தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சுறுசுறுப்புக்குப் பிராணவாயு சிகிச்சை!

என் மகள் நான்காம் வகுப்புப் படிக்கிறாள். மிகவும் சோம்பேறியாக இருக்கிறாள். பல் துலக்குவது, பால் குடிப்பது போன்றவற்றை நான் சொல்லிக் கொண்டே இருந்தால்தான் செய்கிறாள். காலை உணவை ஊட்டிவிட்டால்தான் சாப்பிடுக

எஸ். சுவாமிநாதன்

என் மகள் நான்காம் வகுப்புப் படிக்கிறாள். மிகவும் சோம்பேறியாக இருக்கிறாள். பல் துலக்குவது, பால் குடிப்பது போன்றவற்றை நான் சொல்லிக் கொண்டே இருந்தால்தான் செய்கிறாள். காலை உணவை ஊட்டிவிட்டால்தான் சாப்பிடுகிறாள். மெத்தனமாக இருக்கிறாள். விளையாட்டில் விருப்பம் உள்ள அவளுக்கு படிப்பில்  ஆர்வம் குறைவாக உள்ளது. சோம்பேறியைச் சுறுசுறுப்பாக்கும் ஆயுர்வேத மருந்துகள் சாப்பிடலாம்?

உமாதேவி, சிதம்பரம்.

தலையைத் தங்குமிடமாகக் கொண்ட பிராணன் என்ற வாயு தொண்டையிலும், மார்பிலும் உலவுகிறது. அறிவு, புலன்கள், இதயம், மனம், நாடிகள் இவற்றை நிலைநிறுத்தச் செய்கிறது. துப்புதல், தும்மல், ஏப்பம், உள்ளிழுக்கும் மூச்சு, வெளிவிடும் மூச்சு, உணவை உட்செலுத்துதல் ஆகியவை இதன் செயல்களாகும்.

உங்களுடைய மகள் விஷயத்தில் இந்த மூளையைச் சார்ந்த பிராண வாயுவின் செயல்திறனில் தொய்வு ஏற்பட்டுள்ளதையே அவளுடைய அன்றாட நடவடிக்கைகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

பிராண வாயுவைச் சுறுசுறுப்படையச் செய்யும் பிராணாயாமம், சிரசாசனம் எனும் தலையைக் கீழே வைத்து கால்களை மேலே உயர்த்தி நேராக வைக்கும் யோகாசனப் பயிற்சி போன்றவை மிகவும் சிறந்தவை. இவற்றை நன்கு கற்று, தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களிடமிருந்து மட்டுமே கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பிடிச் சோற்றுடன் மருந்தைக் கலந்து உண்பது "ஸ்க்ராஸம்' என்ற முறையாகும். "க்ராஸôந்தரம்' என்பது ஒரு பிடிச் சோற்றுக்கும், மற்றொரு பிடிச் சோற்றுக்கும் நடுவில் மருந்து சாப்பிடும் முறை. இந்த இருமுறைகளும், பிராண வாயுவின் கோளாறினால் ஏற்பட்ட நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுர்வேத முறையாகும்.

குழந்தைக்குக் காலையில் சூடான சாதத்தில் சாரஸ்வத கிருதம் எனும் ஆயுர்வேத மருந்தைப் பருப்புடன் 4-5 துளிகள் கலந்து, சாதத்துடன் பிசைந்து தெளிவான தக்காளி ரசத்துடன் சேர்த்து, தொடர்ந்து சாப்பிடக் கொடுத்து வரவும்.

இரவில் சாரஸ்வத சூரணத்தைக் கால் ஸ்பூன் (1.25 கிராம்) அளவில் எடுத்து அரை ஸ்பூன் பிராம்மீகிருதம் எனும் நெய் மருந்துடன் குழைத்து ஒவ்வொரு சாத உருளைக்கும் நடுவே நாக்கில் தடவி விடவும். வியத்தகு மாற்றங்களைத் தரும் இம்மருந்துகளைக் குழந்தை வளர, வளர சிறிய அளவில் கூட்டிக் கொடுத்துக் கொண்டே வரலாம்.

மூளைக்கு விரைவாக மருந்தைக் கொண்டு செல்லும் இன்னொரு வழி, மூக்கின் வழியாக மருந்தைச் செலுத்துவதுதான். மூக்கினுள்ளே விடும் மருந்து, மூளையினுள்ளே அமைந்துள்ள நரம்பு மண்டலங்களையும், அங்கிருந்து உற்பத்தியாகும் கட்டளைகளை உடனடியாக உடலில் தேவையான பகுதிக்குக் கொண்டு செல்லும் ஆற்றலையும் துரிதப்படுத்துகிறது. ஏழு வயது நிறையும் வரை குழந்தைகளுக்கு மூக்கில் மருந்துவிடக் கூடாது.

அதன் பிறகு அணு தைலம் எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலத்தை ஒன்றிரண்டு சொட்டு மூக்கினுள்ளே விடும் பயிற்சியை, காலையில் பல் துலக்கிய பிறகு, மெதுவாகப் பழகும் வகையில் தொடங்கலாம்.

பிராண வாயுவைத் தூண்டி சுறுசுறுப்படையச் செய்யும் மற்றொரு வழி, தலையில் சாதாரண தேங்காய் எண்ணெய்யை விட ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய பிராம்மீ தைலத்தைத் தலையில் தடவுவதுதான். இந்த மூலிகைத் தைலத்தைத் தடவி, தலையை வாரிவிட்டால் போதுமானது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் தலைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டவும் செய்யலாம். ஆண் குழந்தைகள் புதன், சனிக்கிழமை தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.

நீங்கள் உணவை ஊட்டிவிடும் பழக்கத்தை, அவளுடன் படிக்கும் மற்ற பிள்ளைகள் பார்க்க நேர்ந்தால், சில சமயம் அவர்கள் இவளைக் கேலி செய்யலாம். அதன் மூலம் அவளுக்கு ரோஷம் ஏற்பட்டுத் தானாகவே சாப்பிடலாம். சில சமயம் இதுபோன்ற சிறு அதிர்ச்சி வைத்தியம் கூட நன்மையில் முடிய வாய்ப்பு இருக்கிறது.

அறை முழுவதையும் இருட்டாக்கி, சற்று தூரத்தில் மெழுகுவர்த்தியை ஏற்றி அதிலுள்ள தீபத்தை மட்டும் சிறிது நேரம் பார்த்துப் பிறகு, கண்களை மூடி, அந்தத் தீபத்தைப் புருவ மத்தியில் தியானிக்கும் பயிற்சியின் மூலமும் சில குழந்தைகள் சுறுசுறுப்படைந்து, பரீட்சையிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கியுள்ள செய்திகள் உண்டு.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT