தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ரத்தக் குறைபாடு நீங்க...

32  வயது இளைஞர் ஒருவருக்கு ரத்தத்தில் ஃபேக்டர் - 8 என்ற ரத்தத்தை உறையச் செய்யும் அம்சம் இல்லாததால் சிறிய காயம்பட்டு ரத்தம் வந்தால் கூட ரத்தம் நிற்கவே நிற்காத ஹேமோபிலியா என்ற ரத்தம் உறைதல் குறைபாடு பிற

எஸ். சுவாமிநாதன்

32  வயது இளைஞர் ஒருவருக்கு ரத்தத்தில் ஃபேக்டர் - 8 என்ற ரத்தத்தை உறையச் செய்யும் அம்சம் இல்லாததால் சிறிய காயம்பட்டு ரத்தம் வந்தால் கூட ரத்தம் நிற்கவே நிற்காத ஹேமோபிலியா என்ற ரத்தம் உறைதல் குறைபாடு பிறவி முதலே உள்ளது. இதற்கு ஆயுர்வேத சிகிச்சை உள்ளதா?

எஸ்.அனந்தராமன், புட்டபர்த்தி.

கருவுற்ற பெண்கள் உணவில் காரம், புளிப்பு, உடல் சூட்டை அதிகரிக்கும் பட்டை, சோம்பு, கரம் மசாலா, புளியோதரை, எண்ணெய்ப் பண்டங்கள் இவற்றுடன் வரகு, காட்டு வரகு ஆகியவற்றை அதிகம் சேர்த்தால், கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதியிலுள்ள பித்தத்தைக் கெடுப்பதால், ரத்தமும் கெடுகிறது. ரத்தத்திலிருந்து உண்டாதல், ரத்தத்துடன் சேருதல், ரத்தத்தைக் கெடுத்தல், ரத்தத்தின் மணம், நிறம் இவற்றை அனுசரித்தல் ஆகியவை காரணமாக, பித்தம் ரத்தத்தின் கெடுதிக்குத் துணைபோவதால், நீங்கள் குறிப்பிடும் உபாதை தோன்றக் கூடும்.

பிறவிக் கோளாறுகளை நிவர்த்தி செய்வது எளிதல்ல. என்றாலும் மனித முயற்சியை மனம் தளராமல் செய்ய வேண்டியது அவசியமாகும். ரத்தத்தை உறையச் செய்யும் சில ஆயுர்வேத மூலிகைகள் உள்ளன. அவற்றில் முக்கியமாக வெள்ளிலோத்திப்பட்டை, ஞாழல், செஞ்சந்தனம், உளுந்து, அதிமதுரம், காவிக்கல், மண்ணோடு, அஞ்சனக்கல், பட்டுத்துணியின் சாம்பல், அத்திப்பட்டை, இத்திப்பட்டை இவற்றின் மொட்டு ஆகியவற்றை உலர்த்திப் பொடித்து, காயத்தின் காரணமாக ஏற்படும் நிற்காத ரத்தம் ஒழுகும் இடங்களில் தூவ, ரத்தப்போக்கு நின்றுவிடும்.

பதிமுகம், நாமக் கரும்பு, குத்தி, மூங்கிலுப்பு, விருத்தி, கடுக்காய்ப்பூ, சீந்தில், கீரிப்பாலை, காகோல், க்ஷீரரிஷபகம், ஜீவகம், அதிமதுரம் ஆகிய மூலிகை மருந்துகளை வகைக்கு 5 கிராம் வீதமெடுத்து இரவு முழுவதும் அவை மூழ்குமளவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை மருந்துச் சரக்குகளை நன்றாகக் கசக்கிப் பிழிந்து வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ரத்தப் பெருக்கைக் கட்டுப்படுத்தும்.

உயர்ந்த மூலிகை மருந்துகள் இவை. மேலும் ரத்தத்தை உறையும் செய்யும் ஃபேக்டர்- 8 இம் மூலிகைச் சரக்குகள் மூலம் ஏற்படக் கூடிய வாய்ப்பும் உண்டு.

இந்த உபாதையால் பாதிக்கப்பட்ட நபர் தேன், பேரீச்சை, திராட்சை, சிற்றீச்சை, சர்க்கரைத் தண்ணீர் ஆகியவற்றுடன் பொரி மாவு, நெய் ஆகியவை சேர்த்துச் செய்த பொரிமா நீரைக் காலை உணவாக உபயோகிக்கச் சிறந்தது. மாதுளை, நெல்லி இவற்றால் புளிப்பு உண்டாக்கி, பசி மந்தமாக உள்ளவரும், புளிப்புச் சுவை விரும்புகிறவரும் பயன்படுத்தலாம்.

ரத்தத்தை உடனே உறையச் செய்வதில் ஆடாதொடை மிகவும் நல்லது. ஞாழல், கோபிமண், வெள்ளி லோத்திரம், அஜ்னக்கல், தேன் இவற்றை ஆடாதொடையின் சாற்றுடன் கலந்து பருக ரத்தப்போக்கு நின்றுவிடும். அல்லது ஆடாதொடைச் சாற்றுடன் சர்க்கரையும், தேனும் சேர்த்துப் பருகலாம். ஆடாதொடை கஷாயத்தைக் குடிக்கலாம்.

புரசம் பட்டையின் கஷாயத்தைக் குளிர வைத்துச் சர்க்கரை சேர்த்துப் பருக ரத்தக் கசிவை உடனே நிறுத்திவிடும்.

இந்த உபாதை உள்ளவர்கள் சாதாரணத் தண்ணீர் பருகுவதற்குப் பதிலாகச் சந்தனம், விளாமிச்சை வேர், கோரைக் கிழங்கு, பச்சைப் பயறு, நெல் பொறி, திப்பிலி ஆகியவற்றை சிற்றாமுட்டித் தண்ணீரில் இரவு ஊற வைத்து, கஷாயம் தயாரித்துப் பருக, ரத்தக் கசிவு வருவதைத் தடுக்கலாம்.

கரும்புத் துண்டுகளை இடித்துப் புதிய பானையில் வைக்கப்பட்டுள்ள நீரில் போட வேண்டும். தேனுள்ள மலர்ந்த தாமரைப் பூவை அதன் மேலிட்டு, இரவில் பாதுகாத்து வைத்திருந்து காலையில் வடிகட்டிப் பருகினால் இந்த உபாதையின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

மேற்குறிப்பிட்ட முறைகளில் எதுஎது எளிதாகத் தோன்றுகிறதோ அவற்றைச் செயல்முறையில் கொண்டு வந்து இந்த உபாதையைச் சமாளிக்கலாம்.

விற்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் வாஸôகிருதம் எனும் நெய் மருந்தை உருக்கி, காலை, மாலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 9444441771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT