2009-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது, கவிஞர் புவியரசுக்குக் கிடைத்துள்ளது. 2-ம் முறையாக இந்த விருதைப் பெற்றுள்ளார் இவர்.
கவிதை, நாடகம், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் என்று பல தளங்களிலும் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் புவியரசு. உலக இலக்கியங்கள் பலவற்றில் ஆழ்ந்த புலமையும், மிகுந்த ஈடுபாடும் கொண்டவர். இவரது கவிதைகள் மலையாளம், இந்தி, கன்னடம், சிங்களம், ஆங்கிலம், ரஷ்யன் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
வானம்பாடி கவிதை இயக்கத்தை ஆரம்பித்தவர்களுள் முக்கியமானவர் புவியரசு. சிறந்த இலக்கிய விமர்சகர், நாடக ஆசிரியர், மொழி பெயர்ப்பாளர், திரைத்துறை வல்லுநர் என்ற பன்முகப் பரிமாணங்கள் உள்ளன இவருக்கு.
இலக்கிய உலகின் பிதாமகர் என்று போற்றத்தக்க வகையில் 79 வயதான இந்த நிலையிலும், பேச்சும், மூச்சும் இலக்கியமாகவே வாழ்பவர். சமூக விழிப்புணர்வுடன், மற்றவர்களின் திறமைகளை மனம் நெகிழ்ந்து பாராட்டும் பெருந்தன்மையும் வாய்ந்தவர்.
இவரது "மூன்றாம் பிறை' நாடகக் காவியம் பல பல்கலைக் கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டது. திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதல் பரிசு, தேவமகள் நினைவுப் பரிசு, கேரள கலாசார மையத்தின் சாகித்ய புரஸ்கார் விருது, நல்லி திசை எட்டும் பரிசு, "முக்கூடல்' கவிதைக்கு தமிழக அரசின் முதல் பரிசு, 2008}ல் கலைஞர் பொற்கிழி விருது என்று பலதரப்பட்ட விருதுகளுக்கும், இலக்கிய புத்தக மலைகளுக்குமிடையே திளைத்துக் கொண்டிருந்த கவிஞர் புவியரசை சந்தித்தோம்.
இரண்டாவது தடவையாக சாகித்ய அகாதெமி விருது பெற்றிருக்கிறீர்கள்... இந்த விருது மிகவும் காலம் தாழ்த்திக் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறீர்களா?
விருது கிடைத்ததில் மிகவும் திருப்தி. காலம் கடந்த அங்கீகாரம்தான் இது. இன்னும் கொஞ்சம் முன்னால், அதாவது என்னுடைய 50 வயதுக்கு முன் கொடுத்திருக்கலாம். ஒருவரின் படைப்பு மட்டும் சிறந்ததாக இருந்தால் போதாது; அவர் இலக்கியத்துக்காக இதுவரை ஆற்றியிருக்கும் பங்கு, அவரது தகுதிகள் போன்றவற்றைக் கணக்கில் கொண்டுதான் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்படுகிறது.
முதன் முறையாக ஒரு கவிதைத் தொகுப்பையோ அல்லது நாவலையோ எழுதுபவர்கூட திறமைசாலியாக இருக்கலாம். கேரள சாகித்ய அகாதமி விருதுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவர் என்பது ஆச்சரியமளிக்கும் செய்தி. படைப்பாளி இளைஞரா, முதியவரா என்பது முக்கியமல்ல. அவரது படைப்பு என்ன சொல்கிறது என்பதுதான் முக்கியம். அவர் ஒரே ஒரு நாவலை மட்டும் எழுதியிருக்கலாம் அல்லது வெகு சில இலக்கியப் பணிகளை மட்டுமே செய்திருக்கலாம். அதெல்லாம் பெரிய விஷயமில்லை.
என்னைக் கேட்டால், சாகித்ய அகாதெமி விருதுக்கென படைப்புகளைத் தேர்ந்தெடுக்கும்போது படைப்பாளிகளின் பெயரைக் கிழித்தெறிந்துவிட்டு படைப்பை மட்டும் படித்துப் பார்த்துத் தரமானதைத் தேர்ந்தெடுக்கலாம். பிறகு அந்தப் படைப்பை எழுதியவர் யார் என்று பார்க்கலாம். அப்படியிருந்தால்தான் தரமான, நல்ல இலக்கியங்கள் நம் சமுதாயத்திற்குக் கிடைக்கும்.
சர்வதேச அளவிலான பரிசுகளை அளிக்கும் அமைப்புகள் சொல்வது ஒன்றுதான் } உங்களைப் பற்றி, உங்கள் ஊர் மனிதர்களைப் பற்றிப் பேசுங்கள்; உங்கள் மண்ணைப் பற்றிப் பேசுங்கள்; உங்கள் படைப்புகள் மண் மணம் சார்ந்தே இருக்கட்டும். நீங்கள் உங்கள் சொந்த மண்ணில் வேரூன்றாமல், உலகக் குடிமகன் ஆக முடியாது. உங்கள் படைப்பு உலகத் தர வீச்சையும் அடைய முடியாது.
அதேபோல சிறந்த படைப்பாளிகள் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களாக இருப்பதில்லை. சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் சிறந்த படைப்பாளிகளாக இருப்பதில்லை. இது இரண்டிலும் எனக்கு நல்ல அனுபவம் உள்ளதால், என் படைப்புகள் தரமானவையாகவும், சமூக நோக்குடனும் அமைந்துள்ளன.
இப்போது எழுதி வரும் படைப்புகள் பற்றி...
தஸ்தயேவ்ஸ்கியின் "கரமúஸôவ் சகோதரர்கள்' என்ற புத்தகத்தை மொழிபெயர்த்து வருகிறேன். இன்னும் மூன்று மாதங்களில் இப்பணி முடிந்துவிடும். புத்தகமாக வர மேலும் மூன்று மாதங்கள் பிடிக்கும். இதுதவிர, என் மனதில் நெருடலை, கோபத்தை ஏற்படும் விஷயங்கள், சமூகப் பிரச்னைகள், பாதிப்புகள் பற்றி படைப்பிலக்கியமாக அங்ககக் கவிதைகளை அவ்வப்போது எழுதி வருகிறேன்.
இனி எழுத விரும்பும் படைப்புகள்...?
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை ஃபிலிம் ஸ்கிரிப்டாக எழுத உள்ளேன். சிலப்பதிகாரத்தை இதுவரை எத்தனையோ பேர் பல கோணங்களில் வசனங்களாக எழுதி, திரைப்படங்களாக எடுத்துள்ளார்கள். அதிலிருந்து மாறுபட்டதாய் சிலப்பதிகாரத்தை சிலப்பதிகாரமாகவே பார்க்கும் விதமாய், இளங்கோவடிகளின் படைப்பை அந்தப் படைப்பாகவே கொடுக்கும் முயற்சியாக நவீன உத்திகளைக் கையாண்டு கொடுக்கவுள்ளேன்.
என் நீண்ட நாளைய நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க என் வாழ்க்கை வரலாற்றை எழுத உள்ளேன். அதில் என்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் சுவையாகவும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் வகையிலும் அமையும்.
கவிதை, நாடகம் என்று 80 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறீர்கள். இத்தனை இலக்கியங்களைப் படைக்க உங்களுக்குத் தூண்டுகோலாக இருந்தது எது?
அடிப்படையில் நான் ஒரு தமிழாசிரியன். அதனால் இயல்பாகவே இலக்கியங்களின் மீது எனக்கு ஒரு தாகம் இருந்தது. காலப்போக்கில் நான் அரசியலில் ஈடுபட்டேன். முதலில் காங்கிரஸ், சர்வோதயம் பின்னர் மா.பொ.சி.யின் தமிழரசு கழகத்தில் இணைந்திருந்திருந்தேன். பல்வேறு பிரச்னைகளுக்காக பலமுறை சிறை சென்றிருக்கிறேன். அப்படி பல்லாயிரக்கணக்கானோர் சிறை சென்றதன் காரணமாகத்தான் தமிழகத்துக்கு திருத்தணியும், கன்னியாகுமரியும் கிடைத்தது. இவையெல்லாம் என்னுள் ஏற்படுத்திய பாதிப்புகளை, சமூகம் குறித்த என் ஆழ்ந்த கண்ணோட்டத்தை கவிதையாகவும், இலக்கியங்களாகவும் படைத்தேன். அத்துடன் உலக இலக்கியத்தின் மீது தீராத காதல் எனக்குள் ஊறிக் கிடந்தது. நான் படித்த நல்ல இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்துத் தரும் எண்ணமும் வேரூன்றியது.
