வளர்ப்பு: சில தேவதைகள்...சில கோமாளிகள்!
ரத்த அழுத்தம், வயதானவர்களைத் தாக்கும் அல்ஸைமர் நோய், குழந்தைகளைத் தாக்கும் இயல்புக்கு மீறிய ஹைப்பர் -ஆக்டிவிடி... எனப் பலதரப்பட்ட நோய்களின் தன்மைகளையும் படிப்படியாகக் குறைப்பதில் வீட்டில் வளர்க்கப்படு
ரத்த அழுத்தம், வயதானவர்களைத் தாக்கும் அல்ஸைமர் நோய், குழந்தைகளைத் தாக்கும் இயல்புக்கு மீறிய ஹைப்பர் -ஆக்டிவிடி...
எனப் பலதரப்பட்ட நோய்களின் தன்மைகளையும் படிப்படியாகக் குறைப்பதில் வீட்டில் வளர்க்கப்படும் மீன்களுக்குப் பெரும் பங்கு உண்டு என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள். நீரில் நீந்தி விளையாடும் அழகழகான மீன்களைப் பார்க்கும் போது, மனிதனின் மனதிற்கு, தியானம் செய்யும் போது கிடைக்கும் அமைதி கிடைக்கின்றது.
"பெரும்பாலான நகரங்களின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்குத் தடை இருப்பதால், அந்த இடத்தை வண்ண மீன்களின் வளர்ப்பே ஈடு செய்கின்றன. வண்ண மீன் வளர்ப்பு, பொழுதுபோக்கு என்னும் நிலையிலிருந்து வருவாயை ஈட்டித்தரும் தொழிலாகவும் மாறிஉள்ளது'' என்கிறார் வண்ணமீன் வளர்ப்பில் ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டு, வெற்றிகண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் தி.த.அஜீத்குமார். அவர் நம்மிடம், கடலில் வாழும் வண்ண மீன்கள் குறித்தும், அவற்றை வளர்க்கும் முறைகள் குறித்தும் பேசியதிலிருந்து...
"நன் னீர் வண்ண மீன் களை விட, கடல் நீர் வண்ண மீன்கள் கவர்ச்சியாய் பல வண்ணங்களில் கிடைப்பதினால் மக்கள் இம்மீன்களை விரும்புகின்றனர். இதனால் இந்த மீன்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகளின் உதவியோடு, பல்கலைக்கழகங்கள் மற்றும் கடல் ஆராய்ச்சி மையங்கள் கடல் வண்ண மீன் உற்பத்தியில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றன. மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு உபகரணங்களின் உதவியோடு கடல் வண்ண மீன்களை வளர்ப்பது இந்நாளில் மிக எளிதாகிவிட்டது. செயற்கை உப்பின் உதவியால் கடல்நீர் இல்லாமல் சாதாரண நீரிலும் கடல் மீன்களை வளர்க்கலாம்.
உலகில் ஏறத்தாழ 24,618 வகையான துடுப்புடைய மீன் (FinFish) இனங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் சுமார் 400 வகையான வண்ணமீன் இனங்கள் இந்தியக் கடலில் உள்ளன. இவற்றில் முக்கியமானவையாக க்ளெüன் (Clown), டேம்செல் (Damsel),
தேவதை மீன்கள் (Angel fish) மற்றும் ராஸ் (Wrasse) இன மீன்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றன.
