோசித்ததால் வந்த பயம். கூட இருந்த சுற்றுலாப் பயணிகளைப் பார்த்ததும் பயம் போய்விட்டது. அமெரிக்காவில் எந்த சுற்றுலா இடத்துக்குச் சென்றாலும், அங்கே நான் நிறைய கிழவர்கள், கிழவிகளைப் பார்த்தேன். ஊர் சுற்றுவதற்கு முதுமை அவர்களுக்கு ஒரு தடையே இல்லை. உடல் நலிவுகள் இருந்தாலும் கூட ஊர் சுற்ற விரும்புகிறார்கள்.

வர்ஜீனியா குகைகளுக்கு அடுத்து நியூ ஜெர்சி எடிசனுக்குத் திரும்பும் வழியில், பால்டிமோர் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். துறைமுகம் என்று பெயரே ஒழிய உண்மையில் அங்கு இப்போது கப்பல் போக்குவரத்தை விட, அதிகமாக நடைபெறுவது சுற்றுலா தொழில்தான். சுமார் 300 வருட காலமாக இருந்துவரும் பால்டிமோர் துறைமுகத்தில் சரக்குக் கப்பல், பயணிகள் கப்பல் போக்குவரத்து 1950-களிலேயே நலிந்துபோய்விட்டது. எனவே பழைய கோடவுன்கள், துறைகள் எல்லாவற்றையும் இடித்துத் தள்ளிவிட்டு, சுற்றுலா மையங்களைக் கட்ட ஆரம்பித்தார்கள். மீன் காட்சியகம், கப்பல் காட்சியகம், அறிவியல் மையம், வர்த்தக மையம், உணவு விடுதிகள் என்று இடமே பழைய அடையாளம் தெரியாமல் மாற்றப்பட்டுவிட்டது.   

இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பான் கப்பல்களைக் கடைசியாக அழித்த அமெரிக்க நீர்முழ்கிக் கப்பல் டோர்ஸ்க் இப்போது காட்சியகத்தில் இருக்கிறது. வருடந்தோறும் உலகத்தின் உயரமான கப்பல்களின் அணிவகுப்பு விழா பால்டிமோர் துறைமுகத்தில் நடக்கிறது.  

இந்த வளாகத்தில் கடை கடையாகத் தேடி என் வழக்கமான ஆப்பிள் பை லஞ்சை முடித்துவிட்டு எடிசனுக்குத் திரும்பும் நேரத்தில் எங்கள் சுற்றுலா வழிகாட்டி சூவுடன் கொஞ்சம் பேசினேன். படித்து முடித்துவிட்டு சீனாவுக்குத் திரும்பிச் செல்லும் திட்டம் உண்டா, என்று சூவிடம் கேட்டேன். நிச்சயம் இல்லை என்று தெளிவாகச் சொன்னாள்.  அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டு, சீனாவில் இருக்கும் தன் குடும்பத்தினரையும் இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிடுவதுதான் தன் தொலை நோக்குத் திட்டம் என்றாள். மெக்சிகன் பஸ் டிரைவர் இன்னும் ஒரு சில வருடங்கள் அமெரிக்காவில் வேலை பார்த்துவிட்டு பின்னர் மெக்சிகோ திரும்பித் தன் மனைவிகளுடன் நிம்மதியாகக் காலத்தைக் கழிக்கப் போவதாக சொன்னார். அவருக்கு வயது 50. சூவின் வயது 18.

தாய்நாட்டுக்குத் திரும்பிப் போவீர்களா? இங்கேயே இருப்பீர்களா? என்ற கேள்விகளை இன்னும் தொடர்ந்து பலரிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன். அடுத்த நாள் மாலை  எடிசனில் இருக்கும் இலவசக் கொத்தனார் என்ற பெயரில் இணையத்தில் எழுதும் ராஜேஷ் வீட்டில் சுமார் பத்து இணைய எழுத்தாளர்-தமிழர்களைச் சந்தித்தபோதும் இந்தக் கேள்விகள் தொடர்ந்தன.