தற்போது சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளை மார்க்சீய கண்ணோட்டத்தில் பார்த்து விமர்சித்து வருகிறேன். உலகமயமாக்கம் என்ற பெயரில் இந்தியாவை ஒரு சந்தையாகவே நாம் மாற்றி விட்டோம். உலக சந்தைக்கென இந்தியாவின் கதவுகளைத் திறந்துவிட்டு நம் மக்களை நாம் நுகர்பொருள்களாக்கிவிட்டோம். போபால் விஷ வாயுத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய நிறுவனத்தின் மீது இன்னும் நாம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அதன் பாதிப்புகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது. உடல் ஊனமுற்ற, வாழ்க்கையையே தொலைத்த மக்களுக்கு நாம் இன்னும் உரிய நிவாரணம்கூட வழங்கவில்லை.
பி.டி. கத்தரிக்காயை உபயோகிக்கக் கூடாது; அதனால் நோய் பரவும். ஆந்திரத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இதுகுறித்தெல்லாம் நான் போகுமிடங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறேன். என் கவிதைகளில் இதுபோன்ற சமூக அவலங்களை எடுத்துக்காட்டுகிறேன்.
தமிழகத்தில் இலக்கியப் போக்கு எப்படியிருக்கிறது?
மிகச் சிறப்பாகவே இருக்கிறது. தரமான, நல்ல இலக்கியம் படைப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். அதேபோல, மற்ற எந்த மாநிலத்தைக் காட்டிலும் இங்கு இலக்கியவாதிகளுக்கிடையே நிறைய சண்டைகளும், சர்ச்சைகளும் உண்டு.
சமீபத்தில் வெளிவந்த படைப்புகளில் க.வெங்கடேசனின் "காவல் கோட்டம்' புத்தகம் மிகவும் அருமையான ஒன்று. 600 வருட மதுரை மாநகர வரலாற்றை ஆராய்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார் வெங்கடேசன். எஸ்.ராமகிருஷ்ணனின் "நெடுங்குருதி' என்ற நூலும் மிகச் சிறந்த ஒன்று. இதுபோல நிறைய நூல்களைச் சொல்லலாம்.
ஆனால் ஒன்று, மலையாள இலக்கியம் அளவுக்கு இங்கு இலக்கியங்கள் படைக்கப்படவில்லை என்பதே உண்மை. உலக இலக்கியங்கள் எல்லாம் அவை வெளிவந்ததும், உடனுக்குடன் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இன்றுவரை
வெளிவந்துள்ள உலக இலக்கியப் படைப்புகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துவிட்டன. தமிழகத்திலும் அந்த நிலை வரவேண்டும்.
சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டவுடன் வழக்கமாகக் கிளம்பும் சர்ச்சைகள், சலசலப்புகள் இந்த ஆண்டும் தமிழ் இலக்கிய உலகிலிருந்து மேலெழும்பியுள்ளன. உங்களுக்கு இந்த விருது கிடைத்துள்ளது பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய பிளாக்கில் எழுதியிருந்த விமர்சனத்தைப் படித்தீர்களா...?
இல்லை. அதுபற்றி எனக்குத் தெரியாது. என் நண்பர்கள் சிலர் ஜெயமோகன் எழுதியிருப்பது குறித்துத் தெரிவித்தார்கள். அதில் கேவலமாக என்னை அவமானப்படுத்தும் முறையில் ஜெயமோகன் எழுதியிருப்பதாகக் கூறினார்கள். ஜெயமோகன் மிகச் சிறந்த படைப்பாளி. அவர் படைத்த "கொற்றவை' படைப்பைக் கருத்தில் கொண்டு அவர் கூறிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் மறந்துவிடலாம். அதற்குமேல் நான் ஒன்றும்கூற விரும்பவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.