முரன்சுவை- 44: பறக்கும்போதே..!
சென்ற நூற்றாண்டில் பக்தி மார்க்கத்தில் வாழ்ந்த மிகப் பெரிய மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர் கிருபானந்த வாரியார். நல்ல பருத்த உடல், சிவந்த மேனி, மார்பில் ருத்ராட்ச மாலை, நெற்றி நிறைய எப்போதும் திருநீறு இ
தினமணி கதிர்முரன்சுவை- 44: பறக்கும்போதே..!
சென்ற நூற்றாண்டில் பக்தி மார்க்கத்தில் வாழ்ந்த மிகப் பெரிய மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர் கிருபானந்த வாரியார். நல்ல பருத்த உடல், சிவந்த மேனி, மார்பில் ருத்ராட்ச மாலை, நெற்றி நிறைய எப்போதும் திருநீறு இ
சென்ற நூற்றாண்டில் பக்தி மார்க்கத்தில் வாழ்ந்த மிகப் பெரிய மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர் கிருபானந்த வாரியார். நல்ல பருத்த உடல், சிவந்த மேனி, மார்பில் ருத்ராட்ச மாலை, நெற்றி நிறைய எப்போதும் திருநீறு இதுதான் வாரியாரின் அடையாளங்கள்.
திரைப்படங்களிலும் நாடகங்களிலும் ஆன்மிகச் சொற்பொழிவாற்றுபவர்களாக நடிப்பவர்கள் அனைவருக்கும் இவரே குருவாகத் திகழ்ந்தார். இவர் வாய் எப்பொழுதும் முருகனையே துதித்துக் கொண்டிருக்கும். இவர் ஒரு தமிழ்க் கடல், இவரது பேச்சில் நகைச்சுவை கலந்திருக்கும்.
சிவ பூஜையை நாள் தவறாமல் செய்து வந்தவர். இவரது சொற்பொழிவைக் கேட்டால் ஒரு நாடகம், அல்லது ஒரு திரைப்படம் பார்க்கின்ற உணர்வு ஏற்படும். கதைகளில் வரும் அனைத்து நுணுக்கங்களையும் இவர் ஒருவரே செய்வார். எல்லாக் கதாபாத்திரங்களையும் இவரே நடித்துக் காட்டுவார்.
எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரில் உள்ள அனைத்து விஷயங்களையும் சொற்பொழிவின்போது நகைச்சுவையுடன் கலந்து கொடுப்பார். சொற்பொழிவு நடத்தும் அன்று காலை முதல் மாலை வரை வெளிவந்த அனைத்து பத்திரிகை செய்திகளையும் சொற்பொழிவுகளில் வரும் காட்சிகளுக்கு நடுவே சரியான இடத்தில் நகைச்சுவையாகச் சொல்லுவார்.
அன்றைக்கு ஆளுகின்றவர்களையும், அன்றைய அரசியல் சூழ்நிலைகளையும் நாகரிகமாகச் சாடுவார். அதைக் கேட்கும் மக்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள் மற்றும் எல்லாத்துறையைச் சேர்ந்தவர்களின் நிறை, குறைகளையும் விமர்சனம் செய்வார். கேட்கின்ற மக்கள் யாரும் கோபப்படமாட்டார்கள் முடிந்தவரை மனம் திருந்துவார்கள். வாரியார் அவர்களின் சொற்பொழிவு என்றால் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும். எல்லா வயதினரும், எல்லாதரப்பினரும், கூட்டத்தில் இருப்பார்கள். வாரியார் எவ்வளவு நேரம் பேசினாலும், எவ்வளவு சத்தம் போட்டு கத்தினாலும் இருமமாட்டார், குரல் வளம் கடைசி வரை மாறாமல் இருக்கும்.
இத்தகைய பெருமைகளைக் கொண்ட வாரியார் வேலூருக்கும் காட்பாடிக்குமிடையில் பாலாற்றங்கரையில் உள்ள சிறிய ஊரான காங்கேயநல்லூரில் 1906 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். தந்தை பெயர் மல்லையா, தாயாரின் பெயர் கனகவல்லி. இளம் வயதிலேயே வெண்பா இயற்றக்கூடிய திறன் இவரிடம் இருந்தது. வீணை வாசிப்பதில் வாரியார் கெட்டிக்காரர்.
தர்ம குணம் படைத்த இவரது தாயார் சின்னக் கதைகளைச் சொல்லி வாரியாரின் மனதைப் பண்படவைத்தார். வாரியாரின் தந்தையார் மல்லையாவும் இசைச் சொற்பொழிவு செய்து வந்தார். தமிழகம் மட்டுமல்லாது உலகத்திலுள்ள பல நாடுகளுக்கும் சென்று உபந்யாசம் செய்து வந்தார் வாரியார்.