கும்பகோணத்தில் பிறந்து, அகமதாபாத் அரவிந்தைத் திருமணம் செய்துகொண்டு, நியூஜெர்சி மிடில்செக்ஸ்  கவுண்ட்டியின் பொது சுகாதார திட்ட அலுவலர் பதவியில் இருக்கும் பத்மாவை அன்று காலைதான் சந்தித்திருந்தேன். அவர் அமெரிக்காவிலேயே செட்டிலாகி விட்டவர். அதே சமயம் அங்கே வந்து தங்கும், வசிக்கும், குடியேறும் இந்தியர்கள் உள்ளிட்ட தெற்காசிய மக்களின் நலன்களுக்காகப் பணி புரிவதுதான் அவரது குறிக்கோளாக இருக்கிறது.

அமெரிக்க அரசு சார்ந்த நிர்வாகத்தில் இருக்கும் ஒரு தமிழரான பத்மா, என்னை மிடில்செக்ஸ் கவுண்ட்டியின் பொது சுகாதார அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விளக்கினார். எடிசன் ஓக் அவென்யூவில் இருக்கும் காச நோய் தடுப்பு மையத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். நம் ஊரில் நமக்குப் பரிச்சயமான ஒரு க்ளினிக் சூழலே அங்கு இல்லை.  நோயாளியைக் கலவரப்படுத்துவதாகவோ மனச் சோர்வு ஏற்படுத்துவதாகவோ சூழல் இல்லாமலிருப்பது  ஒரு கிளினிக்கின் அடிப்படை தேவை.

அதே வளாகத்தில் அமைந்திருக்கும் பாலியல் வன்முறை பாதிப்புக்குள்ளானோருக்கான உதவி மையத்துக்கும் சென்றேன். இருபது வருடங்களாக நடக்கும் அந்த மையத்தின்  பொறுப்பாளர் ஜீன் அமெரிக்கர். அவர் கணவர் சீனர். பாலியல் வன்முறை , கட்டாய உடலுறவு பாதிப்புகளுக்கு உள்ளாவோர் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள வசதி  உள்ளது.  மருத்துவ உதவி, சட்ட உதவி, உள நல ஆலோசனை உதவி அனைத்தும் இங்கு வழங்கப்படுகின்றன.

அடுத்து எலிஜாஸ் ப்ராமிஸ் சூப் கிச்சன் என்ற இடத்துக்கு பத்மா என்னை அழைத்துச் சென்றார். சூப் கிச்சன் என்பது அன்னதானக் கூடம். ஒரு வேளை உணவுக்கும் சிரமப்படுபவர்களுக்குத் தினசரி இரு வேளை உணவு கொடுப்பதற்கான ஏற்பாடுகள்தான் சூப் கிச்சன்கள்.

அமெரிக்காவில் சாப்பாட்டுக்கே வழியற்ற ஏழைகள் இருக்கிறார்களா என்று ஆச்சரியப்படுபவர்களுக்குச் சொல்ல வேண்டும். கணிசமாகவே இருக்கிறார்கள். குறைந்தது 23 சதவீதம் மக்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள்.  

ஏழ்மை என்பது ஆண்டுக்கு 20 ஆயிரம் டாலர் வருமானத்துக்கும் கீழே இருப்பதாகும். நடைமுறையில் ஓரளவு சுமாராக வாழ்வதற்கு நிச்சயம் வருடத்துக்கு 30 ஆயிரம் டாலர் தேவைப்படும். ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பு முடித்தவர்கள் சராசரியாக 16 ஆயிரம் டாலர்தான் சம்பாதிக்கிறார்கள். உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு 31 ஆயிரம் டாலர் வரை கிடைக்கிறது. பட்டம் பெற்றவர்கள் 56 ஆயிரம் டாலர் சம்பாதிக்கிறார்கள். மேலும் உயர்படிப்பு தொழில்முறை கல்வி இருப்பவர்கள் ஒரு லட்சம் டாலர் வரை சம்பாதிக்கிறார்கள்.

ஏழ்மையில் இருப்பதால் குழந்தைகளைப் பராமரிக்க முடியாதவர்களுக்கு நிதி உதவி தரும் திட்டத்தை அமெரிக்க மத்திய அரசு 1935லிருந்து செயல்படுத்தி வருகிறது. 1997ல் இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.ஆண்டு தோறும் சுமார் 40 லட்சம் பேர் இந்த உதவியைப் பெறுகிறார்கள். பண உதவி என்பது சும்மா அல்ல. பதிலுக்கு இத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன. அதிகபட்சம் எத்தனை மாதங்கள் வரை உதவி பெறலாம் என்ற உச்சவரம்புகளும் உள்ளன.

உணவைப் பொறுத்த மட்டில் இன்றும் ஏழு அமெரிக்கர்களில் ஒருத்தருக்கு தினசரி உணவு கிடைப்பது சிக்கல்தான் என்ற நிலைமை இருக்கிறது. அமெரிக்காவில் சுமார் ஆறு கோடி பேர் உணவு கிடைக்காத சிக்கலில் வாழ்கிறார்கள். இதில் ஒரு கோடி 67 லட்சம் பேர் குழந்தைகள்.சுமார் 11 மாநிலங்களில் ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளில் 20 சதவிகிதம் குழந்தைகளுக்குப் பட்டினி நிலை உள்ளது. ஏழைகளில் வெள்ளையர்களை விட கறுப்பர்கள் அதிகம். திருமணமானவர்களை விட ஒற்றைப் பெற்றோராக இருப்பவர் அதிகம்.

நியூஜெர்சியில் இயங்கும் எலிஜா சூப் கிச்சனில் சென்ற வருடம் மட்டும் ஒரு லட்சம் சாப்பாடு போட்டார்கள். சூப் கிச்சன் நடவடிக்கைகள் உடனடியாகப் பசியைப் போக்கும் நோக்கத்துடன் மட்டுமல்லாமல், ஏழ்மையில் இருப்பவரின் உழைக்கும் திறனை மேம்படுத்தி, இன்னும் நல்ல வேலைக்கு அவரைத் தயாராக்குவது, போதைப் பழக்கம் உள்ளவரானால் அதிலிருந்து மீட்டு உழைப்பவராக மாற்றுவது ஆகிய நோக்கங்களுடனும் நடக்கும் முயற்சியாகும். இவற்றுக்கு பலரிடமிருந்தும் நன்கொடைகள் திரட்டப்படுகின்றன.  

ஏராளமானவர்கள் தொண்டர்களாகவும் வேலை செய்கிறார்கள். இலவச உணவு சாப்பிடுகிறவர்களிலும் தொண்டு செய்பவர்கள் உண்டு. தொண்டர்களாக பணிசெய்ய முன்வருபவர்கள் என்ன செய்ய வேண்டும், எந்தெந்த நாளில் என்னென்ன வேலைக்கு உதவி தேவைப்படுகிறது, எத்தனை பேர் தேவை, என்பதையெல்லாம் அடுத்த ஐந்து மாதங்களுக்கும் திட்டமிட்டு தங்கள் இணைய தளத்தில் அறிவிக்கிறார்கள்.

பிரன்ஸ்விக்கில் பத்மா என்னை அழைத்து சென்ற சூப் கிச்சன் தூய்மையாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. எந்த வர்த்தக ரீதியான உணவகம் போலவே சூழல் தரமாக இருந்தது.

இந்த மையங்களில் நான் முக்கியமாகக் கவனித்த அம்சம், அவற்றின் பொறுப்பில் இருப்போரின் அணுகுமுறைதான். தங்கள் வேலையை ஒரு சுமையாகக் கருதும் அலுப்பு மனநிலை அவர்களிடம் இல்லை. துயருடன் செல்வோருக்கு உடனடியாக ஆறுதலைத் தரக் கூடிய அணுகுமுறை உள்ளவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

என் அமெரிக்கப் பயணத்தின்போது பத்மா அரவிந்த்தான் அமெரிக்காவின் இந்தப் பக்கத்தையும் எனக்குக் காட்டியவர். அதே சமயம் சிக்கலைச் சந்திக்க, அரசும், சமுதாயமும் எப்படி தங்களைத் தயார் செய்துகொண்டிருக்கின்றன என்பதையும் அவர் நேரில் எனக்குக் காட்டினார்.  

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் அதிலும் தமிழர்களில்  பலர் உள்ளூர் சமுதாயத்தின் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவதுமில்லை. ஈடுபடுவதும் இல்லை. உடல் அமெரிக்காவுக்கு, உயிர் இந்தியாவுக்கு என்பது போல வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு குழுவாக செயல்பட்டு அமெரிக்க வாழ்முறை மீது பெரும் தாக்கத்தை தங்களால் ஏற்படுத்த முடியும் என்ற பார்வையும் இல்லை.            

(தொடரும்)

முழு கட்டுரையைப் படிக்க →