கடலில் காணப்படும் அனைத்து வகை வண்ண மீன்களையும் உற்பத்தி செய்வது சிரமம். காரணம் வண்ண மீன்களின் இனப்பெருக்கம், இனத்திற்கு இனம் வேறுபடுகிறது. சிலவகையான மீன்கள் முட்டைகளை ஏதாவது ஒரு கடினமான பொருளின் மீது ஒட்டவைத்து அடைகாத்து குஞ்சு பொறிக்கச் செய்கின்றன. க்ளெüன் இன மீன்கள் மற்றும் டேம்செல் மீன்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும், மற்ற சில மீன்கள் நீரின் மேல் பகுதியில் முட்டைகளை இட்டுவிட்டு சென்றுவிடுகின்றன. இம்மீன்களின் முட்டைகள் அனைத்தும் கருவுறாமல் பல நேரங்களில் வீணடிக்கப்படுகின்றன. தேவதை இன மீன்களில், பெண் மீன்கள் ஈன்ற முட்டைகளை, ஆண் மீன்கள் அதன் வாயில் வைத்து அடைகாத்து சுமார் 10-15 தினங்களுக்குப் பிறகு குஞ்சுகளை வெளிவிடுகின்றன. இந்தக் காலகட்டத்தில் ஆண்மீன்கள் எந்த உணவையும் உட்கொள்வதில்லை. கடல்குதிரை வகை மீன்களில் பெண்மீன்கள், ஆண் மீன்களின் வயிற்று பகுதியில் உள்ள ஒரு பையில் முட்டைகளை இடுகின்றன. இவை சுமார் 13-15 தினங்களுக்கு பிறகு குஞ்சுகளாய் வருகின்றன.
கடலில் பவளப்பாறை பகுதிகளில் வாழும் இவ்வண்ண மீன்களின் இருப்பு நாள்தோறும் குறைந்து வருகிறது. முறையற்ற மீன்பிடித்தல், சோடியம் சயனைடு போன்ற நச்சு பொருள்களை உபயோகித்தல், வெப்பநிலை மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் வண்ணமீன்கள் இருப்பு குறைந்து வருகிறது. மக்களால் அதிகம் விரும்பப்படும் குறிப்பிட்ட சில வண்ணமீன் இனங்கள் மட்டும் அதிகம் பிடித்தெடுக்கப்படுவதால் அம்மீனினம் அழியும் ஆபத்து அதிகரித்துள்ளது. உதாரணமாக மருத்துவ குணம் கொண்ட கடல்குதிரை இன மீன்களை தொடர்ந்து கடல் பகுதியிலிருந்து பிடித்து ஏற்றுமதி செய்தமையால் அந்த உயிரினமே அழியும் நிலையில் உள்ளது. எனவே இவற்றை பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
வண்ண மீன்களில் பெண் மீன்களைவிட ஆண் மீன்கள் பார்ப்பதற்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் காணப்படுவதாலும், உருவில் சிறியனவாகவும் இருப்பதால் ஆண் மீன்களை அதிகமாக பிடிக்கின்றனர். இதனால் இனப்பெருக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு கடலில் மீன் இருப்பு குறைகிறது. இத்தகைய நிகழ்வுகளை தடுக்கவும் கடலோர மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க கடல் வண்ண மீன்களை பொறிப்பகங்களில் உற்பத்தி செய்வது அவசியமாகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வண்ணமீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது, உலக வண்ணமீன் வணிக தரவரிசை பட்டியலில், இந்தியாவின் பங்கினை அதிகரித்திடச் செய்திடலாம்.
கடல் வண்ண மீன்களில் க்ளௌன் இன மீன்கள் வெளித்தோற்ற அமைப்பினால் "கோமாளி மீன்கள்' என்று அழைக்கப்படுகின்றன. கருப்பு, ஆரஞ்சு மற்றும் வெள்ளை போன்ற வண்ணங்களில் மனதை மயக்கும் வகையிலும், சிறிய உருவிலும் இருப்பதால் இம்மீன்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு காணப்படுகிறது. மேலும் அதிக தாங்குதிறன் மற்றும் கடல்தாமரையுடன் சேர்ந்து வாழும் தன்மையினாலும் இவை அதிக கவனத்தைக் கவர்ந்திருக்கின்றன. எந்த ஒரு மீனினத்திலும் இல்லாத மற்றொரு தனித்தன்மை இந்த க்ளௌன் மீன்களிடம் காணப்படுகிறது. அதாவது ஆண்மீன், பெண் மீனாக மாறுகின்ற தன்மை இம்மீன்களின் சிறப்பம்சமாகும். எனவே இம்மீன்களை உற்பத்தி செய்வோர் ஆண், பெண் மீனென தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை, இந்த இரு மீன்களையும் ஒரு தொட்டியில் வைத்து பராமரிக்கும்போது அவற்றில் அதிக ஆதிக்கத் தன்மை கொண்ட மீன் பெண் மீனாகவும், மற்றொரு மீன் ஆண் மீனாகவும் மாறிவிடுகின்றன.
