உலா: நீ குடும்ப விளக்கு; நீ மின்சார விளக்கு!
உலகத் தமிழர்கள் பெருமைப்படும் அளவுக்கு நடந்து முடிந்த தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலிருந்து சில துளிகள்! பிரமாண்டமான நந்தி பக்கவாட்டில் வீற்றிருக்க, கோயிலின் வடிவில் உருவாக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தை
உலகத் தமிழர்கள் பெருமைப்படும் அளவுக்கு நடந்து முடிந்த தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலிருந்து சில துளிகள்! பிரமாண்டமான நந்தி பக்கவாட்டில் வீற்றிருக்க, கோயிலின் வடிவில் உருவாக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தைப் பார்ப்பதற்குத்தான் மாநாட்டில் கூட்டம் அலைமோதியது.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பழந்தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டப் பொருட்கள், சிந்துவெளி, மொகஞ்சாதரோ, ஹரப்பா போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்து வடிவங்கள், பழங்கால ஓலைச் சுவடிகள், போர்க்கருவிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கமுடிந்தது. கண்காட்சியினுள் ஒரு திருப்பத்தில் நம்மை வரவேற்கிறது ஒரு குகை மனிதனின் சிலை. இந்தச் சிலையை, அருங்காட்சியகத்தை தத்ரூபமாக வடிவமைத்திருப்பவர் தோட்டா தரணி.
மொகஞ்சாதரோ,ஹரப்பா காலத்தைய கிணறு, பழந்தமிழர்கள் வாழ்க்கை முறை போன்றவற்றைப் பற்றிய மாதிரி வடிவங்கள் நம்மை அந்தக் காலத்திற்கே பயணப்பட வைக்கின்றன. நமது தமிழ் நாட்டிற்கான விலங்கு- மான், மலர்- செங்காந்தள், பறவை-புறா, மரம்-பனை என்பது போன்ற விளக்கங்களும் உள்ளன.
"தமிழால் முடியும்' என்னும் 200 கலை வார்த்தைகளுக்கு உரிய தமிழ் வார்த்தைகளை அடங்கிய பட்டியல், பொது, அலுவலகப் பயன்பாடுகள், இணையம், பிணையம், தரவுத் தளம் என்னும் தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டிருந்தன. "பென் டிரைவ்' என்னும் ஆங்கிலப் பதத்திற்கான தமிழ் வார்த்தை- பேனா சேமிப்பகம்! (பேனாக்களைச் சேமித்து வைக்கும் இடம் என்று அர்த்தமாகிவிடாதா?)
செம்மொழி மாநாட்டுக்காக நடத்தப்பட்ட ஆய்வரங்கங்களில் சில அரங்குகளில் ஆய்வுக் கட்டுரையைப் படிக்க வந்தவர்களோடு உடன் வந்தவர்களும், அந்த அரங்கு நடப்பதற்காக உதவி செய்து கொண்டிருந்தவர்களும், ஒளிப்பதிவு செய்பவர்களும் மட்டுமே இருந்தனர்.
தமிழ்நாட்டில் ஆவணப்படம், குறும்படத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து திருநாவுக்கரசின் ஆய்வுக் கட்டுரை அனைவரையும் வியக்கவைக்கும் விஷயங்களைக் கொண்டிருந்தன. ""1911-ம் ஆண்டில் விமானத்திலிருந்து தான் இறங்கியதைப் படமெடுத்தார் மருதப்ப மூப்பனார்.
இதுதான் முதல் ஆவணப்படம். 1913-ல் தமிழ்நாட்டில் முதல் திரையரங்கம் கெயிட்டி உருவானது. 1916-ல் "கீசக வதம்' என்னும் மெüனப்படத்தை நடராஜ முதலியார் எடுத்தார். இப்படித் தொடங்கி வளர்ந்த திரைப்படத்தின் இன்னொரு பரிமாணமாக ஆவணப்படங்கள் விளங்குகின்றன. இந்த ஆவணப்படங்கள், குறும்படங்கள் எடுப்பதற்கும் முன்பெல்லாம் ஃபிலிம்களே பயன்பட்டன.
டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டவுடன், ஆவணப்படங்களின் வளர்ச்சியில் பிரமிக்கத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஐந்து நிமிடம் ஆவணப்படம் எடுப்பதற்கு ஐம்பதாயிரம் செலவு செய்தது போய் வெறும் ஐந்தாயிரம் ரூபாயில் எடுக்கமுடியும் என்ற நிலைக்கு வந்தது. எவர் ஒருவரும் தயாரிப்பாளராகலாம், நடிகராகலாம் என்னும் நிலையை உருவாக்கியிருக்கின்றது இந்த டிஜிட்டல் யுகம்!'' என்றார்.
"திராவிட இயக்கத்தினரின் திரைப்படங்களில் பெண்களின் சித்திரிப்பு' என்னும் தலைப்பில் பேசிய பச்சையப்பன் கல்லூரியில் உதவிப் பேராசிரியரான பாரதி, ""அமைதியாய் அடக்கமாய் இருக்கும் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும். அடாவடித்தனமாய் பேசும் பெண்களுக்கு வாழ்க்கை கேள்விக் குறியாகும் என்னும் ரீதியிலேயே படங்கள் அதிகம் வந்திருக்கின்றன.
பெண்களைக் கொடுமைப்படுத்தும் ஆண்கள், தங்களின் பதிபக்தியால் மன்னிக்கப்படுவதாக நிறையப் படங்களை திராவிட இயக்கத்தினர் எடுத்திருக்கின்றனர். "தேவகி' என்னும் படத்தில்(வசனம்: கலைஞர்) தேவகி, லீலா என இரு பாத்திரங்கள். இதில் தேவகியின் பாத்திரம் அமைதியானது. லீலா தன்னுடைய உரிமைகளுக்காகப் பேசுபவர். ஆங்கிலம் பேசுவார். டென்னிஸ் ஆடுவார்.
படத்தின் இறுதிக் காட்சியில், தேவகியின் தந்தை தேவகியிடம் நீதானம்மா இந்த வீட்டுக்கு குடும்ப விளக்கு என்பார். "அப்படியென்றால் நான்?' என்பாள் லீலா. அதற்கு படத்தின் நாயகன், "நீ மின்சார விளக்கு' என்பார்!''
கோவை, எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியரான இருபத்தாறு வயதான இளைஞர் பிரபாகரன் "கணிதமும் தமிழும்' என்னும் தலைப்பில் கணிதத்தையும் தமிழையும் ஒப்புமைப்படுத்தி பேசியது ரசிக்கும்படி இருந்தது.
""2000 வருடத்திற்கு முன்பே சுழி என்னும் சொல்லில் பூஜ்ஜியத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர் தமிழர். சுழிக்கு "பாழ்' என்னும் பொருள் பரிபாடலில் இருக்கிறது. விகிதமுறு எண்கள், விகிதமுறா எண்கள் பற்றிய குறிப்புகளும், 1/320 ஒரு முந்திரி. 2/320 அரை முந்திரி... என்பது போன்ற அளவுகளும் "இளம் பூரணம்' என்னும் பரிபாடலுக்கான உரை நூலில் உள்ளன'' என்றார்.