வாரியாரின் சொற்பொழிவைக் கேட்ட திருவிதாங்கூர் மகாராஜா தன் அரண்மனைக்கு வாரியாரை அழைத்து மரியாதைகள் செய்து பாராட்டினார். வடமொழி ஸ்லோகங்களைச் சொல்லி எப்படி சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் உபந்யாசத்தில் பெயர் பெற்று விளங்கினாரோ அதுபோன்று தமிழ்ப் பாடல்களையும் திருப்புகழையும் மேற்கோள்காட்டி பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் தமிழில் உபந்யாசங்கள் செய்த பெருமை வாரியாருக்கு மட்டுமே உண்டு.
திருப்புகழுக்கு உரையெழுதி உதவிட வேண்டுமென்று முருகபக்த அன்பர்கள் கேட்டுக் கொண்டார்கள். அன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 1936 ஆம் ஆண்டு வடலூர் வந்து திருப்புகழ் அமிர்தம் என்ற மாத வெளியீட்டைத் தொடங்கி அதில் "கைத்தல நிறைகனி' என்ற திருப்புகழுக்கு முதன்முதலாக உரையெழுதினார்.
1955-ம் ஆண்டு "திருப்புகழ் ஜோதி' என்னும் பட்டத்தைச் சிவானந்த சுவாமிகள் ரிஷிகேசத்தில் வாரியாருக்கு வழங்கினார். "காமகோடி பீடம் காஞ்சி சங்கராச்சாரியார் சரஸ்வதி கடாட்சாம்ருதம்' என்ற விருதையும் ஜீயர் ஸ்வாமிகள் (அஹோபிலமடம்) "ஷட்பதானந்தா' விருதையும் வழங்கினர். தமிழக அரசு "கலைமாமணி' விருதையும் தமிழிசை மன்றம் "இசைப் பேரறிஞர்' என்கிற பட்டத்தையும் வாரியாருக்கு வழங்கிச் சிறப்பித்தன. இதுபோன்ற பலவிருதுகள் வாரியாருக்குக் கிடைத்துள்ளன.
ஒருமுறை பகுத்தறிவாளர்கள் கூட்டத்தில் "செந்தமிழ்' என்னும் தலைப்பில் அரைமணி நேரம் பேசி சபையோரை எங்கும் அசையவிடாமல் செய்துவிட்டார் வாரியார். அதைக் கேட்ட பாரதிதாசன், ""வெறும் புராணக்கதைகளைச் சொல்பவருக்கு என்ன தெரியுமென்று எண்ணி ஏமாந்தேன். நுண்மாண் தமிழ்க்களஞ்சிய நூலறிஞர் என்பதை இப்போது கண்டு வியக்கிறேன்'' என்று கூறி வாரியாரைக்கட்டி அணைத்துக்கொண்டார்.
சென்ற நூற்றாண்டில் திராவிட இயக்கங்களும் பகுத்தறிவு இயக்கங்களும் கொடிகட்டிப் பறந்த காலத்தில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டு ஆன்மிகச் சொற்பொழிவுகளைச் செய்தவர் வாரியார். "இனிப் பிறவாமையைப் பெற வேண்டும்' என்று தனது வாழ்க்கைச் சரித்திரத்தின் கடைசி அத்தியாயத்தில் கண்ணீர் மல்க உருகியுள்ளார்.
நான் பறந்து கொண்டிருக்கும் போதே என் உயிர் பிரியவேண்டும் என்று அடிக்கடி கூறிவந்தார். அவருடைய விருப்பப்படியே விமானத்தில் வந்து கொண்டிருக்கும் போதே அவருடைய உயிர் பிரிந்தது. 1993-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி முருகனடி சேர்ந்தார்.
இவர் திருமணம் ஆனவர். ஆனால் குழந்தை இல்லை. துணைவன், தெய்வம், திருவருள் ஆகிய மூன்று திரைப்படங்களிலும் நிஜவாழ்க்கையில் சொற்பொழிவாற்றுகின்ற மாதிரியான கதாபாத்திரங்களிலேயே நடித்தார். ஆன்மிகவாதிகளுக்கு சினிமா பிடிக்காது. ஆனால் சினிமாவையும் ஆன்மிகத்துக்குப் பயன்படுத்தியவர் வாரியார்.
பெரியாரையும், பகுத்தறிவுவாதத்தையும் விமர்சித்தார் என்பதற்காக இவருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களையும், வசைமாரிகளையும் தொடர்ந்த அதே திராவிட இயக்க ஆட்சி இவருக்குக் "கலைமாமணி' விருது வழங்கிப் பாராட்டியது முரண்சுவை அல்லாமல் வேறென்ன?
(தொடரும்)