பொறிப்பகங்களில் க்ளௌன் இன மீன்களை உற்பத்தி செய்ய விரும்புவோர், ஒரு ஜோடி மீன்களை 750-1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில், சுத்திகரிக்கப்பட்ட கடல்நீரினை பயன்படுத்தி பராமரிக்க வேண்டும். இம்மீன்களுக்கு உணவாக வேகவைத்த சிப்பி, மட்டி, ஆளி மற்றும் கணவாய் போன்றவைகளின் மாமிசத்தை வழங்கலாம். க்ளௌன் மீன்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை முட்டையிடும் திறன் கொண்டவை. இம்முட்டையிலிருந்து 6-8 நாட்களுக்குள் மீன்குஞ்சுகள் வெளிவருகின்றன. இம்மீன் குஞ்சுகளுக்கு நுண்தாவர மிதவை (Microalgae) மற்றும் விலங்கு நுண் உயிரினங்கள் (Micro zoopl ankton) உண வாக கொடுத்து வளர்க்கப்படுகின்றன. 15 நாட்களுக்கு பிறகு உருமாற்றம் அடைந்த இம்மீன் குஞ்சுகளுக்கு "ஆர்ட்டீமியா' (Artemia) என்ற உயிர் உணவு வழங்கலாம். இவ்வாறு பாதுகாக்கப்படும் குஞ்சுகள் 3 மாதங்கள் வளர்க்கப்பட்ட நிலையில் ரூ.100 முதல் 150 வரை விற்கப்படுகின்றன. ரூ.5 ஆயிரம் முதலீட்டில் கடலோர மக்கள் வீட்டின் பின்புறம் பொறிப்பகங்களை (Bakyard hat chery) நிறுவி வண் ணமீன் வளர்ப்பு தொழிலிலில் ஈடுபட்டால் பாரமிரிப்பு செலவு தவிர மாதம் ஒன்றுக்கு ரூ.3ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை லாபம் பெறலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடலோர பகுதி மட்டுமின்றி கழிமுக நீர்ப்பகுதி மற்றும் சதுப்புநிலப்பகுதி மக்களும் பயனடையும் விதமாக அண்ணாமலைப் பல்கலை கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் உள்ள கடல் அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் பயிற்சி பண்ணையில் உலகில் முதன்முதலாக கடல் வண்ணமீன்களை கழிமுகநீரில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை கண்டறிந்து வெள்ளாற்றின் நீரைப் பயன்படுத்த நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
இத்தொழில்நுட்பம் மீனவர்களுக்கு மாற்று தொழிலாகவும், சுயதொழில் புரியும் பெண்களுக்கு சிறுதொவிலாகவும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பாகவும் அமையும் தொழிலாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இம்மையம் மக்களுக்கு இத்தொழில்நுட்பத்தை பல பயிற்சிகள் மூலம் அளித்து வருகின்றன.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கேரள அரசு மீன்வளத்துறையின் ஒர் அங்கமான கேரளா அக்குவாவெஞ்சர் இன்டர்நேஷனல் லிமிடெட் (KAVIL) என்ற நிறுவனத்தோடு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் கடல் வண்ணமீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. எனவே இன்றைய சூழலில் கடல் வண்ணமீன்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி என்பது சாதனையாக மாறிவிட்ட சவாலாகும்.